Wednesday, June 20, 2012

நான் என்பது நானா? (அதீதத்தில் கடைசிப்பக்கமாக வெளிவந்த கட்டுரை)

நான் என வார்த்தைக்கு வார்த்தை நம்மில் பலரும் சந்தர்ப்பம் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் சுயபுராணம் பாடிக் கொள்கிறோம். உண்மையில் இவ்வாறு நாம் பேசும் போதெல்லாம், நான் என்று நாம் நம்மைதான் குறிக்கிறோமா. இந்த நான் என்று நம்மைக் குறிப்பிடுகிறோமே… இந்த நான் சுட்டுவது எதனை நமது செயல்களையா அல்லது நமது குணநலன்களையா. அவ்வாறு நமது செயல்களையும் குணநலன்களையும் குறிப்பிடுவது தான் இந்த நான் என்றால், உண்மையில் இந்த நான் நாம் பிறக்கும் போதே நம்முடன் பிறந்ததா?

ஒரு குழந்தை பிறக்கிறது. அவ்வாறு குழந்தை பிறக்கையில் குழந்தைக்கு எந்தவிதமான புற அறிவும் கிடையாது. அவ்வாறு பிறந்த குழந்தை முதலில் அறிவது தன்னையா என்றால் அதுவும் அல்ல. சுற்றுப் புறங்களையே முதலில் உணர்கிறது. எப்படி?  தன் கண் திறந்து சுற்றுப் புறங்களை கவனிக்கிறது.  சுவாசத்தால், நறுமணங்களை நுகர்கிறது காதால் பிற ஒலிகளைக் கேட்கிறது. எப்போது சுயம் அல்லது நான் என்பது குழந்தையுள் பிறக்கிறது ?

“  ச்சே… எம் மவன் கிருஷ்ணன் மாதிரி அழகு எவன்டா இருக்கான்  இந்த வீட்ல ” அம்மா சொல்லும்போது தனது உருவத்தைப் பற்றிய ஒரு எண்ணம் படர்கிறது.
” எம் மவன் கிருஷ்ணன் மாதிரி  புத்திசாலி எவனுங்கிடையாது.  என்னா புத்திங்கற. ஒண்ணாவது படிக்கிறப்பவே, அஞ்சாப்பு புக்கெல்லாம் படிக்கிறான். அவ்ளோ புத்திசாலி ” அப்பா  சொல்லும் போது தன் அறிவைப் பற்றிய ஒரு எண்ணம் தனக்குள் பிறக்கிறது.
ஒரு குழந்தை தன் சுயத்தை அதன் நானை அது தானாக அறிகிறதா ? இல்லையே, தன் சுயம் என தன்னைச் சுற்றி வாழும் பிறர் தன்னைப் பற்றிச் சொல்லுவதைத் தானே நான் என்று தன்னை உருவகப்படுத்திக் கொள்கிறது.
எம் புருஷன் மாதிரி வருமா ?, எங்கப்பா மாதிரி வருமா, என் அண்ணன் மாதிரி வருமா? என் தம்பி மாதிரி வருமா? என இப்படியாக நம்முடைய சுயத்தை, பலர் நம்முள் நமக்கு ஊட்டுகிறார்கள். இந்த சுயத்தை நாம் தீனிப் போட்டு வளர்க்கிறோம்.
உண்மையில் நான் என்று தன்னைப் பற்றி ஒருவன் பேசிக் கொள்ளும் எதுவும் அவனைப்பற்றி அவனாக அறிந்தது இல்லை. மற்றவர்கள் அவனைப் பற்றி ஏற்படுத்திய பிம்பத்தை அவன் நம்பத் தொடங்கியதாலே வந்த உணர்வு வெளிப்பாடே. இப்படி இருக்க நான் என்று தற்பெருமை பேசிக் கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும் ஒருவனுக்கு?
இன்னும் கூட சிலருக்கு இந்த நான் என்பது பிறரால் நம்முள் ஏற்பட்ட கட்டமைப்பு என்பது சரிதானா என்ற சந்தேகம் இருக்கலாம். அவர்களுக்காக என் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இதோ. பள்ளிக் கல்வி முழுவதும் தமிழ்வழியில் படித்த நான் கல்லூரியில் ஆங்கில வழியில் படிக்க முடியாமல் பல தேர்வுகளில் தோல்வி அடைந்தேன். என்னுடைய கல்விதிறனின் இந்த மோசமான நிலையைப் பற்றி வீட்டிற்குத் தெரிவிக்க எனது தந்தையை கல்லூரி ஆசிரியை ஒருவர் கல்லூரிக்கு அழைத்திருந்தார். எனது தந்தையிடம் கல்லூரி ஆசிரியை உங்கள் மகன் இத்தனை பாடங்களில் தோல்வியைத் தழுவி இருக்கிறான். இவன் மேலும் படிப்பைத் தொடர்ந்து தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் கடினம் என்று என் முன்னாலேயே எனது தந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆசிரியரின் பேச்சை இடைமறித்த எனது தந்தை சொன்னார், எனது மகனின் அறிவுத் திறனைப் பற்றி எனக்குத் தெரியும். அவன் பனிரெண்டாம் வகுப்பில், அவன் படித்த பள்ளியில் மூன்றாவதாக வந்தவன். இந்த பாடங்களையும் வெற்றிகரமாக படித்து தேர்ச்சி பெறுவான் என்று என் மேல் நம்பிக்கையுடன் அந்த ஆசிரியையிடம் உறுதி கொடுத்தார். அன்று வரை ஆங்கில வழிக் கல்வி என்றால் பயந்திருந்த நான், எனது தந்தை என் மேல் வைத்திருந்த நம்பிக்கையின் பயனாய் கல்லூரியை முடிக்கும் பொழுது அனைத்துப் பாடங்களிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று வெளியேறினேன். இங்கு என்னால் ஆங்கில வழிக் கல்வியிலும் படிக்க இயலும், ஆங்கில வழிக் கல்வி எனக்கு இயலாத ஒன்றல்ல என்று என்னுள் உருவகப்படுத்தி நானும் ஆங்கிலவழி கல்லூரி படிப்பில் தேர்ச்சிப் பெற்றவன் என்ற அங்கீகாரத்தை வழங்கியது எனது தந்தை என் மீது வைத்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையே நான் பொறியாளன் என்று என்னைச் சொல்லிக் கொள்ள வைக்கிறது.
இப்படித்தான் நம்முள் பல நான் கள் உருவாகி இருக்கிறோம். நமது ஒவ்வொரு நானும் நம்முடைய சூழலே உருவாக்கி இருக்கிறது. சூழலால் தான் நான் கள் உருவாகிறோம் எனும் போது, ஏன் நாம் ஒரு நல்ல சூழலை நமது அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்து அவர்களையும் நான் என்று நானை கர்வமுடன் சொல்ல வைக்க முயற்சி செய்ய கூடாது?
ஒருத்தருக்கு வீட்டுல தினமும் சண்டை பொண்டாட்டி கூட. படுக்கை கூட தனித் தனியே தான். அவருக்கு எப்பவுமே “நான்” அப்படிங்கற கர்வம் உண்டுங்கறதை ரொம்ப கஸ்டப்பட்டு அவரோட பொண்டாட்டி உணர்த்திட்டாங்க. அவரும் திருந்திடறேன்னு திருந்திட்டார்.  அன்னைக்குன்னு பார்த்து அவரோட ஆஃபீஸ்ல தண்ணி பார்ட்டி. இவரும் திருந்துன சந்தோஷத்துல  நல்லா ஏத்திக்கிட்டு வீட்டுக்கு வந்தார். வந்து நேரா பொண்டாட்டி பெட்ரூம்ல போய் படுத்துக்கிட்டார். எல்லாம் முடிஞ்சு, போதைத் தெளிஞ்சதும் குற்ற உணர்வோட சொன்னார்
” கமலா,  போதைல நான் என்னையே மறந்து உன் கட்டில்ல உன் அனுமதி இல்லாம படுத்து என்ன என்னமோ  ஆயிடுச்சு. மன்னிச்சுக்கோ ” அப்படின்னாராம்.
” நீங்க வீடு மாறி வந்திட்டீங்க. உங்க வீடு பக்கத்து வீடு. அப்புறம் எம் பேரு கமலா இல்ல விமலா” அப்படின்னு சொன்னாங்களாம் அந்த வீட்டு அம்மணி.
அதாவது நான் அப்படிங்கறத ஒரேடியா விடவும் கூடாது. ஒரேடியா பிடிச்சுக்கவும் கூடாது.  குளிருக்கு நெருப்பு  கிட்ட அமர்ந்தா மாதிரி. ரொம்ப பக்கம்  போனா எரிக்கும்.  விலகிப் போனா குளிரும். இல்லைங்களா ?
எனவே  நான் என்பது நானா ? மீண்டும் சிந்திப்பீர். உண்மையில், “நான் என்பது நான் அல்ல, நாம் களின் வெளிப்பாடே நான்” என்று நீங்களும் உணர்ந்தால் உதவுவீர் உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு நான் என்ற நல்லதோர் கர்வத்தைப் பரிசாய் வழங்க…
அதீதத்தில் படிக்க சுட்டி : http://www.atheetham.com/?p=1092


No comments:

Post a Comment