Thursday, October 13, 2011

எழுதாத டைரிக் குறிப்புகள்

கையில் பிரம்புடன், கொடுத்து பத்து நாட்களாகியும், திருப்பித் தராத முன்னேற்ற அறிக்கையைக்(Progress Report) கேட்டவாறு வகுப்பாசிரியர்.

பிரம்பின் வடு தெரியாமல் இருக்கும் என்றெண்ணி, தலையில் இருந்த எண்ணெயைத் தடவி கை நீட்ட, பிரம்பின் வடு இப்பொழுது தான் அப்பட்டமாய்த் தெரிந்தது.

பிரம்பின் "சுளீர்" வலிக்கவில்லை, அடுத்த நாளுக்குள் முன்னேற்ற அறிக்கையில் தந்தையின் கையொப்பம் வாங்கி வராவிட்டால் வகுப்பில் அனுமதி இல்லை என்ற ஆசிரியரின் சொல் நெஞ்சைத் தொட்டதும்.

வீட்டில், என்ன சொல்ல? எப்படி ஆரம்பிக்க ? புரியவில்லை...

வீட்டிற்கு வந்தும் விளையாடப் பிடிக்கவில்லை. விளையாடப் பிடிக்கவில்லை என்பதை விட, அன்றைய இரவு நாடகத்தின் முதல் படலமே, விளையாட போகாமல் என்னை இருத்திக் கொண்டது என்று சொல்லலாம்.

நல்ல பிள்ளை போல புத்தகப் பையைத் திறந்து வைத்தாலும், பாடத்தில் மனம் இலயிக்காமல், பார்வை மட்டுமே இலயித்திருந்தது.

அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனைக்கு, சாவு மணி அடிப்பது போன்று அப்பாவின் காலடிக்கு ஸ்ருதி சேர்க்கும் அப்பாவின் செருப்புச் சத்தம்.

சைக்கிளை வெளியே நிறுத்திய அப்பா, எப்போதும் போல முகம் அலம்பி திருநீற்றை கை நிறைய எடுத்து பட்டையாக நெற்றியில் பூசிக் கொள்கிறார்.

புத்தகத்தில் அரை கண்களும், அப்பாவின் மேல் அரை கண்களுமாய் என் பார்வை அலைமோதுகிறது. மீண்டும் மனதை அரிக்கும் கேள்விகளாய், எப்படி ஆரம்பிப்பது, எங்கே ஆரம்பிப்பது, எப்பொழுது ஆரம்பிப்பது.

அப்பா என்றால் சாதாரணமாக நிற்கும் போது நடுங்கும் என் கால்கள், அன்று சப்பனங்காலிட்டு அமர்ந்திருந்தும் நடனம் ஆட ஆரம்பித்தது.

நேரம் எப்படி போனது என்று தெரியவில்லை. அப்பா வந்து இரண்டு மணிக்கும் மேலாக கரைந்திருக்கலாம்.

ஊர்க்கோடி மசூதியில் இருந்து வரும் தொழுகைச் சத்தமும், ஊரில் இரவு எட்டு மணிக்கு ஊதும் சங்குச் சத்தமும் ஒன்றாய்ச் சேர்ந்து கேட்க, அடுப்படியில் இருந்து வரும் அம்மாவின் "சாப்பிடலாம் வாங்க" என்ற குரல் என் காதுக்குள் கேட்காமலேயே போனது.

மெதுவாய் புத்தகப் பையிலிருந்து எடுத்து, நடுங்கும் கால்களுடன் அப்பாவிடம் முன்னேற்ற அறிக்கையை நீட்டினேன். பாதம் தரையில் நின்றாலும் தொடையின் நடுக்கம் எப்போது நான் கீழே விழுவேனோ என்று அஞ்சும்படி இருந்தது.

மெதுவாய் முன்னேற்ற அறிக்கையைப் பார்த்த அப்பா, ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் இருப்பதைக் கண்டு என்னை நோக்கி ஒரு பார்வை பார்த்தார்.

உண்மையில் எனது சப்தநாடிகளும் அப்பார்வையில் அடங்கிப் போனதாய் உணர்வு. இதுவரை என்னை அடித்திராத அப்பாவின் அடுத்த செயல் என்னவாய் இருக்குமோ என்ற பயம்.

உண்மையைச் சொல்லப் போனால், அப்பா இதுவரை என்னையும் சரி, என் அண்ணாக்களையும் சரி ஒருமுறை கூட அடித்ததில்லை. அப்பாவின் அடி எப்படி இருக்கும் என்று யாரும் பார்த்ததும் இல்லை. ஆனால் அம்மா ஒவ்வொரு முறை கோபத்தின் உச்சிக்குச் செல்லும் போதும், உன் அப்பாவிடம் சொல்கிறேன். அவர் அடிக்கும் அடியில் நீ சுவரோடு ஒட்டிக் கொள்ளப் போகிறாய். அப்பொழுது தான் உனக்கு புத்தி வரும் என்றுச் சொல்லுவார்கள். அம்மா உச்சஸ்தாயியில் இதை, ஒவ்வொரு முறை சொல்லும் போதும் யாருக்கும் சப்த நாடிகளும் அடங்கி விடும் என்பதே நிஜம்.

எனது அப்பாவின் பார்வை தந்த அனல் தகிப்பில், சிவபெருமான் நெற்றிக் கண்ணில் நெருப்பைக் கக்குவார் என்ற மொழி உண்மையாகத் தான் இருக்கும் என்று நம்பத் தொடங்கினேன் நான். கையொப்பம் கிடையாது என அறிக்கையை விட்டத்தில் விட்டெறிந்தார். முன்னேற்ற அறிக்கை எங்கு விழுந்தது என்று கூட பார்க்க முடியவில்லை. கண்களில் நீர் நிறைந்திருந்தது.

ஒரு நாளும், " எழுப்பாமல், தானாய் எழும்பி படிப்பதில்லை, எழுப்பினாலும் தூங்கி விழுந்துக் கொண்டே படித்தால் இப்படித்தான் ஆகும்" என்று அப்பா நிறுத்தாமல் பாடினார் வசைகானம்.

காதில் விழுந்தாலும் இதைப்பற்றி எதுவும் கேட்காதவாறு அம்மா, சமைத்தவற்றை பரிமாற எடுத்து வந்து வைக்க, எங்கோ விழுந்த முன்னேற்ற அறிக்கையைத் தேடிப் பிடித்து புத்தகப்பையில் பத்திரப்படுத்தினேன் நான்.

விழுங்க முடியாமல் சாப்பாட்டை மென்று விழுங்க, முதல் சாப்பாட்டோடு கை கழுவிக் கொண்டு எழுந்தேன்.

எல்லோரும் படுத்தாகி விட்டது. கண்களை இறுக்க மூடி, தூங்க பிரம்ம பிரயத்தனம் செய்தாலும் முடியவில்லை. ஆசிரியர் வகுப்பில் சொன்னதும், அப்பாவின் வசவுமே மனக்கண்ணில் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பா, இரண்டு நாட்கள் வெளியூருக்கு ஏதோ வேலை விஷயமாக, அடுத்த நாள் அதிகாலையிலேயே புறப்பட இருப்பதால் துணி மணி அடுக்கி வைக்க அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது.

ஐயோ, இதென்ன அடுத்த இடி... இரண்டு நாளா???

ஏதேதோ பல சிந்தனைகள். எப்பொழுது தூங்கினேன், நினைவில்லை. சட்டென விழிப்பு வந்தது. அப்பா குளித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. கண்களைத் துடைத்தவாறு புத்தகத்தை திறந்து வைத்தேன். இப்பொழுது உண்மையாகவே படித்தேன். படிப்பது போல் நடிக்கவும் செய்தேன். குளித்து வந்த அப்பா என்னைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

எப்பொழுதும் போல், குளித்து வந்ததும் இறைவனைப் பிரார்த்தித்து நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டார். வெளியூர் செல்ல அவசரமாக வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து கிளம்பத் தயாரானார்.

எங்கிருந்து வந்ததோ அந்த துணிச்சல். அசட்டுத் துணிச்சல். மீண்டும் முன்னேற்ற அறிக்கையை எடுத்துக் கொண்டு அப்பாவின் முன் வந்து மௌனமாக நின்றேன். அப்பாவும் எதுவும் பேசவில்லை. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சட்டென வாங்கி கையொப்பம் இட்டு, இனியாவது ஒழுங்காகப் படி என்றார் அமைதியாக.

அப்பாவின் கையொப்பமிட்ட முன்னேற்ற அறிக்கையை வாங்கிக் கொண்ட நான் சிலையாக நின்றேன். ஒரு புறம் கையொப்பம் வாங்கிவிட்ட மகிழ்ச்சி. மறுபுறம் எப்படியும் அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டுமே என்ற பயம்.

அடுத்து வந்த பொழுதுகள் யாவும் அந்தப் பொழுதைப் போல புலரவில்லை. எழுப்பாமல் எழும்பும் என்னையும் நான் பார்க்கவில்லை.

- எழுதாத டைரிக் குறிப்புகளிலிருந்து.

No comments:

Post a Comment