Wednesday, January 4, 2012

தந்தை சொல் மந்திரமா???

இந்த உலகத்தில் உள்ள உயிரினங்களிலேயே மனித இனம் தனிச்சிறப்பு வாய்ந்ததுங்க. இல்லையா பின்ன, மற்ற எல்லா உயிரினங்களிலும் தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு, தந்தைக்கும் பிள்ளைக்குமான உறவு எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான். ஆனால் இந்த மனித இனத்தில் தான் தாய், தந்தை பிள்ளை உறவைத் தாண்டி, தாத்தா, பாட்டி இப்படின்னு உறவுகள் என்றுமே தொடர்ந்துக்கிட்டு இருக்கும்.

உறவுன்னுச் சொன்ன உடனே தான் நினைவுக்கு வருதுங்க. நாம உறவுகளை உறவுகளா மட்டும் பார்க்காம ஒவ்வொரு உறவையும் எப்படிப் பார்க்கணும்னும் நம்ம முன்னோர்கள் சொல்லி வைச்சிருக்காங்க. என்ன தான் எல்லா உறவும் முக்கியம்னாலும் ஒரு குழந்தைக்கு தாயும் தந்தையும் எவ்வளவு முக்கியம்ன்றதை எவ்ளோ அழகா சொல்லி இருக்காங்க பாருங்க இந்த பாட்டுல,

“தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை….”

என்ன ஒரு அர்த்தம் பொதிந்த வரிகள் இல்லையா…

இந்தப் பாட்டுல ஒரு வரி இருக்கு பாருங்க, “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” அப்படின்னு இது எப்ப கேட்டாலும் எனக்கு நினைவுக்கு வர்ரவர் பரசுராமர் தாங்க. யாருடா இந்த பரசுராமர், எதுக்கு இவரு நினைப்பு இவனுக்கு வரணும்னு பார்க்குறீங்களா… சொல்றேன் கேளுங்க…

ஜமதக்னி முனிவருக்கும், இரேணுகை அம்மையாருக்கும் நான்காவதாக பிறந்து, கண்ணனின் பத்து அவதாரங்களில் ஒருவராக கருதப்படுபவர் தான் இந்த பரசுராமருங்க. இவர் ஏன் நினைவுக்கு வரணும்னு தானே கேட்கறீங்க, சொல்லுறேன்… பெத்த தாயை எந்த மகனாச்சும் வெட்டிக் கொல்வாங்களாங்க. ஆனா இந்த பரசுராமர் செஞ்சார். ஏன்? தன் அப்பா ஜமதக்னி முனிவர் சொன்னார்ன்ற ஒரே காரணத்துக்காக பரசுராமர் தன் தாயை வெட்டிக் கொன்றார். அப்படி என்ன தான் அந்த அம்மா பாவம் செஞ்சாங்கன்னு கேட்கறீங்களா…

இரேணுகை அம்மையார் கற்புநெறி தவறாது வாழ்ந்து வந்ததால், ஆற்று மணலில் குடம் செய்து அதில் தினமும் தன் கணவரான ஜமதக்னி முனிவரின் பூஜைக்குத் தேவையான கங்கை நீரை எடுத்து வரும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவர். இப்படி இருக்கையில் ஒரு நாள் இரேணுகை அம்மையார், கங்கையில் நீர் எடுத்து வரச் சென்றிருந்த போது, கங்கை ஆற்று நீரில் தெரிந்த கந்தர்வனின் பிம்பம் ஒன்றைப் பார்த்து இப்படி ஒரு அழகிய ஆண்மகனா என மனம் சஞ்சலப்பட்டு விட்டாராம்.

அதனால் மண்குடம் உடைந்து விட, இரேணுகை அம்மையாரால் அதன்பின் எத்தனை முறை முயற்சி செய்து பார்த்தும் ஆற்று மணலால், ஒரு குடத்தை உருவாக்க முடியவில்லையாம். இரேணுகை நீர் முகர்ந்து வரச் சென்று நெடுநேரமாகியும் வராத காரணத்தைத் தன் தவவலிமையால் கண்டு கொண்ட ஜமதக்னி முனிவர் தன் மகன்களை ஒவ்வொருவராய் கூப்பிட்டு அவர்கள் தாயைக் கொல்லச் சொல்ல, ஜமதக்னியின் முதல் மூன்று புதல்வர்களும், தாயைக் கொல்ல மாட்டோம் எனச் சொல்லி மறுத்து விட்டு தந்தையின் சாபத்திற்கு ஆளான சமயத்தில், பரசுராமர் தன் தந்தை கட்டளை ஏற்று தாயைக் கொலைச் செய்தாராம். தன் சொல்லைக் கேட்டு நடந்த பரசுராமனைத் தழுவி மகிழ்ந்த ஜமதக்னி முனிவர், பரசுராமரிடம், என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, பரசுராமர் தன் தாயும் தமையன்களும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாராம்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை அப்படின்னு என்ன தான் நம்ம முன்னோர்கள் சொல்லி வைத்தாலும், இனியவை நாற்பது என்ன சொல்லுது தெரியுங்களா…

தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல்,
கொண்டு அடையான் ஆகல் இனிது

அதாவது, சொல்லுவது தந்தையே ஆனாலும், தான் என்னும் அகந்தை கொண்டு, பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் செயலைச் சொன்னால் அதனைச் செய்யாதிருத்தல் தான் நல்லதுன்னு சொல்லுதுங்க…

இப்படித்தான், நம்ம ஊருல ஒரு அப்பாவும் பையனும், ஐஸ்கிரீம் கடைக்குப் போனாங்களாம். அந்த அப்பாவுக்கு, கடைக்குப் போன பிறகு தான் தெரிஞ்சிருக்கு பணப்பையை வீட்டுல வைச்சிட்டு வந்துட்டது. சரினு பையனை வீட்டுக்கு அனுப்பி பணத்தை எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கார். பையனோ என்னைய விட்டுட்டு நீங்க சாப்டுட்டீங்கன்னா, நான் போக மாட்டேன் அப்படின்னு அடம் பிடிச்சானாம். அப்பாவோ, நீ வர்ர வரைக்கும் சாப்பிட மாட்டேன்டானு சத்தியம் செய்து மகனை வீட்டுக்கு அனுப்பி வைச்சாராம்.

போன பையன் ரொம்ப நேரமாகியும் வராம போக, கையில் இருந்த ஐஸ் உருகுதேனு வாய் வைக்கப் போனாராம் அப்பா. அவ்வளவு நேரமும் கடை வாசலிலேயே மறைஞ்சுக்கினு அப்பாவை கவனிச்சுட்டு இருந்த பையன், பார்த்தீங்களா.! இப்படி ஏமாத்துவீங்கன்னு தெரிஞ்சு தான் நான் கடை வாசலிலேயே மறைஞ்சு நின்னு பார்த்துட்டு இருந்தேன்னு சொன்னானாம்…

இது எப்படி இருக்குங்க...

No comments:

Post a Comment