Saturday, January 14, 2012

பொங்கல் - என் அனுபவம்

அதீதம் வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்... இந்த பொங்கல் திருநாளில் நானும் உங்களுடன் சற்று எனது பள்ளிக்கால பொங்கல் நாளைத் திரும்பிப் பார்க்கப் போகிறேன்... இன்றைய தலைமுறை நான் அனுபவித்த பொங்கல் நன்னாள் மகிழ்ச்சியை அனுபவிக்கிறதா??? விடை தேட சற்று பின்னோக்கி பயணிப்போமா...

பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது விடுமுறை தான்... ஒரு நாளா, இரண்டு நாளா, நான்கு நாட்கள் விடுமுறை ஆயிற்றே... முதல் நாள் போகி... எல்லோரும் சொல்வார்கள், பழையன கழிதலும், புதியன புகுதலும் போகி, அதனால் பழையவற்றை எரிக்க வேண்டும் என்று... எனக்குத் தெரிந்து எங்கள் ஊரில் பழையனவற்றை எல்லாம் குப்பைக் கொட்டும் இடங்களிலேயே போகி அன்றும் கொட்டுவார்கள்... எதனையும் எரிக்க மாட்டார்கள்...


மேலும் இந்த போகி எனக்கு பிடிக்கவே பிடிக்காது... காரணம் என்ன தெரியுமா, பொங்கல் தினத்தன்றும், மாட்டுப் பொங்கல் தினத்தன்றும் சமைப்பதற்குத் தேவையான அவரைபருப்பிற்கு அவரைக்காய் உரிக்கும் வேலை இருக்கும்... அதிலும் எங்கள் அண்ணன் தம்பி மூவருக்கும் அம்மா, ஒவ்வொருவரும் எவ்வளவு அவரைக்காய்கள் உரிக்க வேண்டும் என்று பங்கு பிரித்து தருவார்கள்... இத்தனைக்கும் எனது பங்கு குறைவாகத் தான் இருக்கும்... ஆனாலும் என்னால் சீக்கிரம் உரிக்கவே முடியாது... பிறகு என்ன, அண்ணன் ஏமாறும் பொது அவனது பங்கில் என்னுடையதைச் சேர்த்து விட்டு வம்பு வளர்க்க வேண்டியது தான்... சண்டை போடுகிறார்களே என்று அம்மா வந்து இருவரையும் சமாதானம் செய்வித்து விட்டு, தான் உரிப்பதற்காக எனது பங்கில் சிறிது எடுத்துக் கொண்டும் செல்வார்கள்...


போகி அன்று இரவு, தெருவே களை கட்டும்... அனைத்து வீட்டிலிருந்தும் சிறியவர்கள் பெரியவர்கள் எனத் தங்கள் வீட்டின் முன்புறத்தை அழகாக்க, சாணம் தெளித்து கோலப்பொடியுடன் கூடிவிடுவோம்... ஒவ்வொரு வீட்டின் வாசலும் பெரியதாக இருக்கும்... அதுவும் எங்கள் வீட்டின் வாசல் நீளத்திற்கு கோலம் வரைய, இரண்டு மணி நேரமாவது குறைந்தது பிடிக்கும் அம்மாவிற்கு... அம்மா வரையும் கோலத்திற்கு, நானும் எனது அண்ணன்களும் இருபுறமும் கரும்பு வரைவோம்... அதுதான் எங்களது வேலை... பிந்தைய பள்ளிப் பருவத்தில், அம்மா கோலம் வரையத் துணையாக நிற்பது போல பாசாங்கு செய்து கொண்டு, தெருவை கண்களால் வட்டமடித்துக் கொண்டிருந்தோம்... ஹ்ம்ம்...


பொங்கலன்று, சூரியனுக்கு பொங்கல் வைத்து படைத்து பின் சாப்பிட்டு முடித்தால் இன்னொரு பிரச்சினை தலைவிரிக்கும்... அது, மாட்டுப் பொங்கலன்று சமைப்பதற்கு, ஊற வைத்திருக்கும் அவரைப் பருப்பின் தோலை பிதுக்கி விதையை மட்டும் எடுக்க வேண்டிய வேலை... மாட்டு பொங்கலன்று, பிதுக்கிய அவரைப்பருப்பு சாம்பாரும், பூசணிக்காயும் சிறப்பு என்பதால் இதனைத் தவிர்க்கவே முடியாது... பொங்கல் அன்று இரவும் கோலம் போடுவது கொண்டாட்டமாய் நடக்கும்...


மாட்டுப் பொங்கல், விடியும் பொழுதே வேலையுடன் தான் விடியும்... என்ன பெரிய வேலை? என்கிறீர்களா... மாடுகளைக் குளிப்பாட்டுவது தான்... காலையில் எழுந்ததும், மாடுகளைத் தேய்த்து குளிப்பாட்ட படும் பாடு இருக்கிறதே அப்பப்பா, அழுகையே வந்து விடும்... ஆனாலும் அண்ணன்களுக்கும் எனக்கும், எவருடைய மாடு களையாக இருக்கிறது என்ற போட்டி இருப்பதால் மிகவும் மெனக்கெட வேண்டி இருக்கும் மாட்டை அழகுபடுத்த... மாட்டைக் குளிப்பாட்டி விட்டு வந்து, நாங்களும் குளித்து முடித்து சமையல் முடிய நடுப்பகல் ஆகிவிடும்...
மாட்டுப் பொங்கல் அன்று சிறப்பே, பொளி சோறு தான்... அது என்ன பொளி சோறு என்கிறீர்களா... பொங்கலுடன், பிதுக்கிய அவரைப் பருப்பு சாம்பார், பூசணிக்காய், பொரியல், வெல்லம், வாழைப்பழம், கட்டித்தயிர் எல்லாம் ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்து அப்பா அதனை பிசைந்து கவளம் கவளமாக செய்து கொடுப்பார்... பூஜை முடிந்ததும் மாடுகளுக்கு அந்த கவளங்களை ஒவ்வொன்று கொடுத்து விட்டு பிறகு நாமும் சாப்பிட வேண்டியது தான்... எத்தனை முயன்றாலும் மாட்டுப் பொங்கலன்று படைக்கும் பொளி சோறு போல வீட்டில் நம்மால் சமைக்கவே முடியாது... பூஜை முடிந்து அப்பொழுது தான் சாப்பிட அமர்வோம்... ரேடியோ சத்தம் கேட்கும்...
ஆஹா, சொல்ல மறந்து விட்டேன் பாருங்கள்... மாட்டுப் பொங்கலன்று விசேஷமே ஊரில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் தான்... இப்பொழுது நான் சொன்னது கூட அப்போட்டி பற்றிய அறிவிப்பு வரும் ரேடியோ சத்தம் தான்... ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், ஸ்லோ சைக்ளிங், சாக்கு கட்டிக் கொண்டு ஓடும் பந்தயம், வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல், உயரத்தில் கயிற்றில் கட்டி இருக்கும் முறுக்கை கையைப் பின்னால் கட்டிக் கொண்டு எம்பி எம்பி வாயால் கடித்து இழுக்கும் போட்டி, கபடி போட்டி என சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் வித விதமான போட்டிகள் நடக்கும்... போட்டிகள் எல்லாம் முடிய இரவு பத்து மணிக்கும் மேலாகி விடும்...


அடுத்த நாள் தான் இன்னும் குதூகலமே... அப்படி என்ன குதூகலம் என்றா கேட்கிறீர்கள்... கடைசி நாளான உழவர் திருநாளில் தான் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விளையாட்டு நடக்கும்... மாமன் மகள்/ன் மேல் தண்ணீர் ஊற்றி விளையாடுவது, பிடித்த பெண்/ஆண் மேல் தண்ணீர் ஊற்றி விளையாடுவது என ஒவ்வொருவரும் தங்கள் உள்ளக்கிடக்கையை நாசூக்காய் மற்றவருக்குத் தெரிவிக்கும் நாள்... பகலெல்லாம் மஞ்சள் நீரில் விளையாடினால், மாலைப்பொழுதில், காளை விடும் நிகழ்ச்சி நடக்கும்... எங்கள் ஊரில் காளை அடக்கும் போட்டிகள் எல்லாம் இல்லை... வயல் வெளியில் காளைகளை ஓட விடுவது, பின் அதே காளைகளை தெரு தெருவாய் வடக்கயிற்றால் இருபுறமும் கட்டி அவற்றை உசுப்பேற்றி இருபுறமும் அலைக்கழிக்க வைப்பது என்று கடைசி நாள் அமர்க்களமாய் முடியும்...

பொங்கல் முடிந்தாலும் அடுத்த ஒரு வாரத்திற்கு பள்ளிக்கூடத்தில் பொங்கல் பற்றிய விவாதங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்... ஹ்ம்ம்... இன்றைய தலைமுறை நான் அனுபவித்த இத்தனை சந்தோஷங்களை அனுபவிக்கிறதா என்றால், தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னாலேயே அவர்களது நான்கு நாட்களும் கழிகிறது என்று தான் வேதனையுடன் சொல்ல முடிகிறது... ம்ம்ம்... மீண்டும் ஒரு பள்ளிக்கால பொங்கல் விழாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் ...


ஏருபூட்டி நீரிறைச்சு ஆழுழுது வித்திட்டு

நாத்தாக்கி சேடையிலே நட்டநெல்லு முத்திவிட

காரணமாம் சூரியர்க்கு நன்றிசொல்ல கூடிடுவோம்

பாரத்தை ஏத்துக்கிட்டு நாள்முழுக்க சேத்துனுல

கால்கடுக்க ஏரிழுத்த காளைகளை ஓட்டிவந்து

சுத்தமாக்கி பொட்டுவைச்சு மாலைகளால் பூட்டிடுவோம்

காடுகாத்த சூரியற்கும் கஷ்டப்பட்ட காளைகட்கும்

சொந்தபந்தம் ஒன்னுசேர்ந்து பொங்கவச்சு பூசையிட்டு

பாடிடுவோம் பொங்கல்;வாழ்த் து...

நன்றி: அதீதம். காம்

லிங்க்: atheetham.com/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

2 comments:

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான கட்டுரை.

இப்போது பல பள்ளிகளில் பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்பது ஆறுதலான செய்தியாக இருக்கிறது.

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி அக்கா...

Post a Comment