Tuesday, January 31, 2012

ஊடல்-காதலின் உயிர் (அதீதத்தில் வெளிவந்த எனது படைப்பு)

காதல், இந்த ஒரு வார்த்தைக்குத்தான் எத்தனை வலிமை. அது என்னமோ தெரியலைங்க… காதல் வந்துட்டாலே பசங்கன்னாலும் சரி, பொண்ணுங்கன்னாலும் சரி, தன்னை மறந்துடறாங்க… மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி ஆயிடறாங்க…

காதல், இந்த உணர்வு தனக்குள்ள இருப்பதை பெரும்பாலும் எப்போ, எப்படி எல்லோரும் உணருறாங்கன்னு தேட ஆரம்பிச்சப்ப எல்லா பக்கத்தில் இருந்தும் எனக்குப் பதிலா அமைஞ்சது பிரிவு தாங்க. என்னடா, காதலிக்கவே ஆரம்பிக்கலை அதுக்குள்ள பிரிவான்னு யோசிக்குறீங்களா… நிஜமா, பிரிவுதாங்க காதலை உணர்த்தும் கருவி. ஏன், பிரிவை காதலின் பிறப்பிடம்னு கூட நான் சொல்லுவேன்.

ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உயிருக்கு உயிராக பழகுவார்கள். அவர்களுக்குள் இருப்பது நட்பா, காதலானு அவர்களுக்கே தெரியாது. ஆனால், இருவருக்குள்ளும் உண்மையான காதல் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்குள் ஏற்படும் ஒரு நாள் பிரிவு கூட, அவர்களுக்குள் இருக்கும் காதலை அவர்களுக்கு உணர்த்தி விடுங்க. அதுதாங்க இந்த காதலில், பிரிவுக்கு இருக்கும் வலிமை.

அது சரி, என்ன தான் பிரிவு, காதலின் பிறப்பிடமா இருந்தாலும் ரெண்டு பேரும் பிரிஞ்சே இருந்தா எப்பத்தான் பிறகு காதலிக்கிறது. எத்தனை காலத்திற்கு இப்படி காதலர்கள் பிரிஞ்சே இருக்கலாம். இதிலெல்லாம் ஒரு குழப்பம் இருந்துட்டே இருந்ததுங்க… சரி, குழப்பத்தோட எவ்வளவு நேரம் இருப்பது, விடையைத் தேடலாமேனு யோசிச்சப்ப தான் சட்டென நினைவுக்கு வந்தது, எல்லா விஷயத்தையும் சொல்லும் தமிழர் நூலாம் உலகப் பொதுமறை திருக்குறள் இருக்கேனு.

தேடலின் விளைவாய், எனக்கான பதிலாய் என் உள்ளுணர்வில் பட்டது முதலில் இந்த குறள் தாங்க. என்ன குறள்னு நீங்களும் தான் பாருங்களேன்.

“ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு.”

வள்ளுவர் என்ன சொல்றாருன்னா, காதலை உணரும் வரையில் எத்தனை காலம் வேணும்னாலும் ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்கலாம், ஆனால் அதே சமயம் காதலை உணர்ந்த பின்னால, காதலர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்து செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். ஏன் அப்படி சொல்றாருன்னா காதலர்கள் பிரிஞ்சு போய்ட்டா மறுபடி அவர்கள் சேருறது ரொம்ப கஷ்டமாம்.

என்ன தான் ஒரு பக்கம் மனசு இதை ஒத்துக்கிட்டாலும், இன்னொரு பக்கம், மனசு கிடந்து அடிச்சுக்குச்சுங்க. அது எப்படி காதலின் பிறப்பிடமான பிரிவு, காதலையே பிரிச்சுடுமா. இன்னும் குழப்பம் அதிகமாச்சு. சரி, இன்னும் திருக்குறளைத் தேடிப் பார்க்கலாமேன்னு தேடுனப்ப இன்னொரு குறள் கிடைச்சது. அது இதுதாங்க…

“உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்.”

அப்படி என்னதான் சொல்றாருன்னு கேட்கறீங்களா… காதலில் இந்த ஊடலெனும் பிரிவு எப்படி இருக்கணும்னா உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய உப்பு போல இருக்கணுமாம். எப்படி உப்பு குறைவாப் போட்டுக்கிட்டு சாப்பிட்டா சாப்பாட்டுல ருசி இல்லாம அதிகமாப் போச்சுன்னா வாயிலேயே வைக்க முடியாம இருக்கோ, அப்படித்தான் காதலுக்கு ஊடலும்னு சொல்றாருங்க வள்ளுவரு.

ஒரு வழியா மனசை அமைதியாக்கிட்டு தூங்கலாம்னு நினைச்சப்பத்தான், இதே கருத்துடைய ஒரு அழகான முத்தொள்ளாயிரப் பாடல் நினைவுக்கு வந்ததுங்க. அதையும் தான் கடைசியா பார்த்துடலாமே…

"ஊடல் எனஒன்று தோன்றி அலர்உறூஉம்

கூடல் இழந்தேன் கொடிஅன்னாய் நீள்தெங்கின்

பாளையில் தேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக்

காளையைக் கண்படையுள் பெற்று."

அப்படி, என்னதான் இந்த பாட்டுல சொல்றாங்கன்னு கேட்கறீங்களா… உயர்ந்து வளர்ந்த தென்னை மரத்தின் பாளையில் தேனினைத் தொடுக்கும் தேனீக்களையும், பாய்ந்தோடும் நதியையும் தன்னகத்தே கொண்ட சோழனைத் தான் தொலைத்து விட்டதாக ஒரு பெண் தன் தோழியிடம் சொல்கிறாள். அதுக்கு என்ன காரணத்தைச் சொல்றானு பார்த்தா, ஊடல் தான் காரணம்னு சொல்றா.

எப்படின்னா, சோழன் வரும் போது, அவன் மேல் கோபம் கொண்டது போல நடிச்சு முகத்தை திருப்பி வைச்சு ஊடலோடு காத்திட்டு இருந்திருக்கா அந்த பெண். சோழன் இந்த பெண், தன் மீது உண்மையாவே கோபமா இருக்கான்னு நினைச்சு அவளைத் தழுவாமலேயே தனியே விடுத்து அவன் வழியே திரும்பி போய்ட்டானாம். இதுக்குத்தாங்க சொல்றது ஓவர் ஆக்ஷன் செய்யக்கூடாது்ன்னு…

காதலின் ரகசியத்தை தெரிஞ்சுக்கிட்டீங்க இல்லை… இனி நீங்களாச்சும், முத்தொள்ளாயிரப் பாடல் பெண் போல இல்லாம எல்லாம் பிளான் போட்டு செய்யுங்க… காதலில் நிச்சயம் வெற்றி தான்.

நன்றி: அதீதம்.

No comments:

Post a Comment