Saturday, August 20, 2011

பண்புடன் தளத்தில் எனது படைப்பு - கைக்கடிகாரம்

என் வாழ்வின் மிக முக்கியமானத் தருணங்களில் ஒன்றாகக் கருதியது. கல்லூரி நாட்களில் எனது கனவாக இருந்த பன்னாட்டு நிறுவனத்தில் பத்து மணிக்கு நேர்காணல். காலை முதலே லேசாக படபடப்பு இருந்தாலும் இத்தனை நாளைய எனது வேலை அனுபவத்தால் சற்று தைரியமாகவே இருந்தேன். நேரம் கரைந்து கொண்டிருந்தது. பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நேரம் பார்க்க எண்ணியவனாய் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறேன். ஒன்பதைக் கடந்து நேரம் மெதுவாய் முன்னேறிக் கொண்டிருந்தது. எனது நினைவோ கைக்கடிகாரத்தைக் கண்டதும் பின்னோக்கி நகர்ந்தவாறு இருந்தது.


அது எனது பள்ளிக்காலம். அன்றைய நாளில் எனது தந்தைதான் எனது ஹீரோ. எனது தந்தை என்றால் நினைவுக்கு வருவது வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியில் பட்டை பட்டையாக நெற்றி நிறையத் திருநீறு அணிந்த அந்தக் களையான முகமும், அவரது மணிக்கட்டில் எப்பொழுதும் பளபளக்கும் இறுக்கமான கைக்கடிகாரமும் தான். எனக்கு எப்பொழுதும் அந்தக் கைக்கடிகாரத்தின் மேல் ஒரு பிரியமான பொறாமை, என்னைவிட அதிக நேரம் என் அப்பாவுடன் இருப்பதால்.

அப்பாவின் அந்த மிடுக்கான தோற்றத்திற்கு காரணம் அந்த கைக்கடிகாரம் என்பதாக எனது எண்ணம். யாரேனும் அப்பாவை நேரம் கேட்கும் பொழுது லாவகமாக கையைத் திருப்பி அவர் நேரம் சொல்லும் விதம், இன்றும் கண் முன்னே நிழலாடுகிறது. அப்பாவின் கைக்கடிகாரத்தைப் பார்த்து பார்த்து வளர்ந்த எனக்கு கைக்கடிகாரம் என்றாலே அத்தனை விருப்பம். ஆனால் வீட்டிலோ, "சின்னப் பையன், நேரம் பார்க்கவேச் சரியாத் தெரியாது; இதுல உனக்கு கைக்கடிகாரம் கேடா" என்று எனது விருப்பத்தைச் சுக்கல் சுக்கலாக்கி விட்டார்கள். இருந்தும் எனது கைக்கடிகாரத்தின் மீதான மோகம் நாளுக்கு நாள் கூடியதே அன்றி குறைந்தபாடில்லை.

ஆறாம் வகுப்பு முடித்த ஆண்டு விடுமுறை என நினைக்கிறேன். எனது மாமா வீட்டில் மூன்றாவது மாமா வைத்திருந்த எலக்ட்ரானிக் கடிகாரம் பார்த்ததில் இருந்து நேரம் எளிதாகப் பார்க்க முடிந்ததால் எலக்ட்ரானிக் கடிகாரத்தின் மீது எனது பார்வை திரும்பியது. அதன் பின், எங்கள் ஊர் திருவிழாவின் போது கீழே கிடைத்த ஒரு உடைந்த எலக்ட்ரானிக் கடிகாரம் கொண்டு விளையாடியதும், கடிகாரங்கள் பார்க்கும் போதெல்லாம் ஏக்கமாக அப்பா அம்மாவைப் பார்க்கும் பார்வையிலுமாக அதற்குப் பின்னாளைய நாட்கள் கழிந்தன.

எனது பெரிய அண்ணன், என்னை விட ஐந்து வயது மூத்தவனை கல்லூரியில் படிப்பதற்காக சேலத்தில் சேர்த்தினர். அவனுக்கு அங்கு நேரம் பார்க்கவும் அலாரம் வைக்கவும் என ஒரு கைக்கடிகாரம் அப்பா அவனுக்கு வாங்கித் தந்தார். கருப்புக் கலரில் அந்தக் கடிகாரம் என்னைக் கொள்ளைக் கொண்டது. அந்தக் கடிகாரத்தின் இன்னொரு சிறப்பம்சம் அலாரம் மணி சேவல் அகவும் ஓசையில் இருந்தது தான். எத்தனையோ நாள் போட்டி போட்டுக் கொண்டு நானும் என் அண்ணனும் அதில் அலாரம் வைத்து, சேவல் அகவும் ஓசையைக் கேட்டிருப்போம்... ஒரு நாள் எனக்கும் என் அண்ணனுக்குமான சண்டையில் அந்தக் கடிகாரம் உடைந்தது... எனது பார்வை மீண்டும் அப்பாவின் கடிகாரத்தின் மேலே திரும்பியது...

நாட்கள் உருண்டோடின... கல்லூரியில் என்னைச் சேர்த்தினார் அப்பா... அண்ணனுக்கு கல்லூரியில் சேரும் போழுது வாங்கிக் கொடுத்ததைப் போன்று எனக்கும் ஒரு கடிகாரம் வேண்டும் எனச் சொல்ல புறப்பட்ட நாக்கு அப்பாவைக் கண்டதும் அமைதியாக மூடிக் கொண்டது. இரண்டு மாதம் போயிருக்கும். எனது பெரிய அண்ணன், அவனது சம்பாத்தியத்தில் அப்போது பிரசித்தமாக இருந்த டைட்டனின் சொனாடா கடிகாரத்தை எனக்கும், எனது சிறிய அண்ணனுக்கும் அவனது சம்பள பணத்தில் இருந்து வாங்கிக் கொடுத்தான்.

அன்றைய நாள், இன்னும் நினைத்துப் பார்க்கிறேன். எனது மனம் இறக்கைக் கட்டி வானில் பறந்தது. எவ்வளவு சந்தோஷம்... எனக்கே எனக்கான முதல் கடிகாரம். யாரும் சண்டைக்கு இல்லை. யாரும் இனி என்னைச் சின்னப் பையன் என ஓரம் கட்டப் போவதில்லை. எனது வாழ்வின் முதல் கைக்கடிகாரத்தைக் கட்டிய நொடியில் எனக்கு ஒரு மிடுக்கான தோற்றம் தோன்றியதாக என்னுள் ஒரு எண்ணம். நானும் பெரிய பையன் ஆகி விட்டேன் என்கிற மிதப்பு. தெருவில் உள்ள அனைத்து நண்பர்களிடமும் எனது புதிய கடிகாரத்தைக் காட்டிப் பார்க்கும் பார்வையில் உலகையே வென்ற ஒரு பெருமிதம்... ஹ்ம்ம்...

காலம்தான் எத்தனை வேகமாக ஓடி விட்டது. சற்று முன் கூட நேரம் பார்த்தது அதே கடிகாரத்தில் தான்... என்னை யாரோ இடித்துக் கொண்டு ஓடுவது போலிருக்கச் சுயநினைவுக்குத் திரும்பியவன், எனக்கான பேருந்து வந்து விட்டதா எனப் பார்க்கும் போது பின்னாலிருந்து ஒரு குரல், " சார், மணி என்ன ஆச்சு?". கேட்டவரைப் பார்க்காமலேயே, கையை லாவகமாக ஒரு சுழற்று சுழற்றி நேரம் பார்த்துச் சொன்னேன் "ஒன்பதே காலென்று".


நன்றி: http://www.panbudan.com/story/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

No comments:

Post a Comment