Wednesday, August 10, 2011

ஆடிக்கு அழைத்தல்

தமிழ்ப்புத்தாண்டு, ஆடிக்கழைத்தல்(ஆடிப்பெருக்கு), தீபாவளி, பொங்கல் இவைதான் தமிழர்களால் பண்டைய காலங்களில் கொண்டாடப்பட்டு வந்த பெரும் பண்டிகைகள்...

இவை நான்கு பண்டிகைகளையும் பாருங்கள்... சரியாக காலாண்டிற்கு ஒரு பண்டிகை வீதம் வருவதைக் காணலாம்...

சித்திரை, வைகாசி ஆனி விடுத்து பின் ஆடியில் ஆடிப்பெருக்கு , ஆவனி புரட்டாசி விடுத்து பின் ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகை மார்கழி விடுத்துப் பின் தையில் பொங்கல்...


இப்படி தன் தாயின் வீட்டில் வாழ்ந்து வந்த ஒரு பெண்ணைத் திடீரென்று புது இடத்திற்கு அனுப்பி விட்டால், அவள் பிறந்தகத்தை அதிகம் இழப்பதாய் பெண்ணிற்கும், பெண்ணுடைய பெற்றோருக்கும் தோன்றும்... அதனாலேயே திருமணம் ஆன பின் இந்த அத்தனை விசேஷங்களுக்கும் முதல் முறை வரும் பொழுது சிரத்தை காண்பிக்கிறார்கள்... ஒரு வருடம் மற்ற நாட்களில் புகுந்த வீட்டில் பழகி விட அவர்களுக்கு அடுத்து இப்பண்டிகைகளை புகுந்த வீட்டில் கொண்டாடுவது என்பது உளவியல் ரீதியாக வருத்தம் இருக்காது...

அப்படி என்றால் ஆடிப் பெருக்கு அன்று மட்டும் வரவழைத்துக் கொள்ளலாமே எனக் கேட்கலாம்... ஆடியில் தான் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் ஆடிக்கிருத்திகை திருவிழா எல்லா ஊரிலும் சிறப்பாக கொண்டாடப்படும், அதன் பின் ஆடி அமாவாசையன்று இறந்த பெரியவர்களுக்கு கொடுக்கும் தர்ப்பனம், அதன் பின் ஆடிப்பெருக்கு(ஆடிப்பதினெட்டு) இப்படி வரிசையாக மூன்று பெரிய விசேஷங்கள் நடக்கும்... ஒவ்வொரு விசேஷத்திற்கும் புகுந்தகத்தில் அனுமதி கேட்டால் கிடைக்குமா... அதற்குத்தான் ஆடி மாதம் முழுவதும் வீட்டில் தங்க வைத்துக் கொள்கிறார்கள்... மேலும் ஆடியில் கருத்தரித்தால் பிள்ளைப் பேறு சித்திரையில் வரலாம்... பிள்ளைப் பேற்றின் போது அதிக அளவு பெண்ணின் உடலில் இருந்து நீர்போக்கும் ஏற்படும்... அந்தப்பொழுதில் வெய்யில் காலம் அதிகமாக இருந்தால் தாய்க்கு அழற்சி ஏற்படும் வாய்ப்பும் அதிகம்... மேலும் சித்திரை மாதம் என்பது பெரும்பாலும் அந்த காலத்தில் பெரியம்மை போடும் வாய்ப்பு அதிகமாக இருந்த காலம்... பெரியம்மைக்கான தடுப்பூசி இல்லாத காரணத்தால், சிறுகுழந்தைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கிடக் கூடாது என்பதற்காக தவிர்க்கப்பட்டதாகவும் இருக்கலாம்...

ரொம்ப அதிகமா போறேனோ... இன்னும் யோசிச்சா மண்டையிலிருந்து மூளை காது வழியா வந்துடும்னு பயந்துக்கினு இத்தோட நிப்பாட்டுறேன்...

( டேய் பிரசாத்து, எப்படிடா உனக்கு மட்டும் இம்பூட்டு அறிவு...)

No comments:

Post a Comment