Friday, March 23, 2012

அரவான் என்ற அரசகுமாரன்

அரவான்... சாமுத்ரிகா லட்சணங்கள் நிறைந்த ஒரு ஆண்மகன். அங்கஹீனமே ஒருபொழுதும் ஏற்படாத ஆண்மகன்... இதென்ன பெரிய விஷயம், இங்கு பெரும்பாலும் எல்லோரும் அங்கஹீனம் இல்லாமல் தானே இருக்கிறோம் என்கிறீர்களா... ஒரு சிறிய கத்தி வெட்டு, அல்லது ஒரு சிறு கல்லினை கால் தட்டி இரத்தம் சிந்தியிருந்தாலும் கூட நாம் அங்க ஈனம் அடைந்தவர்களாகவே கருதப்படுவோம்.

அரவான், தான் பிறந்தது முதல் இறக்கும் வரையில் அங்க ஈனமே இல்லாமல் வாழ்ந்து மடிந்தவன். யார் இந்த அரவான்? அரவான் கதைதான் என்ன எனக் கேட்கிறீர்களா. வாருங்கள் பின்னோக்கிச் சென்று மகாபாரதத்தைச் சற்று புரட்டிப் பார்ப்போம். அரவானைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மகாபாரதத்தின் ஆதிபர்வத்தைப் புரட்டிப் பார்த்தே ஆக வேண்டும்.

மகாபாரதத்தில், பாண்டவர் ஐவருக்கும் பாஞ்சாலி ஒருத்தி தான் மனைவி என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் பாண்டவர்களுடனான பாஞ்சாலியின் இல்வாழ்க்கை மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்தது. பாஞ்சாலி பாண்டவர் ஐவருக்கும் மனைவியே ஆயினும், அவளுடனான இல்வாழ்க்கையில் ஐவரில் ஒரு ஆண்டுக்கு ஒருவரே பங்கு கொள்ள முடியும். இவ்வாறு ஒருவருடன் பாஞ்சாலி இருக்கும் பொழுது அவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் யாரேனும் ஒருவர் நடந்து கொண்டால் இடையூறு செய்தவர் ஒரு வருடம் பெண்வாசம் இன்றி வனவாசம் மேற்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் அந்நியதிகளுள் முக்கிய அம்சமாகும்.

இப்படி பாண்டவர்கள் வாழ்ந்து வரும் சமயம், ஒரு நாள் அந்தணன் ஒருவன் தனது மாடுகளைக் கள்வர்கள் கவர்ந்து செல்வதாகவும், அதனை மீட்டுத் தருமாறும் அர்ஜுனனிடம் வேண்டுகிறான். அர்ஜுனன் நிரைகளை மீட்க வேண்டி, தனக்குத் தேவையான வில் மற்றும் அம்புகளை எடுக்கச் செல்லும் போது தருமரும் பாஞ்சாலியும் இருக்கும் அறையைக் கடக்க நேரிட்டது. தவறுதலாக அர்ஜுனனும் அவர்கள் கால் விரல்களை பார்த்து விட்டான்.

நிரைகளை அந்தனர்க்கு மீட்டுக் கொடுத்த அர்ஜுனன், தருமரிடம் நடந்ததற்காக மன்னிப்புக் கோரி, நியதிப்படி தான் ஓராண்டிற்குத் தீர்த்த யாத்திரைப் புறப்படும் முடிவையும் சொன்னான். தருமரோ, நீ யாதொரு இடையூறும் எங்களுக்குச் செய்யவில்லை. மேலும் அவசர காலத்தில் ஒருவர்க்கு உதவுவதென்பது அரச தர்மமாகும். அதன்பொருட்டு நீ வில் அம்பு எடுக்க வந்ததால் இது நியதியை மீறியதாகாது என்று எடுத்து இயம்புகிறார்.

இருப்பினும், அர்ஜுனன் தனது மன சாந்திக்கு வேண்டியாவது, தான் தீர்த்த யாத்திரை மேற்கொள்வது தேவையாகிறது எனச் சொல்ல தருமரும் இசைவு தெரிவிக்கிறார். அர்ஜுனன் தனது தீர்த்த யாத்திரையை தெற்கிலிருந்து தொடங்கி அனைத்து புண்ணிய தலங்களுக்கும் சென்று இறைவனை தரிசித்துவிட்டு கங்க நதியை வந்தடைகிறான். கங்கா நதி உற்பத்தி ஆகும் இடத்தில் சில காலம் அர்ஜுனன் தங்கி இருக்க தீர்மானித்தான்.

இவ்வாறு அர்ஜுனன் கங்கை நதி கரையில் வீற்றிருக்கும் போது, அவனைக் கண்டு மயங்கிய நாக கன்னிகையான உலுப்பி அர்ஜுனனை நாக தேசத்திற்கு அழைத்துச் சென்று அவனுக்குத் தேவையான பணிவிடைகள் செய்து, பின் தனது விருப்பமாக அர்ஜுனனை மணக்க விரும்புவதாகக் கூறுகிறாள். அரசர் மரபில் எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றாலும் அர்ஜுனன், தான் ஓராண்டிற்கு பெண்வாசம் இல்லாமல் இருக்க வேண்டிய நியதியை உலுப்பிக்கு எடுத்தியம்பி அவளை மணக்க மறுக்கிறான்.

அர்ஜுனனிடம் தன் மனதை இழந்த உலுப்பியோ அர்ஜுனனின் சொல்லுக்குச் செவி சாய்க்காமல், தன்னை மணக்க வேண்டும் அன்றேள் அக்கணமே உயிர் நீப்பதாகக் கூறி, ஒரு பெண்ணின் உயிரைக் காத்தல் அரச தர்மம். அதனை நீங்கள் மீறலாகாது எனச் சொல்லியவாறு தற்கொலைச் செய்து கொள்ள முனைகிறாள். இத்தர்மசங்கடமான நிலையில் அர்ஜுனன், உலுப்பியின் உயிரைக் காக்கும் பொருட்டு உலுப்பியைக் காந்தர்வ விவாஹம் செய்து கொண்டு அவளுடன் சில காலம் இல்லற வாழ்வை நடத்துகிறான்.

அதன் காரணமாக உலுப்பிக்கு அர்ஜுனன் வாயிலாக ஒரு ஆண்மகவு பிறக்கிறான். அவனே அரவான். தீர்த்த யாத்திரை முடிந்து அர்ஜுனன் திரும்புகையில் உலுப்பி அர்ஜுனனுக்கு, நம் மகனை நானே வளர்க்கிறேன். உங்களுக்குத் தேவையான சமயத்தில் நீங்கள் அவனை அழைக்க அவன் உங்களிடம் வந்து சேர்வான் என்று வாக்கு கொடுத்து வழியனுப்பி வைக்கிறாள்.

இவ்வாறு நாக தேசத்தில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த அரவான் போர்க்கலையிலும் நல்ல தேர்ச்சி பெற்று ஓரு ஆகச் சிறந்த ஆண்மகனாக வாழ்ந்து வருகையில் தனது தந்தையை துரியோதனனும் அவனது கூட்டாளிகளும் ஏமாற்றி, அவமானப்படுத்தியதைக் கேட்டு உள்ளம் கொதித்தெழுந்து அவர்களை அழித்தொழிக்க புறப்படுகையில் அவனது தாய் அவனை, உன் தந்தை உன்னை அழைக்கும் போதே நீ அங்கு செல்ல வேண்டுமென்று தடுத்து விடுகிறாள்.

பாண்டவர்கள் சூதாட்டத்தில் தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தை, வனவாசத்தை முடித்து திரும்பி வந்து கேட்க, துரியோதனன் ராஜ்ஜியத்தை தர மறுத்ததால், போர் செய்வது என்று முடிவாகி இரு தரப்பு படையினரும் குருஷேத்திரத்தில் குழுமி இருந்தனர். போரில் வெற்றி பெற களப்பலியாகக் காளிக்கு நரபலி கொடுப்பது அப்பொழுது வழக்கமாய் இருந்து வந்தது. பலி கொடுக்கப்படும் ஆள் அங்கஹீனமே இல்லாத அரசகுமாரனாக இருக்க வேண்டும்.

பாண்டவர்கள் அங்கஹீனம் இல்லாத அரசகுமாரன் யார்? யாரைக் களப்பலிக்குத் தேர்வு செய்வது என்று குழம்பி இருந்த சமயத்தில் உதவி வேண்டி கிருஷ்ணரை நாடினர். கிருஷ்ணர், நம் தரப்பில் களப்பலிக்குத் தகுதியானவர்களாக இருப்பவர்களாக தன்னோடு சேர்த்து அர்ஜுனனும் அரவானுமே எனக் கூறி, அரவானை களப்பலி கொடுக்கலாம் எனக் கூற, மனவருத்தத்துடன் அர்ஜுனன் அரவானைக் களப்பலி கொடுக்க அழைக்கிறான்.

போரில் இருக்கும் சமயம் தன் தந்தை நம்மை அழைக்கிறாரே நமது எதிரிகளை அழிக்க இது நல்லதோர் வாய்ப்பு என்று அரவான் குருஷேத்திரம் விரைகிறான். குருஷேத்திரம் வந்த மகன் அரவானை பாண்டவர்கள் உச்சி முகர்ந்து வரவேற்று அழைத்த விபரத்தைச் சொல்ல அரவான், தம் பெற்றோருக்காக எதனையும் செய்யத் தயார் என்று தன்னை பலி கொடுக்க முன் வருகிறான். அவ்வாறு தான் பலி ஆகும் முன்பு தனது விருப்பமாக கிருஷ்ணரிடம் மூன்று வரங்களைக் கேட்கிறான்.

அதன்படி, அரவான் தன்னை பலி கொடுத்தாலும் அவன் போரில் ஈடுபட்டு வீர மரணம் ஏற்பட வேண்டுமென்றும், போர் முழுவதையும் காணும் ஆற்றலை தனக்கு வழங்க வேண்டுமென்றும், தான் களப்பலி கொடுக்கப்படுவதற்கு முன்பு தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று மூன்று வரங்களை அரவான் கிருஷ்னரிடமிருந்து பெறுகிறான்.

அதன்படி, களப்பலிக்குத் தன்னைக் கொடுத்து, கிருஷ்னன் அருளால் மீண்டும் உயிர்பிழைத்து எட்டு நாள் போரில் பங்கேற்று வீர மரணம் எய்த பின்னும், துண்டான தலையோடு அரவான் மீதிப் போரைக் கண்ணுற்றான் என்பது செய்தி.

எது எப்படியோ, களப்பலிக்காகத் தன்னுயிரைக் கொடுக்க வந்த அரவான் வீரன் மட்டுமல்ல தியாக குணம் படைத்தவன் கூட என்பது மட்டும் தின்னம். மகாபாரதம் உள்ள வரை அரவான் என்ற அரசகுமாரனின் கதையும் நிலைத்து நிற்கும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்காது என்பது மட்டும் நிஜம்.

நன்றி: அதீதம்: http://www.atheetham.com/story/aravan

No comments:

Post a Comment