Sunday, March 4, 2012

சராசரி மனிதன்

இன்று மாலை இருசக்கர வாகணத்தில் அப்பாவோடு பயணம் செய்து கொண்டிருந்தேன்...தேசிய நெடுஞ்சாலை ஏழு கிருஷ்னகிரியில் சேலம் சாலையும், சென்னை சாலையும் சந்திக்கும் இடம்.

கடமை தவறாத அதிகாரிகள் வண்டியை ஓரம் கட்டச் சொன்னார்கள். எனக்கு முன்பு ஒருவனையும் ஓரம் கட்டச் சொல்லி இருந்தார்கள்... எனகு பின்னால் வருபவர்களையும் ஒவ்வொருவராக ஓரம் கட்டிக் கொண்டு இருந்தார்கள்.

எனக்கு முன்னால் சென்றவன், எதற்காக ஐயா வண்டியை ஓரம் நிறுத்தச் சொல்கிறீர்கள் என்றான்...

அதிகாரி சிரித்துக் கொண்டே, ம்ம்ம்... பணத்துக்குத்தான், எடு பணத்தை என்கிறார்.

எதற்கு ஐயா பணம் என்றான்...

ம்ம்ம்... ஓட்டுனர் உரிமம் இருக்கா என்றார்.

இல்லை, வீட்டில இருக்கு... வீடு இங்க தான் என்று ஏதோ முகவரி சொல்லிக் கொண்டிருந்தான்...

நானும் அப்பாவும் இறங்கினோம்...

அப்பா, எதற்கு இவர்களிடம் வம்பு என்று பணத்தை எடுத்தார்... ஓட்டுனர் உரிமம் இல்லையா சார் என்றான் அப்பாவைப் பார்த்து...

அப்பாவிடம் லைசன்ஸ் இருந்தது. வண்டி ஓட்டிய என்னிடம் தான் லைசன்ஸ் இல்லை... இல்லை என்றால் சில மாதங்களுக்கு முன்பு பேருந்தில் ஒரு புண்ணியவான் எனது கைப்பையை அவரது அவசரத் தேவைக்காகவோ, அல்லது எனது அஜாக்கிரதையாலோ தவறிப் போனதில், எனது ஓட்டுனர் உரிமமும் தவறிப் போனது.

அப்பா, அவரது லைசன்ஸைக் காண்பிக்க முற்படுகையில் என்னுடைய லைசன்ஸைக் கேட்டார். நான் தொலைந்து விட்டது. இல்லை என்றேன்...

இருநூறு ரூபாய் கொடுங்கள் என்றார்.

சரி, என்று அப்பாவும் பணத்தைக் கொடுக்க, லைசன்ஸ் எடுங்க சார் என்று என்னைப் பார்த்துச் சொல்லியவாறு பணத்தை வாங்கி பையில் போட்டுக் கொண்டார்.

மாதம் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு பங்கு இப்படி அநியாயமாகக் கொடுக்கப்பட்டு விட்டதே, என்று எனக்கு ஏகத்துக்கும் வருத்தம்...

அப்பாவிடம் மெதுவாகக் கேட்டேன்... அப்பா, உரிமம் இல்லாமல் ஓட்டினால் எவ்வளவு அபராதம் இருக்கும்... நாம் அபராதத் தொகை கட்டியிருக்கலாமே ரசீதுடன் என்றேன்.

அப்பா சிரித்துக் கொண்டே, உனக்கு என்ன நீ நாளைக்கு ஊருக்குப் போயிடுவ. யாரு இந்த அபராதத்தைக் கட்ட நீதிமன்றம் போறது... போடா போடா, மாசக் கடைசி ஆச்சே, சிட்டி லிமிட் தாண்டற வரைக்கும் நாம ஓட்டிக்கலாமான்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.. உன்கிட்ட பேசிட்டே வந்ததுல மறந்து போயிட்டேன் என்றார்...

கம்முனு நான் நிறுத்தாம வந்திருக்கலாமோன்னு கேட்டேன்... சொல்லி வாயை மூடும் முன்னே சாலையோரமாக நின்ற்ய் கொண்டிருந்த சாலை ரோந்து வண்டி ஒன்றை நாங்கள் கடக்க நேரிட்டது...

உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன், அங்க அபராதம் கட்டாமல் ஏமாற்றி தப்பிப்பவர்களை மடக்கிப் பிடிக்க நின்று கொண்டிருப்பார்களோ என்று...

ஹ்ம்ம்... என்ன தான் நாமெல்லாம் வாய் கிழிய சட்டம் பேசினாலும், சட்டத்திற்கு முன்னால் எல்லாம் சராசரி மனிதர்கள் தானே...

பி.கு: மக்களே இது மாசக் கடைசி, அதனால ஓட்டுனர் உரிமம் கையில் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டுங்க... இல்லாட்டி கையில் நூறு அல்லது இருநூறு ரூபாய் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டுங்க...

No comments:

Post a Comment