Sunday, March 4, 2012

இரத்த புளியம்பழம்

வீட்டுக்கு வந்தால் எப்பொழுதும் தோப்புக்கு ஒரு முறை சென்று வருவது போல இன்றும் மின்சாரம் இல்லாத நடுப்பகலில் தோப்புக்குச் சென்றேன். தோப்பைச் சுற்றிக் கொண்டு வரும் பொழுது கண்ணில் பட்டது புளியம்பழம். எக்கி எக்கி குதித்து ஒரு வழியாக ஒரு பழத்தை பிடுங்கி வாயில் வைத்தேன்...

புளியம்பழத்தின் புளிப்பு என்னை எனது பள்ளிக் காலத்திற்கு அழைத்துச் சென்றது. வருடத்தில் ஒவ்வொரு சீசனில் ஒரு விளையாட்டு என மாறும். பிப்ரவரி முதல் ஏப்ரல் மே வரையில் எப்பொழுதும் விளையாட்டாக எங்களுக்கு அமைவது கில்லி தாண்டலும், ஒத்தையா இரட்டையாவும் தான்...

ஒத்தையா இரட்டையாவில் பெரும்பாலும் கையில் பிடிக்கும் பொருள் புளியங்கொட்டை தான். வீட்டில் முறத்துக்கு புளியங்கூழைத் தடவி முறத்தை தடிமனாக்க வைத்திருக்கும் புளியங்கொட்டையில் சிறிது எடுத்துக் கொண்டுச் சென்று விளையாடுவது வழக்கம். அது போக பள்ளியின் பின்புறம் இருக்கும் சந்தையில் ஆங்காங்கே வளர்ந்திருக்கும் புளியம்ரம் தான் எங்கள் ஒத்தையா ரெட்டையா விளையாட்டுக்கு ஜீவன்.

ஒரு முறை இப்படி சந்தையின் பின் புறம் இருக்கும் புளியமரத்தில் இருந்து புளியங்கொட்டை எடுக்க அம்மரத்தில் இருந்த புளியம் பழத்தை பிடுங்கிச் சாப்பிட்டோம். எப்பொழுதும் புளிப்பாக புளியம்பழம் சாப்பிட்டுப் பழகிப் போன எனக்கு அந்த புளியம்பழத்தின் இனிப்புச் சுவை மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.

நண்பர்களிடம் விசாரிக்க அதை இரத்த புளியம்பழம் என்றார்கள். அதைச் சாப்பிட வாயெல்லாம் சிவப்பு நிறமாக மாறியது போலவும் ஒரு தோற்றம். (புளி சாப்பிட்டா நாக்கு பொங்குவதால் ஏற்பட்ட அச்சரச் சிவப்பு அல்ல அது). அன்று முழுவதும் இரத்த புளியம்பழம் பற்றித்தான் பேச்சு வகுப்பு முழுவதும்.

ஏன் அதுக்கு இரத்தப் புளியம்பழம்னு பேரு வந்தது தெரியுமாடா? வருஷா வருஷம் அந்த மரத்துக்குச் சேவல் இல்லை ஆடு வெட்டி அதோட இரத்தத்தை மரத்துக்கு ஊத்தி பூஜை செய்வாங்கடா... அதான் அது இரத்தச் சிவப்பா இருக்கு இனிப்பாவும் இருக்கு... இப்படி பல கதைகள் அன்று முழுவதும் வகுப்பில்... உண்மை எதுவென இன்று வரை தெரியவேயில்லை...

இதையெல்லாம் நினைத்துக் கொண்டே தோப்பைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க தென்னம் புருடை காலை வழுக்கி கால் பிரள... சர்ரக்.... என்ன பார்க்குறீங்க... சர்க்கார் முள் காலைக் குத்திடுச்சு... நான் காலில் இருக்குற முள்ளை எடுத்துப் போட்டுட்டு நெருப்பால சுடணும்... என்னோட புளியம் பழம் கதை கேட்டாச்சுல்ல... உங்களுக்கு இந்த இரத்த புளியம்பழம் பத்தி ஏதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்க உண்மையான சமாச்சாரமா இருந்தாலும் சரி, இல்லை கதையா இருந்தாலும் சரி...

No comments:

Post a Comment