Wednesday, February 1, 2012

ஆசு ...

என்னடா இது, இப்படி மொட்டையா ஆசு...ன்னு தலைப்பான்னு பார்க்குறீங்களா... இன்று மின்மடல் படித்துக் கொண்டிருக்கும் போது ஆசுகவி ஆசு உரை அப்படின்னு வார்த்தைகள் கண்ணுல பட்டுச்சு... இதைப் பார்த்த உடனே எனக்கு எனது பள்ளி கால நினைவலை ஒன்று என் மனதைத் தொட்டுச் சென்றது... அதை உங்களிடம் பகிர்ந்துக்கலாமேன்னு தான் இந்தக் கட்டுரை...

நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது கணக்கு பாடம் முழுதும் அத்துப்படி... எப்போது என்ன கணக்கு கொடுத்தாலும் இவன் போட்டு விடுவான் என்கிற அளவிற்கு நல்ல பெயர் வகுப்பில்... எப்பொழுதும் நான் தான் கணக்கில் முதல் மதிப்பெண் வேறு வாங்குவேன்...

2001 ம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ம் தேதி, எனது பிறந்த நாள் அன்று சிறிய வகுப்பறைத் தேர்வு. தேர்வுப்பாடம் கணக்கு. அதற்கு முன்தினமே தேர்வைப் பற்றிய அறிவிப்பும் சொல்லி இருந்தார்கள். நமக்கு தான் கணக்குப் பாடம் அத்துப்படி ஆச்சே என்று சற்று தலைக்கனத்தோடு, ஒரே ஒரு முறை மட்டும் ஒப்புக்கு எனது புத்தகத்தை புரட்டிப் பார்த்து விட்டு, வகுப்பறை சென்றேன்... பிறந்த நாள் கொண்டாட்டம் வேறு... அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியோடு அன்றைய பொழுது தொடங்கியது...

வகுப்பறைத் தேர்விற்கான நேரம் வந்தது. அனைவரும் தேர்வு எழுத தயாராய் அமர்ந்திருந்தோம்... வினாத்தாள் கொடுக்கப்பட்டது... தேர்வு எழுத ஆரம்பிக்கிறேன்... வினாக்கள் பலமுறை நான் விடை எழுதிய வினாக்கள் தான். ஆனால், அன்று என்னால் ஒரு வினாவிற்கான விடையையும் எழுத முடியவில்லை... எந்த வினாவை ஆரம்பித்தாலும் விடை பாதியில் நிற்கிறது. அடுத்த படி எப்படி போக வேண்டும் என்பது மேகம் மறைத்த நிலவாய் மறைந்து(மறந்து) போனது...

எனது வெற்று விடைத்தாளை எடுத்துக்கொண்டு சென்று ஆசிரியரிடம் கொடுத்தேன்... ஆசிரியர் எனது விடைத்தாளையும் என்னையும் பார்த்து விட்டு, "நான் உனக்கு ஒன்றும் சொல்லப் போவதில்லை... இதற்கான காரணத்தை நீயே அறிந்து கொள்" என்று சொல்லி விட்டு எனது பேப்பரில் பெரிய பூஜ்ஜியம் ஒன்றை எனது மதிப்பெண்ணாக அளித்து என்னைத் திருப்பி அனுப்பி விட்டார்...

அன்று எனக்கு ஒரு விஷயம் புரிந்தது... என்ன தான், நாம் திறமை மிகுந்தவர்களாக இருந்தாலும், எந்த போட்டியில் இறங்கும் போதும் போட்டிக்கான மரியாதைக் கொடுத்து நம்மை தயார்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும் என்பதே அந்த பாடம்... இந்த விலை உயர்ந்த பாடத்தை கற்று கொடுத்தது எனது பிறந்த நாளில் எனக்கு கிடைத்த பூஜ்ஜியம் மதிப்பெண்...

ஆகவே நண்பர்களே, எந்த ஒரு நிலையிலும், உங்களுக்கு தெரிந்த விஷயமே ஆனாலும், நாம் எளிதாக இதனைச் செய்து விடலாம் என்கிற இறுமாப்போடு செல்லாமல், அதற்குண்டான மரியாதைக் கொடுத்து நம்மைத் தயார் செய்து கொண்டு செல்வதே நமக்கு நல்லது. தயார் செய்யாமலும் நீங்கள் அந்த செயலை செய்து முடிக்கலாம்... ஆனால் தயார் செய்து கொண்டு சென்றால் உங்களின் போட்டியில், உங்களை நீங்கள் அடுத்த படிக்கு எடுத்துச் செல்வீர்கள்...

"ஆசுகவி ஆம்இவன் ஆசுஉரை ஆம்இவன்
பேசும் வாயனைத்தும் ஏசும் புரிந்திடுநீ
ஆன்றோர் சபைதனில் சற்றே இடறிட
ஆதலால் நீதயாராய் போ. "

No comments:

Post a Comment