Tuesday, August 3, 2010

பண்புடன் மின்னிதழில் என் படைப்பு

பதுக்கல்

பெட்ரோலியப் பொருட்களின் விலை ஒவ்வொரு முறை உயரும் போதும் சாமானியன் சுரண்டப்படுகிறான். பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும் அரசும், மக்கள் மேல் அக்கறை கொண்டு, விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாய் நாடகமாடும் எதிர்கட்சிகளும் தன் சொந்த ஆதாயங்களுக்காகவே செய்கின்றனவேயொழிய மக்களுக்காக அல்ல.


திரைப்படத்தில் திரைக்கு முன்னும், திரைக்குப் பின்னும் நடக்கும் கூத்துக்களைப் போன்று, இந்த பெட்ரோல் விலை உயர்வென்னும் நாடகத்திலும் திரைக்கு முன்னும் திரைக்குப் பின்னும் பலவகை கூத்துகள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றது. இந்த நாடகங்களால் பலருக்கும் பல்வேறு ஆதாயங்கள் இருந்தாலும் வலிக்காமல் பிள்ளை பெறுவது போல பெட்ரோலை சில்ல்றையாக நுகர்வோருக்கு விற்கும் பெட்ரோல் பங்குகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நடத்தும் பதுக்கல் நாடகங்கள் பிரசித்தி பெற்றவை.
பொதுவாகவே ஒரு பொருளுக்குத் தேவை அதிகமாக இருக்கும்போது அதைச் சந்தையில் எளிதில்கிடைக்காமல் முடக்கி வைத்து அந்தப் பொருளின் சந்தை மதிப்பை செயற்கையாக உயர்த்தி அதன் மூலம்கொள்ளை லாபம் சம்பாதிப்பதைத்தான் பதுக்கல் என்கிறோம். இத்தகைய பதுக்கல்கள் பெரும்பாலும் அரிசி, சீனி, சமையல் எண்ணெய் போன்ற அன்றாட உணவுப் பொருட்களின் வகையிலேயே நடைபெறும் இத்தகைய பொருட்கள் உடனே கெட்டுப் போய் விடாதென்பதால் விலை உச்சத்தை எட்டும் வரையில் இதனை வாரக்கணக்கில் மாதக்கணக்கில் பதுக்கி வைத்துப் பெரும்பணம், சம்பாதிப்பதென்பது வியாபார உலகின் வாடிக்கையாக இருந்து வந்தது. இப்போது இந்த வரிசையில் அரசின் உதவியோடு பெட்ரோல்பங்குகள் கடும் கொள்ளையில் ஈடுபடுகின்றன.


ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலை உயரும் போதும், விலை உயர்வைக் கண்டித்தும், எதிர்த்தும் பல தரப்பில் இருந்தும் குரல்கள் எழுப்பும் பத்தில் ஒரு சதவீதம் கூட இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வின் போது நடத்தப்படும் பதுக்கல் நாடகங்களுக்கு குரல் எழுப்புவதில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். இது கண்ணால் கண்ட ஒரு உண்மைச் சம்பவம்.


அன்று பகல் ஒரு பத்து மணி இருக்கும். எனது அலுவலகப் பணிக்கு நாங்கள் வாடகைக்கு எடுத்த காரின் டிரைவர் என்னிடம் வந்து, “ சார், பெட்ரோல் போடனும். இரண்டாயிரம் ரூபாய் தாருங்கள், மாலைக்கு மேல் பெட்ரோல் கிடைக்காது” என்றான். நான், ஏன் “மாலை பெட்ரோல் கிடைக்காது”, “மாலை வெளியே போக வேண்டிய வேலை இருக்கிறது, அப்படியே பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம்” என்று சொன்னேன். அதற்கு அவன், “ சார், இன்று இரவில் இருந்து பெட்ரோல் விலை உயர்கிறது”, அதனால் ஆறு மணி வாக்கில் நோ ஸ்டாக் போர்ட் போட்டு விடுவார்கள். “மீதமிருக்கும் பெட்ரோல், டீசலை பனிரெண்டு மணிக்கு மேல் புதிய விலைக்கு விற்பார்கள்” என்றான். நானும், எதற்கு வம்பு என்று பணம் கொடுத்து பெட்ரோலை நிரப்பி வரச் செய்தேன்.

அன்று மாலை, அலுவலக வேலை காரணமாக, சுமார் 120 கி,மீ தொலைவு தேசீய நெடுஞ்சாலையைச் ரோந்து செய்ய நேர்ந்தது. எதேச்சையாய் கவனித்தேன். அனைத்து பெட்ரோல் பம்பு நிலையங்களின் முன்னாலும் ஏகப்பட்ட லாரிகள் டீசலுக்காய் காத்திருந்தது. டிரைவர் சிரித்தபடி, “ சார் நான் காலையிலேயே சொன்னேன். பார்த்தீர்களா” என்றான். நான் ரோந்து செய்த சாலையில் சுமார் பதினைந்து பெட்ரோல் பம்பு நிலையங்கள் இருந்தன. அதில் குறைந்தது பத்து பெட்ரோல் பம்பு நிலையங்களில் “நோ ஸ்டாக் போர்டு” இருந்தது. இலட்சக்கணக்கில் மதிப்புடைய பொருட்களையோ, கோடிக்கணக்கில் மதிப்புடைய பொருட்களையோ, மாதக்கணக்கில், வருடக்கணக்கில் பதுக்கினால் தான் பதுக்கல் என்றில்லாமல் ஒரு ரூபாய் மதிப்புள்ள பொருளை ஒரு மணி நேரம் பதுக்கினாலும் பதுக்கல்தான் என்றுணர்ந்து இந்த மாதிரி பதுக்கல் கொள்ளைகளை தடுத்து நிறுத்த வழி தான் என்ன…?

இம்மாதிரி பெட்ரோல் பங்குகள் செய்யும் பதுக்கல், பணத்தை மட்டுமல்ல மனதையும் சேர்த்து சுரண்டுவதுதான் வருந்தத்தக்க விஷயம். இருசக்கர வாகணம் வைத்திருந்தும் நேரத்திற்கு அலுவலகமோ, நேர்கானலோ செல்ல முடியாமல் பேருந்திற்காய் காத்திருக்கும் இளைஞர்கள், பேருந்து நெரிசலில் இடிபட்டு மனம் நொந்து கொள்ளும் மகளிர் என இவர்கள் செய்யும் ஆறு மணி நேர எரிபொருள் பதுக்கலால் எத்தனை சிரமம். இவ்வாறு இவர்கள் விற்கும் அதிகப்படியான பணம், கருப்பு பணமாக பெட்ரோல் பங்கு உரிமையாளர்களின் கல்லா பெட்டியில். இதுயெதுவும் பங்குகளுக்கு, பெட்ரோல் சப்ளை செய்யும் நிறுவணங்களுக்குத் தெரியாதா. அல்லது அமைதியாக வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகளுக்குத்தான் தெரியாதா. தெரிந்தும் ஏன் இன்னும் மௌனம். இந்த பதுக்கல் நாடகங்களுக்கு முடிவுதான் என்ன…?


No comments:

Post a Comment