Tuesday, June 8, 2010

ஏமாற்றாதே... ஏமாறாதே...

பயணிகள் இறங்குவதற்காய் காத்திருந்த இரயில் புறப்படத் தயாரானது. தனது சாமான்களையும், தன்னோடு இறங்கிய முகம் தெரியாத நான்கு, ஐந்து நபர்களையும் விடுத்து நாள் முழுதும் தன்னைச் சுமந்து வந்த இரயிலை வெறித்துப் பார்த்தபடி இருந்தவன் சட்டென சுயநினைவுக்கு வந்தவனாய் சாமான்களை சரிபார்த்தபடியும் பலமுறை பிரித்து படித்த அதே தெரியாத முகவரியை மீண்டும் வாசித்தபடியும் மெதுவாய் இரயில் நிலையத்திலிருந்து வெளியே நடக்கலானான் அவன்.


மின்சாரம் போயிருந்த அந்த அதிகாலைப் பொழுதில் லாந்தர் விளக்கொளியில் தேநீர் கொடுக்கும் குவளைகளைக் கழுவியபடியும், பால் கொதிக்கும் மண்ணெண்ணெய் அடுப்பிற்கு காற்று அடித்தபடியும் இருக்கும் தேநீர் கடையை பார்த்ததும் சுறுசுறுப்பிற்காய் தேநீர் ஒன்றை கேட்டு பெற்றுக் கொண்டான். மெதுவாய் தன்னை ஆசுவாசப்படுத்தியவாறு தேநீருக்கான சில்லறையை எண்ணிக் கொடுத்துவிட்டு, முகவரி காகிதத்தை, அருகிலுள்ள ஆட்டோகாரரிடம் காண்பித்து விசாரிக்கலானான்.


ஆசாமி ஊருக்கு புதுசு என புரிந்து கொண்டு ஐம்பது ரூபாய் தொலைவில் இருக்கும் அந்த இடத்திற்கு இருநூறு ஆகும் என ஆட்டோகாரன் பேரம் பேசத் தொடங்க, நூற்றியைம்பதுக்கு முடித்தபடி ஆட்டொவில் ஏறி அமர்ந்தான் அவன். மளிகை கடை வாசலில் கோணிப்பையை பாயாக்கி படுத்திருந்த பிச்சைக்காரன், யாருமே இல்லாத இராத்திரியில் ஆட்டொ வெளிச்சத்தைக் கண்டு தெருமுனை வரை துரத்தும் நாய் என பதினைந்து நிமிட பயணம் கரைந்தது. இவ்வளவு பக்கம் இருக்கும் இடத்திற்கு நூற்றியைம்பது ரூபாய் கேட்கிறானே படுபாவி என்ற அவனின் முனுமுனுப்பைக் காதில் வாங்காதவாறு பணத்தை எண்ணிச் சட்டைப்பையில் போட்டவாறு அடுத்த சவாரிக்கு தயாரானான் ஆட்டொகாரன்.


அவனை இறக்கித் திரும்பும் வழியில் வண்டியை நிறுத்த கையாட்டும் போலீஸுக்குப் பயந்தபடி வண்டியை ஓரம் கட்டும் ஆட்டோகாரனைப் பார்த்து “ஸ்டேஷனுக்கு வண்டியை ஓட்டு” என்றபடி அமர்ந்தார் இன்ஸ்பெக்டர். ஏமாற்றி சம்பாதித்த நூறு ரூபாய்க்கு ஈடாக தெரிந்தே ஏமாறப் போகும் இருநூறு ரூபாய் தொலைவில் இருக்கும் ஸ்டேஷனை நினைத்து ஆட்டொவை ஓட்டத் தொடங்க, எங்கோ தேநீர்கடையில் பழைய பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. ஏமாற்றாதே, ஏமாறாதே… ஏமாறாதே, ஏமாற்றாதே…

No comments:

Post a Comment