Wednesday, June 9, 2010

இக்கரைக்கு அக்கரை

அன்று தான் எனக்கு வேலையில் சேர்ந்த முதல் நாள். அந்த மாபெரும் பன்னாட்டு ஜவுளி சந்தையில் பத்தாம் வகுப்பே படித்திருந்த எனக்கு விறபனை பிரதிநிதியாக வேலை. பண்டிகை காலமானதாலும், தரத்திற்கு பெயர் போன கடை என்பதாலும் ரேஷன் கடை மண்ணெண்ணெய்க்கு வரிசையில் நிற்பது போன்று குறைவில்லாத கூட்டம். ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் இன்முகத்தோடு பேசி விற்பனை செய்ததில் நேரம் போனதே தெரியவில்லை.


அதே கடையில் மூன்றாம் தளத்தில் பணி புரியும் என் பள்ளித் தோழன் மதிய உணவிற்கு நேரமாகிவிட்டது வா என அழைக்கும் போது தான் புரிந்தது கண்ணிமைக்கும் நேரத்தில் அரைநாள் முடிந்து விட்டது என்பது. பக்கத்தில் நின்றிருப்பவரிடம் அறிமுகம் கூட செய்து கொள்ள முடியவில்லை. சாப்பிடும் வேளையில் நண்பன் சக பணியாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்தான். அனைவரிடம் பெயர் பரிமாற்றம் செய்து சிரித்தே பேசிக் கொண்டிருந்தாலும் அவன் மட்டும் எனக்கு பொறாமையை ஏற்படுத்தினான். ஆம், அவன், அவன் ஒரு வெள்ளையன். அவனது ஆங்கிலம் என்னை அவன் மேல் பொறாமை கொள்ள வைத்தது. ஒருவாறாக சாப்பிட்டு முடித்துவிட்டு பணிக்கு திரும்பினேன்.


வேலையைச் செய்து கொண்டிருந்த போதும் எனது பார்வை எனது தளத்திலேயே இருக்கும் அந்த வெள்ளையனை அவ்வப்பொது நோட்டம் விடுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவன் இருந்தது வெளிநாட்டினருக்கான பிரத்தியேக விற்பனை இடம். பத்தாம் வகுப்பே படித்திருந்த எனக்கு அவன் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் அழகாக “How May I help You Sir” எனக் கேட்கும் தொனி மேலும் அவன் மேல் பொறாமையை வளர்த்து விட்டது. கூட்டம் அதிகமாகத் தொடங்கியதும் முதலாளி என்னைக் கவனிப்பது போல தோன்றியதாலும் வேலை மேல் கவனம் செலுத்த தொடங்கினேன். ஒருவழியாக முதல் நாள் வேலை நன்றாக முடிந்தது.


வேலை முடித்து திரும்பிய சமயம், நான் எதார்த்தமாய் ஏதாவது கேட்க நண்பன் தவறாகபுரிந்து கொண்டு விடுவானோ என கேட்க நினைத்து கேட்காமலேயே விட்டுவிட்டேன் நண்பனிடம் அந்த வெள்ளையனைப் பற்றி. நாட்கள் ஒன்று இரண்டு என கடக்கும் ஒவ்வொரு நாளும் என்னுள் பொறாமையும் வளர்ந்து கொண்டே இருந்தது. “இவ்வளவு சரளமாக ஆங்கிலம் பேசும் இவன் இங்கு எதற்கு வேலை செய்கிறான்” என்ற கேள்வி மட்டும் இடைவிடாது மண்டையை குடைந்து கொண்டே இருந்தது. திடீரென எனக்கு மூன்றாம் தளத்திற்கு இடமாற்றம். நண்பனோடு நாட்கள் வேகமாக கரைந்தது. வெள்ளையனை மறந்து போய் இருந்த சமயம்.


வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் முடிந்து போயிருந்தது. கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த முதல் மாத சம்பளம். அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு வேட்டி என கலர்கலர் கனவுகளோடு சம்பளம் வாங்க வரிசையில் நிற்க எனக்கு பின்னால் ஏதோ குறுகுறுவென திரும்பி பார்க்க வெள்ளையன். சம்பளம் வாங்கும் சந்தோஷத்தில் அவனைப் பார்த்துச் சிரித்தவாறு முன் நகர்ந்து கையெழுத்துப் போட்டு பணத்தை எண்ணிக் கொண்டிருந்தேன். சம்பளப் பட்டுவாடாவில் இருந்த எனது அழகான குன்டு குன்டான கையெழுத்தைப் பார்த்து பெருமூச்செறிந்தபடி அந்த வெள்ளையன் கைநாட்டு வைக்க விரலில் மை தேய்த்துக் கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment