Monday, October 18, 2010

சவால் -சிறுகதை

பாகம்-1

(இடம்: நேரு பூங்கா; நாள்: அக்டோபர் 27; நேரம்: மாலை 6 மணி)


காதலர்களின் சில்மிஷங்களுக்காகவே உருவாக்கப்பட்டது போல் காட்சியளிக்கும் ஆளரவமில்லாத பூங்கா. காமினியின் மடியில் தலை வைத்து படுத்திருக்கும் சிவா மெதுவாக காமினியின் கழுத்தை வளைத்து உதட்டில் தேனெடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். காமினியோ, மூன்று மாதத்திற்கு முன் தனது காதல் உருவாக அஸ்திவாரமாக அமைந்த நிகழ்ச்சியான, “பேருந்து நிலையத்தில் ஆட்டோவைப் பிடிக்க போராடிக் கொண்டிருந்த சிவாவின் பர்ஸைத் திருட முயலும் போது சிவாவிடம் அகப்பட்டு கொண்டதை” நினைத்துப் புன்னகைத்தவாறு அமர்ந்திருந்தாள். அதன்பின், காமினி அழகில் மயங்கி, காமினியின் மனதைத் திருட, சிவா காமினியின் பின்னால் சுற்றியது எல்லாம் தனிக்கதை.

சிவா மெதுவாக பேச்சை ஆரம்பித்தான். காமு… காமு… “இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கப் போகிறாய்”, இந்தத் திருட்டுத் தொழிலை விட்டு விடலாம் இல்லையா என்றான்.


காமினி சிவாவை வாஞ்சையுடன் பார்த்தவாறு, “வருகிற முப்பதாம் தேதி தான் கடைசி”, அடுத்த மாதத்திலிருந்து நாம் புதிதாக வாழ்க்கையைத் தொடங்கி விடலாம் என்றாள்.


"அது என்ன முப்பதாம் தேதி கணக்கு" என்று சினுங்கியவாறு சிவா, காமினியின் நெற்றியில் முத்தம் பதித்தான்.


அது… அது… ரகசியம்…. என்று கண்ணைச் சிமிட்டியவாறு, சிவாவின் கேசத்தைக் கலைத்து விட்டு, நேரமாகி விட்டது, “நான் வருகிறேன்” என்று கிளம்பிச் சென்றாள்.


அவள், “ஆட்டொவை நிறுத்தி அண்ணா நகர் 4th ஸ்டிரீட் போப்பா” என்று சொல்லும் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சிவா, திடீரென்று அலறிய தனது மொபைலின் அலறலுக்கு உயிர் கொடுத்து பேசத் துவங்கினான்.

பாகம் – 2

(இடம்: கமிஷனர் அலுவலகம்; நாள் : அக்டோபர் 28; நேரம்: காலை 10 மணி)


கனேஷ், மீண்டும் ஒரு முறை அந்த மொட்டைக் கடுதாசியைப் படித்துப் பார்த்தார். ஒன்றும் பிடிபடவில்லை. குட்மார்னிங் சார் என்ற குரல் கேட்டு நிமிர்ந்த கனேஷ், எதிரில் சிவா நிற்பதைக் கண்டு பிரகாசமடைந்தவராய், குட்மார்னிங் சிவா என்றவாறு கைகுலுக்கினார்.


சிவாவே பேச்சை ஆரம்பித்தான். “ என்ன சார், திடீர்னு நேற்று இரவு போன் போட்டு வரச் சொல்லி இருந்தீங்க” எதுனா பிரச்சினையா என்றான். கனேஷ், ஒன்றும் பேசாமல் கையிலிருந்த மொட்டைக் கடிதத்தை சிவாவின் பக்கம் நகர்த்தினார். கடிதத்தை வாங்கிப் பிரித்த சிவா அதில் எழுதப்பட்டிருந்த “ கடினத்தாது கடத்தல், இரண்டு பத்து முப்பது, முடிந்தால் பிடி” என்ற வாசகங்களைப் படித்து முடிக்கவும், கனேஷ் பேச ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.


கடிதம் என்ன சொல்ல வருகிறது என உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா சிவா என மோவாயைச் சொரிந்தவாறு சிவாவைப் பார்த்துக் கேட்டார் கனேஷ். சிவா, கனேஷைப் பார்த்து, சார், “எனக்குப் புரிந்த வகையில், கடினத் தாது என டைமன்டைக் குறிப்பிட்டிருக்கலாம்”. டைமன்ட் கடத்தல், முடிந்தால் பிடி, ஓகே. ஆனால் இந்த இரண்டு பத்து முப்பது என்பது எதைக் குறிக்கிறது எனத் தெரியவில்லையே என்று நெற்றியைச் சுருக்கினான்.


கனேஷ் சிவாவைப் பார்த்து, “சிவா நான் அவசர வேலையாக டெல்லி செல்ல வேண்டி இருக்கிறது. இந்த கேஸை ஏன் நீங்கள், உங்கள் துப்பறியும் நிறுவனத்தின் மூலமாகச் செய்து தரக் கூடாது. இது எனக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரும் உதவியாக இருக்கும்” என்றார்.


சார், அப்படியே ஆகட்டும். நீங்கள் கவலைப்படாமல் டெல்லி சென்று வாருங்கள். நான் இந்த கேஸைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி கனேஷுடன் கைகுலுக்கி விடைபெற்றான் சிவா.

பாகம் – 3

(இடம்: காமினி வீடு; நாள்: அக்டோபர் 28; நேரம்: மதியம் 12 மணி)


குளித்து முடித்து ஈரக்கூந்தலைத் துவட்டியபடி துடித்துக் கொண்டிருக்கும் அலைபேசியை ஆன் செய்து காதுக்கு கொடுக்கிறாள் காமினி. எதிர்முனையில் இருந்து பேசிய குரல் “ கடினத்தாது கடத்தல், இரண்டு பத்து முப்பது, பீச் ரெஸார்ட்” எனச் சொல்லி போனைத் துண்டித்தது.


போனை வைத்து விட்டு, சமையலறைக்குள் நுழைந்து பிரிட்ஜிலிருந்து பிஸ்கட் மற்றும் பழங்களை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் டி.வியின் முன் அமர்ந்தாள். ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டிருந்த காமினி எதிலும் மனம் செல்லாமல் டிவியை அனைத்து விட்டு, சாப்பிட்ட தட்டை உள்ளெடுத்துச் சென்று வைத்தாள்.


சிவாவைப் பார்த்தால் நன்றாயிருக்கும் என்று எண்ணியவளாய், வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியில் வந்தவள், சிவாவிற்கு போன் போட்டவாறு நடக்கத் தொடங்கினாள். இரண்டு மூன்று முறை போன் போட்டும் சிவா எடுக்காததால் “ எங்கு போயிருப்பான்” என சலித்தவாறு சாலையைக் கடக்க முயன்றாள்.

அதே சமயம், வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த சிவா, தொடர்ந்து யார் நமக்கு கால் செய்வது என்று வண்டியை ஓரம் கட்டி மொபைலைப் பார்த்து, காமினி எதற்கு இத்தனை முறை கூப்பிடுகிறாள் என்று யோசித்தவாறு அவளுக்கு போன் செய்யத் தொடங்கினான்.


சாலையைக் கடந்தவாறு தனக்கு வந்த சிவாவின் போனை ஆன் செய்ய, எங்கிருந்தோ வந்த ஒரு ஆட்டோகாரன் அவள் மீது மோத எல்லாம் ஒரு நிமிடத்தில் முடிந்து போனது. அதற்குப் பின் சிவா பல முறை கூப்பிட்டுப் பார்த்தும் போன் எடுக்கப்படாததால் வெறுத்துப் போய் அலுவலகத்திற்குப் புறப்பட்டான்.


அடிபட்டுக் கிடந்த காமினியை ஆம்புலன்ஸ் ஏற்றிச் செல்ல, அதே சமயம் அலுவலகம் அடைந்த சிவா மீண்டும் காமினிக்கு போன் செய்ய, ஆம்புலன்ஸில் இருந்த நர்ஸ் போனை ஆன் செய்து காமினி அடிபட்ட செய்தியைச் சொல்லி, மருத்துவமனை முகவரியும் சொல்லி போனை கட் செய்கிறாள்.


போனை வைத்த சிவா, கமிஷனர் கொடுத்த வேலையை தள்ளி வைத்து மருத்துவமனைக்கு புறப்பட்டான். மருத்துவமனை சென்று, அவளைப் பரிசோதித்த டாக்டரிடம் அவளது உடல் நலனை விசாரித்து விட்டு சிவா, காமினியைப் பார்க்கச் சென்றான்.


மயக்க நிலையில் இருந்த காமினி ஏதோ முனுமுனுப்பதைப் பார்த்து, என்ன சொல்கிறாள் எனக் கேட்க காது கொடுத்தவன் முகம் கலவரமானது. காமினி மயக்க நிலையில், “ கடினத்தாது கடத்தல், இரண்டு பத்து முப்பது, பீச் ரெஸார்ட்” எனத் தொடர்ந்து முனகிக் கொண்டிருந்தாள்.


சற்று நேரம் யோசித்தவன், மீண்டும் டாக்டரிடம் சென்று, “ டாக்டர், நான் எப்பொழுது காமினியை அழைத்துச் செல்லலாம்” எனக் கேட்டான். டாக்டர் சிரித்துக் கொண்டே சிவாவைப் பார்த்து, பலத்த காயம் எதுவும் இல்லை, நாளை காலை வந்து நீங்கள் அழைத்துச் செல்லலாம் என்றார். சிவாவும், “ சரி டாக்டர், நாளை சந்திப்போம் என்று சொல்லியவாறு அலுவலகத்துக்கு கிளம்பிச் சென்றான்.


காமினிக்கு மயக்கம் தெளிந்து, தான் ஆஸ்பிடலில் இருக்கிறோம் எனப் புரிய சற்று நேரம் பிடித்தது. கஷ்டப்பட்டுக் கண்ணைத் திறந்த காமினியை, ரிலாக்ஸ், ரிலாக்ஸ், “ஒன்னும் பிரச்சினை இல்லை, சின்ன ஆகிஸிடென்ட் தான்” என்று இரவு ரோந்துக்கு வந்த டாக்டர் சொல்ல கண்ணை மூடி உறங்கத் தொடங்கினாள்.


இனி பிரச்சினை எதுவும் இல்லை, நாளை காலை இந்த ஊசியைப் பேஷன்டுக்கு போடு என அடுத்த நாள் காலைக்கான இன்ஸ்ட்ரக்ஷனை நர்ஸுக்குக் கொடுத்தவாறு அடுத்த வார்டுக்கு நகரத் தொடங்கினார் டாக்டர். மெல்ல ஓரக்கண்ணில் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்து, “டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றி விட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.”

பாகம் – 4

( இடம்: மருத்துவமனை; நாள்: அக்டோபர் 29; நேரம்: காலை 10 மணி)


அவசர அவசரமாய் மருத்துவமனை சென்ற சிவா, பெட்டில் காமினி இல்லாததைக் கண்டு, “தன் கேஸுக்கு துருப்புச் சீட்டாய் இருப்பாள்” என்று எண்ணியவளைக் கோட்டை விட்டு விட்டோமோ என யோசித்தவாறு, காமினியைப் பற்றி விசாரிக்க டாக்டரின் அறைக்குள் நுழைந்தான்.


சிவாவைப் பார்த்ததும் சூடான டாக்டர், “யார் சார் அந்த பொண்ணு, மெடிக்கல் பில்லுக்கு பணம் கட்ட பயந்து கொண்டு உயிரைக் காப்பாற்றிய எங்களை ஏமாற்றி இரவோடு இரவாக ஓடிப் போய் இருக்கிறாள்”. மரியாதையாக நீங்கள் பணம் கட்டுங்கள். இல்லையேல் போலிஸில் கம்ப்ளெயின்ட் கொடுக்க வேண்டி வரும் என்று மிரட்டினார்.


ரவிக்கு, காமினிச் சிகிச்சையின் போது ஏதாவது அவசரம் எனில் தொடர்பு கொள்ள தனது முகவரியை மருத்துவமனையில் கொடுத்திருந்தது நியாபகம் வர, சாரி சார், தப்பு நடந்து விட்டது இப்போது பில் செட்டில் செய்கிறேன் என்று தன் விதியை நொந்தவாறு சிவா டாக்டரின் அறையில் இருந்து வெளியே வந்தான்.


வெளியே வந்தவன் ஒரு தம்மைப் பற்ற வைத்தவாறு, காமினி பிக் பாக்கெட் மட்டும் செய்பவளா, இல்லை கடத்தல்காரியா, யார் என்ன என்று எதுவும் தெரியாமல் எப்படி நான் அவள் அழகில் மயங்கி காதலிக்கத் தொடங்கினேன் எனப் பலவாறாய் சிந்தித்தவாறு, கடைசியில் காமினியுடன் பேசினால் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கிடைக்கும் என காமினிக்கு போன் செய்யத் தொடங்கினான்.


போன் இனைப்பு கிடைத்ததும் மிச்சமிருந்த சிகரெட்டை கடைசியாக ஒரு இழுப்பு இழுத்து விட்டு எஞ்சியதை காலில் நசுக்கினான். மறுமுனையில் மிகவும் டயர்டாகப் போனை எடுத்த காமினி, சொல்லு சிவா என்றாள். போனிலேயே அவளை ஒரு பிடி பிடித்து விட வேண்டும் என்று எண்ணிய சிவாக்குத் தான் நேற்று காமினியை மருத்துவமனையில் சந்திக்கும் போது அவள் மயக்கமாக இருந்தது நினைவு வர பேச்சை, “ ஒன்னுமில்லை காமினி, நேற்று போன் பேசிட்டிருந்த போது திடீர்னு கட் ஆயிடுச்சு. அதுக்குப் பிறகு எத்தனை முறை கூப்பிட்டாலும் நீ போனை எடுக்கலை. இராத்திரியெல்லாம் நாட் ரீச்சபில்ல இருந்ததா” அதான் என்னாச்சுனு கேட்கலாம்னு கூப்பிட்டேன் என்று மாற்றினான்.


காமினி சாதாரணமாக, “ நேற்று உன்னுடன் பேசிக் கொண்டிருந்த போது ஒரு சின்ன ஆக்சிடென்ட்பா”, “ ஒரு ஆட்டோக்காரன் மோதிட்டான்” அதான் என்று பேசி முடிக்குமுன்னே, சிவா என்னாச்சு காமினி, “அடி எதுவும் பலமாப் படலையே” “இப்ப நீ எங்க இருக்க” என்று பதறினான்.


காமினி சிவாவிடம், “சின்ன அடிதான்பா. வீட்டில் தான் இருக்கிறேன். சாயந்திரம் நேரு பார்க்ல பார்க்கலாம், இப்ப எனக்கு டயர்டா இருக்கு. போனை வைச்சிடவா என்று கேட்டுக் கொண்டே சிவாவின் பதிலை எதிர்பாராமல் போனைக் கட் செய்தாள்.


சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்த சிவாவுக்கு, காமினி, இரண்டு நாட்களுக்கு முன்பு அண்ணா நகர் 4th ஸ்டிரீட்டுக்குப் போப்பா என ஆட்டோகாரனிடம் சொன்னது நினைவு வர வண்டியை ஸ்டார்ட் செய்து அண்ணா நகருக்கு கிளம்பினான். போகும் வழியில் எதற்கும் இருக்கட்டுமே, என மில்க், பிரெட், பழம் எல்லாம் வாங்கிக் கொண்டான்.


பாகம் – 5

(இடம்: காமினி வீடு; நாள்: அக்டோபர் 29; நேரம்: மதியம் 2 மணி)


அண்ணா நகருக்கு வந்து காமினியின் வீட்டை அக்கம் பக்கம் விசாரித்துத் தெரிந்துக் கொண்ட சிவா, வீட்டின் காலிங்பெல்லை அழுத்தி விட்டு, தனது பாதுகாப்பு பிஸ்டல் பத்திரமாக இருக்கிறதா என இடுப்பில் கை வைத்து ஒரு முறை சரிபார்த்துக் கொண்டான்.


இந்த நேரத்தில் யாராக இருக்கும் என நினைத்தவாறு கதவைத் திறந்த காமினி எதிரில் சிவா இருப்பதைக் கண்டு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை முகத்தில் வைத்துக் கொண்டு, “ சிவா, நீ எப்படி இங்கே” என விசாரித்தாள். சிவா புன்னகைத்தவாறு, “ உனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுனு கேட்ட பிறகும் கூட உன்னைப் பார்க்க வரலைன்னா நான் என்ன லவ்வர்”, அது சரி, “ உள்ளே கூப்பிடுவியா, வெளியே நிற்க வைத்து இப்படியே அனுப்பிடுவியா” என்றான்.


சாரி சிவா, உன்னைப் பார்த்ததும் ஷாக்காயிட்டேன். உள்ளே வா என்று வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றாள் காமினி. அப்போதுதான் குளித்து முடித்திருப்பாள் போன்று இருந்த காமினியைக் கண்டு என்ன பேசுவது எனத் தெரியாமல், தான் வாங்கி வந்திருந்த பால், பிரெட், பழம் முதலியவற்றை சிவா காமினியிடம் கொடுத்தான்.


காமினி பொய்கோபத்துடன், “ சிவா எதற்கு இந்த பார்மாலிட்டி எல்லாம்” என்றாள். காமினியின் அழகிலிருந்து விடுபட்ட சிவா புன்னகைத்தவாறு, “ என்ன ஆச்சு காமினி, எப்படி இருக்கு உடல் நிலை, அடிபலமா என உண்மையிலேயே வருத்தத்துடன் கேட்பது போலக் கேட்டான்.


காமினி, லேசான அடி தான் சிவா, காலையில் டயர்டா இருந்தது. இப்ப ஆல்ரைட், “ என்ன சாப்பிடுற” எனக் கேட்டு எழ முயன்றவளை இழுத்து பக்கத்தில் அமர்த்திய சிவா, “காமினி, கடினத்தாது கடத்தல்” பற்றி என்ன நினைக்குறே நீ? என்றான். திடீரென்ற சிவா கடினத்தாது கடத்தல் பற்றி கேட்டதும் அதிர்ச்சியுற்ற காமினி, வாயைத் திறக்குமுன் சிவா மீண்டும், “ இரண்டு பத்து முப்பது” பற்றி என்ன நினைக்கிறாய் என்று அடுத்த கேள்வியையும் கேட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினான்.


காமினி சமாளித்தவாறு, என்ன சிவா, என்ன கேட்கிறீர்கள், “என்ன கடினத்தாது கடத்தல்”, “என்ன இரண்டு பத்து முப்பது” என அப்பாவியாகக் கேட்டாள். சிவா ஏளனமாகச் சிரித்தபடி, உனக்கு எதுவுமே தெரியாதா காமினி, நீ உண்மையைச் சொல்ல மாட்டாயா, அப்படியென்றால்,ஸாரி, எனக்கு வேற வழி தெரியலை என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.


நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த காமினி அழுதவாறு, “சிவா நான் போன வாரம் பீச்சில் யாருமில்லை என்று நினைத்துக் கொண்டு டிரெஸில்லாமல் குளித்துக் கொண்டிருந்தேன், ஒருவன் அதைப் போட்டொ பிடித்து வைத்துக் கொண்டு, போட்டோவைத் தர வேண்டுமென்றால் அவன் சொல்லும் ஒரு வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என மிரட்டுகிறான்”. அந்த வேலைதான் இந்த கடினத்தாது கடத்தல் என்றாள்.


சிவா, காமினியைச் சமாதானப்படுத்தியவாறு என்ன விஷயம் என்று முழுவதும் சொல். உன்னை நான் காப்பாற்றுகிறேன். நான் ஒரு தனியார் துப்பறியும் ஏஜென்ட் என்றான். காமினி, சற்று ஆறுதலடைந்தவளாய் பேசத் தொடங்கினாள்.


சிவா, என்னைப் போட்டோ எடுத்து வைத்திருப்பவன் பெயர் பரந்தாமன். கடினத்தாது என்பது டைமன்டைக் குறிக்கும். இரண்டு பத்து முப்பது என்பதில் இரண்டு பத்து என்பது பத்தாம் மாதம் பத்தாம் தேதி வந்துள்ள பேப்பரைக் குறிக்கும். முப்பது என்பது டைமன்டைக் கடத்தப் போகும் தேதி. பத்தாம் தேதி பேப்பரில் டைமென்ட் கண்காட்சி பற்றி ஒரு செய்தி வந்திருக்கிறது. நான் அந்த டைமன்ட் கண்காட்சிக்குச் சென்று ஒரு குறிப்பிட்ட டைமென்டைக் கடத்தி அவ்விடத்தில் இதோ இந்த கண்ணாடிக் கல்லை வைத்துவிட்டு பீச் ரெஸார்ட் சென்று பரந்தாமனைச் சந்திக்க வேண்டும், என தன்னிடம் பார்ப்பதற்கு டைமென்ட் போலவே இருந்த கண்ணாடியைக் காட்டினாள்.


சிவா காமினியை ஆறுதல் படுத்தியவாறு, சரி பரந்தாமன் சொன்னது போலவே நீ டைமன்டைக் கடத்திச் சென்று அவனிடம் கொடுத்து விடு என்று கண் சிமிட்டினான்.


பாகம் – 6

(இடம்: டைமன்ட் கண்காட்சி; நாள்: அக்டோபர் 30; நேரம்: மதியம் 1 மணி)


பரந்தாமன் ஏற்பாடு செய்திருந்த காரில் பெரிய இடத்துப் பெண் போல் டைமென்ட் கண்காட்சிக்கு வந்திறங்கிய காமினியின் அழகில் கண்காட்சிக்கு வந்தவர்கள் அனைவரும் சொக்கிப் போய் இருந்தனர். அவளும் கேஷுவலாக ஒவ்வொரு வைரத்தையும் பார்த்துக் கொண்டு வந்தவள், தான் கடத்த வேண்டிய வைரத்தைப் பார்த்ததும் மிகவும் பரவசமாகி வாவ் என சற்று அதிகமாகவே சத்தமிட்டு விட்டாள்.


அனைவரும் அவளைப் பார்ப்பதைக் கண்ட காமினி, புன்னகைத்தவாறு எதிரில் டைமென்டின் பாதுகாப்புக்காக நின்றிருந்த சிவாவைப் பார்த்து, “சார், இந்த வைரத்தை நான் தொட்டுப் பார்க்கலாமா” எனக் கேட்டாள். சிவா, கறாராக தொட்டுப்பார்க்க எவருக்கும் அனுமதி இல்லை மேடம் என்றான். காமினி சிவாவைப் பார்த்து, “சார்...சார், ஒரே முறை சார் எனக் கெஞ்சும் குரலில் கேட்க” சிவா தங்களை யாரும் பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, சீக்கிரம் மேடம் என்றான்.


காமினி, அவசர அவசரமாய் வைரத்தை எடுப்பது போல எடுத்து கீழே தவறவிட்டு, டைமென்டை தான் கொண்டு வந்திருந்த கைப்பையிலும், தான் கொண்டு வந்திருந்த டைமன்ட் போலிருந்த கண்ணாடியை எடுத்து, சிவாவிடமும் கொடுத்து, சாரி சார். நீங்கள் அவசரப்படுத்தியதால் கை தவற விட்டு விட்டேன் என்று அசடு வழிந்தாள்.


ஏற்கனவே டைமென்ட் கண்காட்சி நடக்கும் இடத்தில் கேமராவைப் பொருத்தி இருந்த பரந்தாமன், காமினி வேலையைக் கனகச்சிதமாக முடித்ததைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டு பீச் ரெஸார்டில் காமினியின் வருகைக்காக காத்திருந்தான்.


காமினி, டைமன்டை எடுத்த பிறகும், சற்று நேரம் கண்காட்சியில் உலாத்தி விட்டு, தன் மேல் எவருக்கும் சந்தேகம் வரவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு போன் பேசிக் கொண்டே வந்து வெளியில் நின்றிருந்த காரில் ஏறி பீச் ரெஸார்டுக்கு விரைந்தாள்.


சிவா, காமினி வெளியேறியதைப் பார்த்து, யாருக்கும் தெரியாமல் தானும் வெளியே வந்து தனது வண்டியை பக்கத்தில் இருக்கும் போலிஸ் ஸ்டேஷனுக்கு செலுத்தியவாறு கமிஷனருக்கு போன் செய்து நடந்ததைத் தெரியப்படுத்தினான்.

பாகம் -7

(இடம்: பீச் ரெஸார்ட்; நாள்: அக்டோபர் 30; நேரம்: மாலை 5 மணி)


பீச் ரெஸார்ட் நெருங்க நெருங்க, தன்னை யாரும் தொடரவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டதும் தான் காமினிக்கு சற்று படபடப்பு குறைந்தது. பீச் ரெஸார்ட் வந்ததும் தனது ஹான்ட்பேக்கில் டைமன்ட் இருக்கிறதா என மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டு உள்நுழைந்தாள்.


எங்கே யாரையும் காணோமே என்று வீட்டைச் சுற்றி சுற்றி பார்த்த காமினி, வெல்கம் காமினி என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்க்க மாடிப்படிக்கட்டு வழியாக பல்லிளித்தவாறு இறங்கி வந்து கொண்டிருந்தார் பரந்தாமன். காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே என்று பாராட்டினார் பரந்தாமன்.


“தான் டைமென்டைக் கடத்தி வந்து இருப்பேன் என இவருக்கு எப்படி இவ்வளவு நம்பிக்கை” எனக் குழப்பமாக பார்த்த காமினியைப் பார்த்து பரந்தாமன், “என்ன காமினி, அப்படி பார்க்குறே”, எனக்கு எப்படி நீ டைமன்டைக் கடத்திட்டு வந்திட்டேன்னு தெரிஞ்சதுனா. இந்த டைமென்ட் கண்காட்சிக்கு கண்காணிப்பு ஏற்பாடு செய்ததே நான் தான். ஏற்பாடு செய்யும் போது போலிஸுக்குத் தெரியாமல் ஒரு கேமராவை எனது வசதிக்காக கண்காட்சியை கண்கானிக்க வைத்திருந்தேன். அதன் மூலமாக உன்னை நான் கண்கானித்துக் கொண்டே தான் இருந்தேன். வெல்டன் காமினி என்று மீண்டும் பாராட்டி விட்டு டைமன்டை பெற கை நீட்டினார் பரந்தாமன்.


திடீரென்று, பெரிய போலிஸ் பட்டாளத்துடன் பீச் ரெஸார்டை சுற்றி வளைத்து உள் நுழைந்த சிவா, பரந்தாமன், இனி நீங்கள் தப்பிக்க முடியாது. உங்களை நான் கைது செய்கிறேன். நீங்கள் இப்பொழுது சொல்லியது எல்லாம் காமினியின் ஹான்ட்பேக்கில் வைக்கப்பட்டிருக்கும் ஆடியோ ரெக்கார்டரில் ரெக்கார்ட் செய்யப்பட்டு விட்டது என பரந்தாமன் கைக்கு விலங்கை மாட்டினான் சிவா.

(சிவாவுக்கு கமிஷனரிடம் பாராட்டு, சிவா காமினி திருமணம் இது எல்லாம் சொல்லவும் வேண்டுமா என்ன.... சொல்லாமல் விடப்பட்ட ஒரே ஒரு சஸ்பென்ஸ், “பரந்தாமன் சொல்லியவாறே நீ டைமன்டைக் கடத்திக் கொண்டு போ எனக் காமினியிடம் சொல்லிக் கண் சிமிட்டிச் சென்ற சிவா, அன்று இரவு காமினியின் கையில் டைமென்ட் போலிருந்த கண்ணாடியை, டைமன்ட் இருக்கும் இடத்தில் மாற்றி வைத்து உண்மையான டைமன்டையே காமினியிடம் கொடுத்து வைத்திருந்தான், ஒரு வேளை பரந்தாமன் தப்பிப் போனாலும் டைமன்ட் தன் கையை விட்டுப் போகாமலிருக்க....)


முற்றும்.

2 comments:

கவிநா... said...

அண்ணா சூப்பர்... நிறையத் திருப்பங்கள்.. என்ன நடக்குமோன்னு இருந்துச்சு. சுபம் போட்டு முடிச்சுட்டீங்க... நல்லா இருக்கு.

பிரசாத் said...

நன்றி தங்காய்...

Post a Comment