Thursday, August 16, 2012

கற்பனை - அதீதத்தில் கடைசிப்பக்கமாக வெளியான கட்டுரை


மனிதனுக்குத் தான் எத்தனை கற்பனை வளம். தனது கற்பனை வளத்தால் இன்று அவன் கண்டும், பயன்படுத்தியும் வரும் கண்டுபிடிப்புகள் தான் எத்தனை. கற்பனை வளம் மிகப் பெரிய பயன்களைத் தந்தாலும் மனிதனின் கற்பனையே சில சமயம் அவனுக்கு எதிரியாக அமைந்து விடுகிறது என்றால் மிகையல்ல என்று தான் சொல்வேன் நான். எப்படி என்கிறீர்களா.

நமது கற்பனை வளத்தால் நாம் எளிதான காரியத்தைக் கூட கடினமாக்கி விடுகிறோம். இன்றைய எந்திரத்தனமான வாழ்க்கையில் பெரும்பாலும் நாம் அனைவரும் இந்த பிரச்சினையை சந்தித்து கொண்டு தான் வருகிறோம். ஆனால் இதனை வெறும் புரிதலின் பிழை என்று தட்டிக் கழித்து விட்டு அடுத்த வேலைக்குச் செல்கிறோம் நாம்.

பெரும்பாலும் இந்த கற்பனை தரும் தவறான புரிதலுக்கு காரணம் என்னவென்று பார்த்தோமானால் ஒரு விஷயத்தின் மீது தரும் அதீதமான கட்டமைப்புகளே ஆகும். உதாரணத்திற்கு தேர்வு எழுதும் ஒரு மாணவனை எடுத்துக் கொள்வோம். தேர்வொன்றில் ஆசிரியரின் கவனக் குறைவால் ஒரு இரண்டு மதிப்பெண் கேள்வியானது ஐந்து மதிப்பெண்கள் பிரிவிலோ அல்லது பத்து மதிப்பெண்கள் பிரிவிலோ வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

மாணவனின் மனநிலை என்னவாக இருக்கும். இரண்டு மதிப்பெண் வினாவை பத்து மதிப்பெண்கள் பிரிவில் ஆசிரியர் ஏன் கேட்கப் போகிறார். இது வேறு ஏதாவது கேள்வியாக இருக்குமோ. அல்லது இதற்கு பதிலை விளக்கமாக எழுத வேண்டி இருக்குமோ. நமக்குத் தெரிந்தது இரண்டு மதிப்பெண்களுக்கு ஏற்ற அளவில் தானே. என்ன செய்யலாம் என யோசித்து நன்கு தெரிந்த அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் அதனை விலக்கி வைத்து விட்டு அதற்கு பதிலாக வேறு கேள்விக்கு பதிலளித்து பெரும்பாலான மாணவர்கள் மதிப்பெண்ணைக் குறைவாக வாங்கி இருப்பார்கள். சிலரோ இரண்டு மதிப்பெண்ணுக்குரிய விடையை எழுதி ஐந்து அல்லது பத்து மதிப்பெண்கள் வாங்கி இருப்பார்கள். அந்த கேள்வியை எழுதாமல் விட்டவர்கள் அப்பொழுது தான் தனது மடத்தனத்தை உணர்வார்கள்.

பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல அலுவலகங்களிலும் கூட நாம் பல சமயம் இதை பார்த்திருப்போம். நமக்கு நன்கு தெரிந்த ஒரு இலகுவான வேலை கொடுத்து அதனைச் செய்யத் தேவையான கால அவகாசத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிக கால அவகாசத்தை வாய்ப்பாக அளித்து இதனை இந்த காலகட்டத்திற்குள் செய்ய வல்லவர் யாரேனும் இருக்கிறீர்களா என கேட்கும் போது, நமது திறமையை மீறி ஒரு சந்தேகம் என்னும் கற்பனை கிளம்பி, இந்த சிறிய வேலைக்கு இத்தனை கால அவகாசம் கொடுக்கிறாரே மேலாளர், நாம் தான் அவர் சொன்ன வேலையைத் தவறாக புரிந்து கொண்டோமா, இதனை ஒப்புக் கொள்ளலாமா வேண்டாமா என பெரும்பாலானோர் பல வகையான சிந்தனைகளில் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சிலர் அந்த வேலையை வாங்கிக் கொண்டு நல்ல பெயரை வாங்குவதோடு மட்டுமல்லாமல் குறைந்த நேரத்தில் வேலையை முடித்து விட்டு மீதமான நேரத்தை மகிழ்வோடு பொழுது போக்குவார்கள்.

இது ஏன் இப்படி நடக்கிறது. நமது கற்பனை. இல்லாத ஒன்றைப் பற்றி அதிகம் சிந்தித்து இருப்பதை கோட்டை விடும் கற்பனையே இந்த பிரச்சினைக்குக் காரணம். இந்த கற்பனைக்குக் காரணமே நம்மை எதிர்நோக்கி வரும் விஷயத்தை, நாம் விஷயமாக மட்டும் பார்க்காமல் அதன் மீதான கட்டமைப்புகளைப் பார்ப்பதே ஆகும். மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி உண்டு. வில்வித்தை பயிற்சியின் போது அர்ஜுனனுக்கு தான் குறி வைத்த குருவியின் கண் மட்டுமே இலக்கு நிர்ணயத்தின் போது  தெரிந்ததாம். ஆனால் மற்றவர்களுக்கோ குருவி அமர்ந்திருந்த மரம், கிளை, இலை, குருவி, குருவியின் கண் என ஒவ்வொருவரின் கற்பனைக்கேற்றவாரு தங்களின் இலக்கு தெரிந்ததாம். நாமும் பெரும்பாலும் இப்படித்தான். நமது இலக்கை மட்டும் பாராமல் நமது கற்பனையினால், நமது இலக்கைச் சுற்றி பல கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு இலக்கை அடைய முடியாமல் தவிக்கிறோம்.

இதனை வலியுறுத்தி பீர்பால் கதை ஒன்றும் சொல்லப்பட்டு வருகிறது. அக்பர் அரண்மனையில் வீற்றிருக்கும் பீர்பாலின் அறிவுத் திறமையைக் கேள்விபட்டு பல நாட்டு அறிஞர்களும் அவரது அறிவு திறத்தைச் சோதனை போட வந்துக் கொண்டிருந்த காலம் அது. அக்பரின் அமைச்சர்கள் எல்லோரையும் முட்டாள்களாக்கியே தீர வேண்டும் என சூளுரைத்து புறப்பட்ட ஒரு அறிஞர் அக்பரின் அரசவைக்கு வருகிறார். தான் கையோடு கொண்டு வந்திருந்த பெட்டியை அரச சபையின் முன் வைத்து இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது எனச் சொல்பவரே உண்மையில் அறிஞர். இங்குள்ள எவராலும் இதைச் செய்ய முடியுமா எனக் கேட்டு விட்டு அகம்பாவமாக ஒரு பார்வை பார்க்கிறார்.

அக்பரின் அமைச்சர்களுக்கோ என்ன செய்வது எனப் புரியவில்லை. இவர் யாரென்றே தெரியாது. எங்கிருந்தோ வந்தார். பெட்டியை வைத்தார். அதில் என்ன இருக்கிறது என்று நம்மைக் கேட்டால் நமக்கு எப்படித் தெரிய வரும் அது? என அனைவரும் குழப்பத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, அப்பொழுது தான் சபைக்கு வந்த பீர்பால் இவ்விஷயத்தைக் கேள்விப்பட்டு நேராக சபை நடுவில் வைத்திருக்கும் பெட்டி அருகில் சென்று அதனை திறந்து பார்த்து அதனுள் ஒரு எலுமிச்சை இருக்கிறது என எல்லோருக்கும் எடுத்துக் காட்டினாராம். எல்லோரும் விக்கித்து நிற்க, பீர்பாலே தொடர்கிறார். கேள்வி கேட்டவர் பெட்டியில் என்ன இருக்கிறது எனக் கேட்டாரே ஒழிய, பெட்டியைத் திறந்து பாராமல் அதனுள் என்ன இருக்கிறது என கேட்கவில்லையே என்று விளக்கமும் அளிக்கிறார். அவையினர் கரகோஷம் எழுப்ப, அக்பரின் அமைச்சர்களை அவமானப்படுத்த வந்த அந்த அறிஞர் இறுதியில் அவமானப்பட்டு நின்றார்.


நாம் சராசரி மனிதர்களுள் ஒருவராக, கற்பனையான கடமைப்புகளுக்குள் நம்மை இருத்தி வைத்துக் கொள்ளப் போகிறோமா இல்லை ஒரு அர்ஜுனனைப் போல், ஒரு பீர்பாலைப் போல் இலக்கை மட்டுமோ அல்லது பிரச்சினையை மட்டுமோ பார்த்து வெற்றிக்கான வழியைத் தேடப் போகிறோமா… முடிவு நம் கையில் தான்…

அதீதத்தில் படிக்க லிங்க் : http://www.atheetham.com/?p=1910

No comments:

Post a Comment