Monday, February 7, 2011

பகல் கனவு

அன்று ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை பத்து மணி, மொபைல் அழைப்பின் சத்தம் கேட்டு கண்விழித்தான் வசந்த். போன் பேசி முடித்ததும், சரி எழுந்து விட்டோமே டிபன் சாப்பிட்டுத் தூங்கலாம் என்று முடிவெடுத்து குளிக்கச் சென்றான். குளியல் முடித்து சூடாக இருந்த நூடுலஸை தின்று முடித்து மதியம் செய்ய வேண்டிய செயல்களை திட்டம் போட்டு சரியாக ஒன்றரை மணிக்கு தன்னை எழுப்புமாறு அம்மாவிடம் சொல்லி விட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.

நேரம் மதியம் ஒரு மணி. வசந்தின் தாய், "வசந்த்! மணி ஒன்னாயிடுச்சு, எந்திரி என்று சொல்லிவிட்டுச் சென்றாள்." அரைகுறைத் தூக்கத்தில் அம்மாவின் சத்தம் கேட்டு உறக்கம் கலைந்த வசந்த் நேரம் பார்க்க மொபைலைத் தேடுகிறான். பலமுறைப் பார்த்தும் மொபைலில் நேரம் தெரியாததால் பேட்டரி காலியாகி மொபைல் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டதோ என எண்ணினான். சரி முகம் கழுவலாம் என்று படுக்கையிலிருந்து எழுந்தவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.

வசந்திற்குத் தன்னைச் சுற்றிலும் வெள்ளைச் சுவர் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. கீழே தரைத் தெரியவில்லை. கதவு தெரியவில்லை. எல்லாம் வெறுமையாகத் தெரிகிறது. இத்தனை நாள் பழக்கப்பட்ட வீடு தானே, கண்ணில் பீழை சேர்ந்திருக்கும். அதனால் கண்ணைத் திறக்க முடியவில்லையோ என்றெண்ணி நீரால் முகம் கழுவ சரியாகிவிடும் என்றெண்ணி பாத்ரூமிற்குள் தட்டுத் தடுமாறி நுழைந்தான். கண்களை சுத்தமாக கழுவி, வாயைக் கொப்பளித்து உமிழப் போகும் சமயம், ஒரு சத்தம். "டேய்! என்ன செய்யுற" என்று. மாமாவின் குரலைக் கேட்ட வசந்த் பயத்துடன், வாயில் கொப்பளித்த நீரை தன் கையில் துப்பிவிட்டு, என்ன மாமா என்றான். "பாத்ரூமுக்குள்ள எச்சிலைத் துப்பாம, பெட்ரூமுக்குள்ள எச்சிலைத் துப்பப் பார்க்குற என்று சொல்ல, அவசரத்தில் நீர் எடுத்த திசைக்கு வலப்பக்கம் திரும்புவதற்கு பதில்லாக இடப்பக்கம் திரும்பியது நினைவுக்கு வர, ஒருவாறாக மாமாவைச் சமாளித்து அனுப்பினான்.

கையில் இருந்த எச்சிலை பாத்ரூமிற்குள் கொட்டி விட்டு கையைச் சுத்தம் செய்து கொண்டு பாத்ரூமை விட்டு வெளி வந்தான். அவனுள் பேரதிர்ச்சி, என்ன இது! காலையில் கண் பார்வை நன்றாகத் தானே இருந்தது. திடீரென்று எப்படி கண் பார்வை போயிற்று என்று குழம்பியவனாக இரண்டு அடி முன்னெடுத்து வைக்க எவர் மீதோ இடித்தான். "என்னடா ஆச்சு, எதையோ பறி கொடுத்தவன் போல என்னையப் பார்த்துக்கிட்டே வந்து நேரா என் மேல மோதுற" என்ற மாமாவின் குரலை மீண்டும் கேட்டு வசந்த் அதிர்ச்சி அடைந்தவனாக, " மாமா கண் திடீர்னு மங்கலாகத் தெரியுது. என்னைய கொஞ்சும் டைனிங் டேபிள் வரைக்கும் கொண்டு போய் விடுங்க" என்று சொல்ல, " உனக்கு எப்பவுமே விளையாட்டுத்தான்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரின் செல்போன் அழைக்க ஹலோ என்றவாறு அங்கிருந்து நகர்ந்தார்.

கண்களை கசக்கி கசக்கிப் பார்த்தான் வசந்த். சற்று நிழலுருவமாக காட்சிகள் தென்பட்டது. ஆனால் எவ்வளவு உற்றுப் பார்த்தும் தெளிவாக எதுவும் தெரியவில்லை. "சாப்பிட வாடா" என்ற அம்மாவின் குரல் கேட்டு, "வரேன்மா" என்றவாறு மெதுமெதுவாக டைனிங் ஹாலை நோக்கி சுவற்றைத் தடவியவாறு நிதானமாக நகர்ந்தான். சுவர் முடிந்ததும் டைனிங் ஹால் வந்ததுவிட்டது என்றெண்ணி வாஷ்பேசின் இருக்கும் பைப்பை கையால் துழாவி மீண்டும் கை கழுவிக் கொண்டு எப்போதும் உட்காரும் அவன் இருக்கைக்கு அமரச் சென்றான். அவனது இருக்கைக்குச் செல்லும் முன் நடுவில் ஒரு நாற்காலி குறுக்கே காலிற்குத் தட்டுப்பட, அதனை உட்புறமாகத் தள்ளி தன் இருக்கைச் செல்ல முயல்ல்வதைப் பார்த்து வசந்தின் அம்மா, " ஏன்டா, அங்கதான் அப்பா உட்கார்ந்திருக்காரில்ல அங்க எங்க இடமிருக்கு, இந்தப்பக்கமாக வந்து உட்காரலாமில்லை என்று சொல்லி தட்டை எதிர்புறமாக வைக்கிறார்.

தட்டு எங்கிருக்கிறது எனச் சரியாக ஊகிக்க முடியாத வசந்த் தட்டுத் தடுமாறிச் சென்று ஒரு இருக்கையில் அமர, அம்மா கோபத்துடன் " தட்டு எங்கே வைச்சிருக்கேன், நீ எங்க போய் உட்காருற" என்று திட்ட ஆரம்பிக்க, அதுவரை துக்கத்தை அடக்கி வைத்திருந்த வசந்த் ஓவென்று கதறி அழத் தொடங்குகிறான். என்ன ஆச்சு என்று புரியாத வசந்தின் தாய், அவனருகில் வந்து, "என்ன ஆச்சுடா, ஏன் அழுறே" என்று தலையை வருடியவாறு கேட்க, வசந்த் " அம்மா, தூங்கி எந்திரிச்சதிலர்ந்து எனக்கு கண்ணு தெரியலைம்மா" என்று மீண்டும் கேவி கேவி அழத் தொடங்கினான்.

சட்டென்று எங்கோ இடித்துக் கொண்டதைப் போல உணர்ந்த வசந்த், "என்ன ஆச்சு" என்று பார்க்க படுக்கையின் ஓரமிருந்த சுவற்றில் தலை முட்டிக் கொண்டதை உணர்கிறான். அடிபட்ட இடத்தில் தலையைத் தேய்த்தவாறு கண்களைக் கசக்கிப் பார்க்கிறான். வியர்த்து வழிந்த வசந்திற்கு,"அம்மாவின் குரல் கேட்டு எழுந்தது முதல் கடைசியாக அழுதது வரை" நடந்ததெல்லாம் கனவு என்று தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொள்ள சில பல நிமிடங்கள் ஆயிற்று.

No comments:

Post a Comment