Friday, September 10, 2010

பண்புடன் செப்டம்பர் இதழில் எனது படைப்பு

விழிப்புணர்வு

( உதவி செய்தலினும் உபத்திரவம் செய்யாமை நன்று)

விழிப்புணர்வு. இவ்வார்த்தையை உச்சரித்ததும் நம்து நினைவுக்கு வருவது கண்தானம், இரத்ததானம், எய்ட்ஸ், மரம் நடுதல், நீரை சேமித்தல், காகிதங்களை வீனாக்குதல் போன்றவைகளே. இவை மட்டும் தான் நமக்கு விழிப்புணர்வு தேவைப்படும் விஷயங்களா! பேருந்திற்காய் காத்துக் கொண்டிருக்கிறோம். கூட்ட நெரிசலோடு பேருந்து வருகிறது. முன்டியடித்துக் கொண்டு பேருந்தின் உள் நுழைகிறோம். உள்ளே நுழைந்த பின் எதேச்சையாக மத்தியில் ஒரு இருக்கை காலியாக இருக்கிறது. ஏன் யாரும் உட்காராமல் இருக்கிறார்கள் என்று சிந்தியாமல் அதில் அமர அருகில் சென்றால் தான் தெரிகிறது, அவ்விருக்கைக்கு கீழே யாரோ வாந்தி எடுத்து வைத்திருக்கிறார்கள். முகம் சுளித்துக் கொண்டு திரும்புகிறோம்.

என்றும் போல் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல பேருந்திற்காய் காத்துக் கொண்டிருக்கிறேன். போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நகர முடியாமல் நின்று கொண்டிருக்கின்றன. எனது பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே நின்றிருந்த பேருந்திலிருந்து ஒருவர் பேருந்து சன்னல் வழியாக வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். எவர் மீதும் படாமல் இருக்க வேண்டும் என தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நிதானமாக மெதுவாகவே வாந்தி எடுக்கிறார். ஆனால் உயரம் காரணமாக வாந்தி கீழே சாலையில் பட்டு பேருந்திற்காய் காத்திருப்போர் மீதெல்லாம் தெறித்தது. பேருந்திற்காய் காத்திருப்போர் எல்லாம் அவரை வசை பாடுவதமாய், முகம் சுளிப்பதுமாய் இருந்தார்கள். என் மனம் மட்டும் பழைய சினிமாக்களில் வருவதைப் போன்று ஒரு சுழலைப் போட்டுக் கொண்டு எனது அனுபவத்தை அசை போட பின்னோக்கிச் சென்றது.

நான் தொழில்நுட்பக்கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்த காலம் அது. வருட இறுதியில் எப்போதும் நடப்பது போல செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய பொறுப்பு. மாணவர்களுடன் ஆலோசித்து அவர்கள் இறுதித்தேர்வுக்கு பங்கம் ஏதும் நேராமல் மிகவும் முன்னதாக செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க ஒரு தேதியை முடிவு செய்து, வெளியிலிருந்து வரும் தேர்வுக் கண்காணிப்பாளருக்கும் தகவல் அனுப்பி தேதி ஒருவாறாக முடிவு செய்யப்பட்டு விட்டது. செய்முறைத் தேர்வு நடக்கும் நாளுக்கு முன்னதாக இரண்டு நாள் முன்பிலிருந்து எனக்கு காய்ச்சல். காய்ச்சல் ஒரு புறம், வாந்தி, மயக்கம், உணவு ஒவ்வாமை என பாதிக்கப்பட்டிருந்த நேரம்.

தேர்வைத் தள்ளிப் போட இயலாத நிலை. அனைத்து ஆசிரியர்களும் செய்முறைத் தேர்வில் இருந்த படியால் மாற்று ஆசிரியரும் போட இயலாத நிலை. என்னதான் நடக்கிறது பார்த்து விடுவோம் என்று இறைவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு கல்லூரிக்குக் கிளம்பிச் சென்று செய்முறைத் தேர்விற்கான ஆயத்தப் பணிகள் செய்து முடிக்கவும் வெளியிலிருந்து வரும் தேர்வு கண்கானிப்பாளர் வரவும் நேரம் சரியாய் இருந்தது. அவரை இன்முகத்துடன் வரவேற்று தேர்வை ஆரம்பித்து அரை நாள் முடிந்தது. இடையில் வாந்தி வரும் நிலை வந்தால் வெளியே சென்று வருவதைப் போன்று சென்று என்னை இயல்பாக இருப்பதைப் போன்றே காட்டிக் கொண்டேன்.

மதிய உணவு இடைவேளை. நாகரீகம் கருதி வெளியிலிருந்து வந்த தேர்வுக் கண்காணிப்பாளருடன் சென்று சாப்பிட முடியாவிட்டாலும் கொஞ்சமாக சாப்பிட்டு கொண்டிருந்தேன். உணவு வேளை முடிந்து பிற்பகல் செய்முறைத் தேர்விற்காய் காத்திருந்தவர்களுக்கும் தேர்வு நடத்தி முடிக்க நேரம் மாலை ஆறு மணி ஆயிற்று. வெளியிலிருந்து வந்த அந்த தேர்வுக் கண்காணிப்பாளர் எனது ஊருக்கு பத்து கிலோமீட்டர் முன்னதாக உள்ள ஊரில் வசிப்பவர். அதனால் இருவரும் ஒரே பேருந்தை பிடித்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தோம்.

மாலை நேரம் காய்ச்சல் அதிகமானதாலும், மதியம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாததாலும் வாந்தி வருவது போல இருந்தது. நாங்கள் இருவரும் அமர்ந்திருந்தது வலது புற இருக்கைகளில். ஜன்னல் புறமாக என்னுடன் வந்த அந்த ஆசிரியை அமர்ந்திருந்தார்.
வாந்தி வரும் உச்சக்கட்ட நிலையில் நான் இருந்ததால் சைகை மூலமாக டிரைவரை வண்டியை நிறுத்தச் சொல்லிக் கேட்பதைப் பார்த்து அந்த ஆசிரியை அவசர அவசரமாக அவர்களது பையில் இருந்து ஒரு பாலிதீன் கவரை எடுத்து தந்தார்கள். வாந்தி எடுத்து முடித்த பின் அந்த ஆசிரியை "என்ன ஆச்சு" எனக் கேட்க, நான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அப்பொது தான் சொன்னேன்.

சரியான சமயத்தில் பாலிதின் கவரை கொடுத்தமைக்கு நன்றியும் சொன்னேன். அந்த ஆசிரியை, எனது மகனுக்கு பேருந்தில் சென்றால் வாந்தி வரும். அதனால் எப்பொதும் என்னிடம் பாலிதின் கவர் இருக்கும என்றார். "முடிந்தால் நீயும் உன் பையில் ஒரு பாலிதின் கவரை உன் வசம் வைத்துக் கொள்", எப்பொதும் எவருக்கேனும் உபயோகப்படலாம் என்றும் கூறிச் சென்றார். நண்பனின் அழைப்பால் நிகழ்காலத்திற்குத் திரும்பிய நான் நினைத்துக் கொண்டேன், பாவம் இவருக்கு உதவி புரியவும், ஆலோசனை சொல்லவும் யாரும் கிடைக்கவில்லையே என்று. எனது பேருந்து வந்து விட்டது. அவசரகதியாய் பேருந்தின் உள்நுழைந்தால் தான் உட்கார இடம் பிடிக்க முடியும். மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment