Tuesday, May 25, 2010

சிறுகதை முயற்சி

இராணுவன் கனவு

அப்பா போரில் இறந்து இன்றோடு ஒரு வருடமாகிறது. அப்பாவின் ஆசைப்படி இராணுவத்தில் இன்று துப்பாக்கிகளைச் சுமந்தபடி எதிரி நாட்டுப் படைகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். கடும்குளிரின் பாதிப்பாலும், இரண்டு நாட்களாக நடந்து வந்த களைப்பாலும் இளைப்பாறுகிறார்கள் எனது குழுவினர். ஆனால் என் மனம் இளைப்பாற மறுக்கிறது. அப்பாவைக் கொன்ற எதிரி நாட்டு படை வீரர்களை அழிக்கும் வேகத்தோடு முன்னேறுகிறேன். கண்கள் சொருகுகிறது. நாக்கு வறள்கிறது. கால்கள் தள்ளாடி கீழே விழும் சமயம், தூரத்தில் பறவையின் சிறகாய் எதிரிகளின் கூடாரம்.


மெதுவாய் திரும்பி பார்க்கிறேன். எனது குழுவினர் எனக்கு பின்புறமாய் வெகு தொலைவில் புள்ளிகளாய் இளைப்பாற, எனக்கு முன்னே என்னை ஆசை ஆசையாய் தூக்கி வளர்த்த அப்பாவைக் கொன்ற எதிரி நாட்டு படைகள். எனது இராணுவப் பையைத் தடவிப் பார்க்கிறேன். எதிரிகளின் நான்கு கூடாரங்களுக்கு ஏதுவாய் நான்கு நேரம் சார் வெடிகுண்டுகள். பூனை போல் மெதுவாய் அடி வைத்தும், கழுகு போல் கூரிய பார்வையோடும் மெதுமெதுவாய் எதிரிகளின் கூடாரம் நோக்கி நகர்கிறேன், சோர்வால் உடல் வலுவிழந்த போதும் அப்பாவின் மரணத்திற்கு பழி தீர்க்கும் வெறியோடு.


இதோ நெருங்கி விட்டேன் எதிரிகளின் கூடாரத்தை. எதிரிகளின் இரண்டு ரோந்து படைவீர்கள் மற்ற வீரர்கள் உறங்க காவலாய். இவர்களைக் கொன்றால் தான் நான் கூடாரத்திற்கு வெடிகுண்டைச் சுலபமாகப் பொறுத்த முடியும். மரங்களுக்கிடையே நகர்ந்து மெது மெதுவாய் ஒரு முனையில் இருக்கும் ரோந்து காவலாளியை நெருங்கி விட்டேன். விஷம் தோய்ந்த கத்தியைக் கையில் ஏந்தியபடி காலத்தை எண்ணிக் கொண்டிருக்கிறேன், ஆறு, ஐந்து, நான்கு… விஷ்க்க்க்…. சத்தம் வராமல் இருக்க அவன் வாயை ஒரு கையால் பொத்தியபடி மற்றொரு கையால் கழுத்தில் இறக்கப்பட்ட கத்தியின் பரிசாகத் தெரித்த இரத்தப் பொட்டுகளை முகம் முழுவதும் ஏந்துகிறேன்.


பாதி கிணறு கடந்து விட்டேன். இன்னும் எதிர்முனையில் இருக்கும் ரோந்து காவலாளியும் கொன்று விட்டால் கூடாரங்கள் எளிதில் அழிக்கப்பட்டு விடும். மெதுமெதுவாய் நகர்ந்து அவனையும் இதோ முதலாமவனைக் கொன்றது போல ஆனால் அதிக வெறியுடன் மிகவும் ஆழமாக இறங்கியது கத்தி இரண்டாமவன் கழுத்துக்குள்ளும். ஏதோ இந்த இருவர் தான் என் தந்தையைக் கொன்றதாகவும் அவர்களை பழிதீர்த்துக் கொண்டதாகவும் மகிழ்ச்சி எனக்குள். கூடாரத்தில் தூக்கத்தில் இருப்பவர்கள் விழிக்கும் முன் கூடாரங்களுக்கு வெடிகுண்டுகள் பொறுத்த வேண்டும். முதல் கூடாரத்தில் பொறுத்திய வெடிகுண்டிற்கு 14 நிமிடங்கள் கழித்து வெடிக்குமாறு ஆரம்பித்து ஒவ்வொரு கூடாரத்திற்கும் ஒரு நிமிடமாய் குறைத்து நான்கு கூடாரங்களுக்கும் வெடிகுண்டு பொறுத்தி ஆகி விட்டது.


இனி நான் வந்த வழியில் திரும்பி சென்று எனது ஆட்களுடன் சேர வேண்டியது தான். மிகவும் வேகமாக, அதே சமயம் சத்தம் எழுப்பாமல் எனது ஆட்களின் கூடாரம் நோக்கி நகர்கிறேன். முன்பு மயங்கி விழவிருந்த அதே இடம், எனது ஆட்களின் கூடாரத்திற்கும் எதிரிகளின் கூடாரத்திற்கும் நடுவே. எனது கூடாரத்தின் பக்கம் புள்ளிகள் இங்கும் அங்குமாய் நகர்வதைக் கண்டு உணர்ந்தேன் எனது ஆட்கள் விழித்தெழுந்து என்னைத் தேடுகிறார்கள் என. நேரம் பார்த்தேன். இன்னும் பத்து வினாடிகள் தான் எதிரிகள் கூடாரம் வெடிக்க. எதிரிகளின் கூடாரத்தை வேடிக்கைப் பார்த்தபடி நொடிகளை எண்ணுகிறேன். நான்கு, மூன்று, இரண்டு…… பீங்ங்ங்ங்…. அலாரம் மணியின் ஓசைக் கேட்டு விழித்தெழுந்தேன். எதிரிகளை பழிவாங்கி தந்தையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு இராணுவத்தில் இணைவதற்கு என்னை ஆயத்தப்படுத்துகிறேன், காலணிகளை அணிந்தவாறும் கனவை அசைப்போட்டபடியும்.

2 comments:

அஷீதா said...

ரொம்ப நல்லா இருக்கு. ஆனா சிறுகதை மாதிரி தெரியல..ஆனா ஒரு ராணுவ வீரனோட எண்ணம் கொள்கை ஆசை எல்லாவற்றையும் ஃபீல் பண்ணமுடிந்தது. நல்ல முயற்சி :)

பிரசாத் said...

நன்றி அஷிதா மேடம். முதல் முயற்சி தான் இது. இனி சரிவர எழுத கற்றுக் கொள்கிறேன்.

Post a Comment