Sunday, April 1, 2012

கூடங்குளமும் நானும் - 2

குழப்பங்கள் தொடர்கிறது...

அரசியலைப் பற்றி வீட்டில் பேசினாலே வசை விழும் குடும்பத்தில் பிறந்த நான், எப்படி பேசினேன் அரசியலைப் பற்றி அன்று. அதுவும் பொது இடத்தில்.

குழப்புகிறேனோ... ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன். கடந்த சனிக்கிழமை அவசர வேலையாக கோயமுத்தூர் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். கோயமுத்தூரிலிருந்து சேலம் வரையிலான இரயில் பயணம் அது. நான் அமர்ந்திருந்த பெட்டியில் இரண்டு இந்தி பேசும் நபர்களும் பயணம் செய்தனர். இப்படித்தான் உரையாடல் ஆரம்பமானது.

இரயில் பெட்டியில் தண்ணீர் பாட்டில் விற்கும் சிறுவனிடம் இருந்து தண்ணீரை வாங்கிய ஒருவர் மற்றவரிடம் சொன்னார், ஒருகாலத்தில் இரயில் பெட்டியில் தண்ணீர் இலவசமாகத் தந்தார்கள். இப்பொழுது காசு கொடுத்து வாங்கும்படி இருக்கிறது நிலைமை என்று. இப்படியே இருவரும் நாட்டு நடப்புகளைப் பேசிக் கொண்டும், லஞ்ச லாவனங்களைப் பேசிக் கொண்டும் வந்தபடி இருந்தனர். அறிமுகமில்லாதவரிடம் அதிகம் பேச யோசிக்கும் நான் மௌனமாக அவர்கள் பேசுவதைக் கேட்டு இரசித்தவாறு வந்து கொண்டிருந்தேன்...

திடீரென அவர்கள் பேச்சு கூடங்குளம் அணு உலை பற்றி திரும்பியது. ஒருவர் இன்னொருவரிடம், எங்கிருந்தோ பணத்தை வாங்கிக் கொண்டு இந்த அணு உலையைத் திறக்க விடாமல் செய்கிறார்களே என்று ஒருவர் சொல்ல அடுத்தவரும் அதை ஆமோதிக்க, மெல்ல என்னுள் இருந்த ஏதோ ஒன்று அவர்களிடம் பேசத் தூண்டியது.

ஐயா, காசு வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள் எனச் சொல்கிறீர்களே. அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டேன்.

அதுதான் அரசாங்கம் சொல்கிறதே, பத்திரிக்கைகளில் வெளிவந்ததே என்றார்.

அப்படி என்றால் பத்திரிக்கையில் வெளிவருவதை நிஜமென்று ஒப்புக் கொள்கிறீர்களா... இதோ கடந்த இரண்டு மூன்று நாட்களாக நாளிதழ் மற்றும் வார பத்திரிக்கையில் வெளி வந்திருக்கும் செய்தி, அணு உலையை எதிர்த்து போராடும் மக்களுக்கு நீர் பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை அரசாங்கம் தடுத்து வருகிறது. இதுதான் அரசாங்கம் செய்யும் வேலையா ஐயா என்றேன்.

சிறிது நேரம் பேச்சு இல்லை... பின் கேட்டார். பிறகு அங்கிருக்கும் காவல்துறையினர் சாப்பிட என்ன செய்கிறார்கள் என்றார்?

ஐயா, காவல்துறை இருப்பது ஊரின் எல்லையில். அவர்கள் எல்லையின் மறுபுறம் இருக்கும் ஊரில் சாப்பிட்டு விட்டு போகிறார்கள். ஆனால் பொதுமக்கள் ஊரின் எல்லையைக் கடக்க முடியாதவாறு தடை உத்தரவைப் பிறப்பித்து இப்படி அடக்குமுறைச் செய்வது சரியா என்றேன்.

சரி, அங்குள்ள மக்கள் எதற்காக போராடுகிறார்கள். அணு உலை ஏன் வரக் கூடாது என்கிறார்கள்.

ஐயா, அணு உலையை அங்குள்ள மக்கள் எதிர்க்க காரணம், விபத்து ஏற்பட்டால் வரும் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டும், அணு உலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் அங்கு வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமான கடலில் கலந்து அவர்கள் வாழ்வாதாரத்தைக் குலைத்து விடும் என்று பயப்படுவதே ஆகும் என்றேன்.

அணு உலை விபத்து நடக்க வாய்ப்பில்லை என்று தான் அரசாங்கம் சொல்கிறதே. பிறகு ஏன் போராட்டம் என்று மீண்டும் கேட்டார்.

அரசாங்கம் சொல்கிறது விபத்து நடக்க வாய்ப்பில்லை என்று. ஆனால் அரசாங்கம் மக்கள் மனதில் எழுந்துள்ள இந்த பயத்தைப் போக்க என்ன நடவடிக்கை இதுவ்ரை செய்துள்ளது.

தம்பி, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு கதிரியக்கத்தை தாங்கும் சக்தி உள்ளது. அதன் காரணமாகவே மருத்துவத்துறையில் கதிரியக்கத்தை நாம் பயன்படுத்தி வருகிறோம். மேலும், ஏதோ கூடங்குளத்தில் மட்டுமே அணு உலை இருப்பது போல, அது வெடித்து விடும் என்று சொல்வது எப்படி ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்தியாவில் நிறைய அணு உலைகள் இருக்கிறதே. இதுவரை அங்கெல்லாம் எத்தனை விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் ஒரு விஷயத்தைத் தடுத்து நிறுத்துவது எப்படிச் சரியாகும். இந்த அணு உலை கட்டப்பட ஆரம்பித்து உங்கள் முதல்வர்கள் நான்கு முறை மாறி மாறி வந்திருக்கிறார்கள். எப்பொழுதேனும் இதனை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளீர்களா, திறக்கும் தருவாயில் தடுப்பது தவறல்லவா என்றார்.

ஐயா, அணு உலை ஆரம்பித்த காலத்திலேயே இதற்கு எதிர்ப்புக் குரல் வந்தது. ஏன் ஒரு வழக்கு கூட பதிவு செய்திருக்கிறார்கள் அன்றே என்று எங்கோ நான் கேட்ட செய்தியைச் சொன்னேன்.

அன்றே போராட ஆரம்பித்திருந்தால் ஏன் இதுநாள் வரை பெரும்பான்மையோருக்கு இப்பிரச்சினை வெளியே தெரியவில்லை என்று கேட்டப்டி அவர் மேலும் தொடர்ந்து பேசிக் கொண்டே சென்றார்.

சட்டென தன்னிலை உணர்ந்தவனாக நான் அவர்களின் பேச்சில் இருந்து கழன்று கொண்டேன். இன்றும் என்னை இக்குழப்பம் தொடர்ந்தவாறு இருக்கிறது. அரசியலைப் பற்றி வீட்டில் பேசவே மறுக்கப்பட்ட/ பயத்துடன் வாழ்ந்த நான் எப்படி பொது இடத்தில் அரசியலைப் பற்றி பேசினேன். என்னைத் தன்னிலை மறக்கச் செய்யும் அளவிற்கு என்னுள் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதே இந்த கூடங்குளம்...

குழப்பங்கள் தொடரும்...

No comments:

Post a Comment