Sunday, April 1, 2012

கூடங்குளமும் நானும் - 3

குழப்பங்கள் தொடர்கிறது...

என்னை கூடங்குளம் அதிகம் பாதித்திருந்ததை உணர்ந்ததும், இந்த கூடங்குளம் அணு உலை விவகாரம் பற்றி நான் எங்கிருந்து படிக்க நேரிட்டது என கொஞ்சம் பின்னோக்கி என்னைக் கொண்டு சென்றேன். குழுமங்களின் வாயிலாகவே கூடங்குளம் என்னுள் நுழைந்தது...

அணு உலையின் எதிர்ப்பாளர்கள் தரப்பு வாதங்கள்...

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள், கூடங்குளத்தில் அணு உலை நடத்த போதிய பாதுகாப்பு இல்லை/பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தெளிவு கூட இல்லை என்று குற்றம் சாட்டி இருந்தது தான் நான் படித்த முதல் செய்தி என நினைக்கிறேன்.

இது நடந்து சில தினங்களில் அரசு தரப்பில் இருந்து அணு உலை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தி சரிபார்க்கப்பட்டது.

அதனைக் காரணம் காட்டிய அணு உலை எதிர்ப்பாளர்கள், அணு உலையில் ஆபத்து இல்லை என்றால் பாதுகாப்பு ஒத்திகை நடத்தியது எதற்காக என்று குற்றம் சாட்டினார்கள்.

இது நடந்த சில தினங்களில், இலங்கைக்கு மின்சாரம் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதற்காகத்தான் இந்த கூடங்குளம்என்று சொல்லி தமிழினத்தை அழித்த இலங்கைக்கு இந்தியாவின் மின்சாரம் வழங்க உதவும் கூடங்குளத்தை எதிர்ப்போம் என்று அணு உலை எதிர்ப்பாளர்கள் மக்களிடம் கேட்டனர். ஆதாரமாக வைத்தது இலங்கைக்கு மின்சாரம் வழங்க இருக்கும் சாத்தியக்கூறுகளைப் பற்றிய ஒரு ஆய்விற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கைக்கான அரசு விளம்பரம்.

மீண்டும் சில நாட்களில் அணு உலை விபத்து/கதிரியக்க கழிவுகள் காரணம் காட்டி உண்ணா நிலை போராட்டம்...

அப்பொழுது அரசு அறிவித்தது, அணு உலையால் ஆபத்து இல்லை. அதனை மக்களுக்கு புரிய வைத்து அணு உலையைத் திறப்போம் என்று.

ஆனால், அரசு/விஞ்ஞானிகள் சொன்ன ஆய்வறிக்கைகளை எதிர்ப்பாளர்கள் ஏற்கவில்லை. அல்லது அவர்களின் பயத்தைப் போக்கும் அளவிற்கு ஆய்வறிக்கைகளை அரசு வெளியிடவில்லை...

இதற்குள்ளாக, இனி அடுத்த நான்கு வருடத்திற்கு தேர்தல் இல்லை, இப்பொழுது செய்யும் யாவும் நான்கு ஆண்டுகள் கழித்து மக்களுக்கு நினைவில் இருக்கப் போவதில்லை என்று கூடங்குளத்தைத் திறக்கப் போவதாக அரசு எடுத்த திடீர் முடிவு...

இவையெல்லாம் தான் நான் படித்த மடல்கள்...

இனி,

அணு உலை விபத்து நடந்தால் பாதிப்பு வராது எனச் சொல்பவர்கள் இங்கு யாரும் இல்லை என நினைக்கிறேன். அப்படியும் சொல்பவர்கள் யாரும் இருக்கிறார்களா இங்கு அணு உலை விஞ்ஞானிகள் உட்பட...

அணு உலை ஆதரவாளர்கள் தரப்பு வாதங்கள்...

அணு உலை விபத்து நடக்கும் சாத்தியக் கூறுகள் இந்தியாவில் மிகக் குறைவு. காரணம் புகுஷிமோ இருந்தது நிலநடுக்க வரையறையில் அதிகம் வர வாய்ப்பு இருக்கும் இடத்தில் (ஒன்பதாவது தரம்). இந்திய அணு உலைகள் இருப்பது மத்திமமான நிலையில் அதாவது மூன்றிலிருந்து நான்காவது தரத்தில். இந்த தரம் என்பதில் குழப்பம் வேண்டாம். இங்கு தரவரிசை நிலநடுக்கம் வர வாய்ப்பு குறைவான பகுதியிலிருந்து அதிகமான பகுதி வரை ஒன்றிலிருந்து ஒன்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. முதலாவது தரம் என்றால் அங்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு குறைவு என்று பொருள். ஒன்பதாவது தரம் என்றால் வாய்ப்பு அதிகம் என்று பொருள்.

நிலநடுக்கம் வர வாய்ப்பு மத்திமமாக உள்ள பகுதியில் கூடங்குளம் இருப்பதால் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்பதை உணரலாம். மேலும் மீதமுள்ள வாய்ப்பிற்காகவும் நிலநடுக்கத்தால் பாதிக்காத அளவு உயர் பாதுகாப்பு நடவடிக்கையாக கட்டுமானப் பணிகள் பாதுகாப்புடனேயே கட்டப்பட்டிருக்கிறது. அதனால் பயப்படத் தேவையில்லை என்றும் மேலும் நிலநடுக்கம் சுனாமி போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாத வகையில் எவ்வாறு கட்டப்பட்டிருக்கிறது என்று விளக்கங்கள் சொல்லப்பட்டன.

இதற்குத்தான் எதிர்ப்பாளர்கள், ஆணுறையையே தரமானதாகத் தயாரிக்கத் தெரியாதவர்கள் அணு உலையை எப்படி தரமானதாகக் கட்டி இருப்பார்கள் என்ற கேள்வி வைக்கிறார்கள். என்ன சொல்ல முடியும் நம்மால்...

அடுத்த பகுதியோடு எனது குழப்பங்களை முடித்துக் கொள்கிறேன்...

No comments:

Post a Comment