Tuesday, April 3, 2012

கடவுளை நம்பினோர்

ஒருவருடைய உயிர் போகாமல், ஒருவரைக் கொலை செய்ய முடியுமா? நாம் உயிரோடு இருக்க வேண்டும், ஆனால் தற்கொலையும் செய்து கொள்ள வேண்டும். முடியுமா? இது என்னடா வினோதம் என்று பார்க்கிறீர்களா! இது வினோதம் அல்ல, செய்யக் கூடிய காரியம் என்று சொன்னதோடு அல்லாமல் செய்தும் காட்டி இருக்கிறார். இப்படிப்பட்ட மாயக்காரியங்களைச் செய்ய வல்லவரும் உண்டா… அவர் யாராக இருக்கும் என்ற ஆவல் உள்ளில் எழுகிறதா. இத்தகைய மாயக் காரியங்களைச் செய்துக் காட்டியவன் வேறு யாருமில்லை. மாயன், மதுசூதனன், கோபியர்கள் கொஞ்சி விளையாடும் ரமணன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கண்ணன் தான் அது. இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று வியப்படைய வேண்டாம்.இது புதுக்கதை இல்லை. பழைய கதைதான். மகாபாரதத்தின் கர்ண பர்வத்தில் கண்ணன் நடத்திய திருவிளையாடல் தான் இது. நடக்கவியலாத அச்செயலை கண்ணன் எப்படி நடத்திக் காட்டினான் என்ற கதையைப் பார்ப்போமா.


குருஷேத்திரப் போர். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. பீஷ்மரும், துரோணரும் மடிந்து போன பிறகு, பதினாறாம் நாள் போரில் கௌரவர் படைகளுக்கு கர்ணன் படைத்தலைமை ஏற்றான். பீஷ்மரையும் துரோணரையும் அழித்த உற்சாகத்தில் பாண்டவர்களும், கர்ணனின் தலைமையில் கௌரவர்கள் உற்சாகத்தோடும் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். நண்பனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக கர்ணன் அதிக உத்வேகத்துடன் போரிட்டு ஒரு புறத்தில் பாண்டவர் படையை அழித்துக் கொண்டிருந்தான். மற்றொரு புறமோ அர்ஜுனன் கௌரவர் தரப்பில் சம்சப்தர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.


கர்ணனின் போர்த்திறமையால் பாண்டவர் படை முழுவதும் அழிந்து விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த போது, நகுலன் பாண்டவர்களின் படைக்கு உத்வேகம் அளிக்க எண்ணி கர்ணனை எதிர்த்துப் போரிட்டான். ஆனால் கர்ணனின் வீரத்தின் முன் நிற்க முடியாத நகுலன் பெரும் காயங்களுடன் தோல்வியுற்று திரும்ப எத்தனிக்கும்போது, கர்ணன், “நகுலா.! நீ என்னிடம் தோற்றுப் போனதை எண்ணிக் கவலையுறாதே. அர்ஜுனன் இருக்கும் இடத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போ” என எள்ளி நகையாடுகிறான். அத்தோடு நில்லாமல் கர்ணன் பாண்டவர் படையினுள் நுழைந்து ஒரு சக்கரம் போல் சுழன்று பாண்டவர் படைகளைக் கொன்று குவித்தான். இப்படியாக பதினாறாம் நாள் யுத்தம் முடிந்தது.


பதினாறாம் நாள் யுத்தத்தில் கர்ணன் விளைவித்த நாசத்தை எண்ணிப் பார்த்த தருமர், அடுத்த நாள் அவனைத் தானே எதிர்த்து அழிக்க முடிவு செய்தார். பதினேழாம் நாள் போரும் தொடங்கியது. கர்ணன், அர்ஜுனனைக் கொல்ல சல்லியனைத் தனக்கு தேரோட்டியாக துரியோதனன் மூலம் பெற்று போருக்கு கிளம்பி வருவதைப் பார்க்கையில், சூரிய சந்திரர் சேர்ந்து வருவது போல கர்ணனின் தேர் பிரகாசித்தது. கர்ணனின் தேரைப் பார்த்து விட்ட தருமர் முந்தைய நாளின் போர்க்காட்சிகளை மனதில் எண்ணியவாறு உக்கிரத்துடன் போர் புரிய, கர்ணன் தருமரின் வில்லுக்கு பதில் சொல்ல முடியாமல் தேர்த்தட்டில் மயங்கி விழுந்தான். கர்ணன் மயங்கி விழுந்ததைக் கண்டு கௌரவர் படைகள் சிதறி ஓடியது. ஆனாலும் சற்று நேரத்திற்கெல்லாம் மயக்கம் தெளிந்து மீண்டும் போரிட்ட கர்ணன், அடிபட்ட சிங்கமாய்ச் சீற, அவனின் தாக்குதலில் தருமர் நிலை குலைந்து போவதைக் கண்ணுற்ற நகுலன், சகதேவன் மற்றும் திருஷ்டத்யும்னன் கர்ணனை எதிர்த்து போரிட அனைவரையும் எளிதில் சமாளித்தான் கர்ணன்.


ஒருகட்டத்தில் கர்ணன், நகுலனின் குதிரைகளையும் தருமரின் குதிரைகளையும் கொன்றுவிட அவ்விருவரும் சகதேவனின் தேரில் நின்றவாறு போர் புரிய முனைந்தார்கள். பாண்டவரின் கை தாழ்ந்து போவதைக் கண்ட சல்லியன், கர்ணனைப் பார்த்து, “கர்ணா.! நீ கொல்ல வேண்டிய அர்ஜுனனை விடுத்து இவர்களுடன் சமர் புரிவதின் மூலமாக நீ உந்தன் பலத்தை குறைத்துக் கொண்டு பலவீனனாக அர்ஜுனனை எதிர்த்துப் போரிட்டால் நீ மாண்டு போவது உறுதி. மேலும், அங்கே பார்.! நீ யாருக்காகப் போர் புரிகிறாயோ, அந்த துரியோதனன் பீமனின் கையால் மாண்டு போவான் போல் தெரிகிறதே. அவனைக் காக்க வேண்டியது உன் கடமையல்லவா” என்று சொல்ல, கர்ணன் தர்மரைப் பார்த்து இவ்வாறு சொல்லுகிறான்.


“தருமா.! நீ தர்ம நியாயங்களைப் பேசிக் கொண்டிருக்கும் பிராமணர்களுக்கு நிகரானவனே ஒழிய உன்னிடத்தில் ஷத்ரியர்களுக்குரிய வீரம் என்பது கிடையாது. அதனால் இங்கிருந்து பிழைத்து போவாயாக” என்று அவமானப்படுத்தி அனுப்பி விட்டு, துரியோதனனைக் காக்கும் பொருட்டு பீமனை நோக்கி தன் தேரைச் செலுத்துகிறான்.


அதே சமயத்தில் கிருஷ்ணர், அர்ஜுனனைப் பார்த்து, “அர்ஜுனா.! நமது படைவீரர்கள் தருமரைச் சூழ்ந்து நிற்கும் போதே, தருமரின் போர்க்கொடியானது கர்ணனின் அம்புகளால் சூழப்பட்டிருக்கிறது. இனியும் பொறுப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை, புறப்படுவாய் கர்ணனை எதிர்க்க” என்று சொல்லியவாறு அர்ஜுனனைக் கர்ணன் இருக்கும் திசை நோக்கி கொண்டு செல்கிறார் கிருஷ்ணர்.கர்ணனால் அடிபட்டு, அவமானப்படுத்தப்பட்டு, நகுல சகாதேவர்களுடன் பாசறைக்கு வருத்தத்துடன் திரும்பிய தருமர், நகுல சகாதேவர்களை பீமனுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி அனுப்பி வைக்கிறார். மறுபுறம் பீமனை எதிர்த்து வந்த கர்ணனை பீமன் அனாயசமாக தேர்த்தட்டில் மயங்கி விழச் செய்தான். கர்ணனைக் கொல்லும் எண்ணத்துடன் ஓடிவந்த பீமனைப் பார்த்து சல்லியன், “பீமா.! கர்ணனை அர்ஜுனன் கொல்வதாய் சபதம் எடுத்திருக்கிறான். அதனால் அவனை விட்டு விடு” எனச் சொல்லி கர்ணனை அவ்விடத்திலிருந்து வேறு திசைக்குக் கொண்டு செல்கிறான்.


கர்ணனின் தோல்வியைக் காணுற்ற துரியோதனன், கர்ணனைக் காக்கும் பொருட்டு தன் தம்பிமார்களை பீமனை எதிர்க்க அனுப்புகிறான். கர்ணனைத் தேடி வந்த அர்ஜுனன் அங்கு கர்ணன் மற்றும் தருமர் இருவரையும் காணாது பீமனிடம் விசாரிக்க, அங்கு நடந்ததை வருத்தத்துடன் சொல்கிறான் பீமன். தருமர் மிகவும் காயப்பட்டவராக பாசறைக்குத் திரும்பியதைச் சொல்லி அவரின் நிலை என்ன ஆயிற்று என்று தனக்குத் தெரியாது எனவும் சொல்கிறான். மேலும், தான் இப்பொழுது போர்க்களத்தில் இருந்து பாசறைக்குத் திரும்பினால் தன்னை கோழை என்று அனைவரும் பரிகசிப்பர். அதனால் அண்ணனின் நிலை என்ன ஆயிற்று எனக் கண்டு வந்து சொல்லுமாறு அர்ஜுனனை பாசறைக்கு அனுப்புகிறான்.


அண்ணனின் நிலையைக் கண்டு வரச் சென்ற அர்ஜுனனை, “அர்ஜுனன், கர்ணனைக் கொன்று விட்டு வருகிறான்” என எண்ணி புளகாங்கிதமடைகிறார் தருமர். பிறகு உண்மை அறிந்த தருமர், கோபத்துடனும், வருத்தத்துடனும், “ அர்ஜுனா.! நான், நகுலன் மற்றும் சகதேவன் அனைவரும் கர்ணனால் ஜெயிக்கப்பட்டோம். இனி நான் செய்ய என்ன இருக்கிறது. மீண்டும் வனவாசம் செல்ல வேண்டியது தான். கர்ணனை எதிர்த்து போர் புரியும் ஆற்றல் உன்னிடத்தில் இல்லை என்று முன்பே நீ சொல்லியிருந்தால், மாற்று ஏற்பாடுகளைக் கவனித்திருப்பேன். கர்ணனை கொல்வதாய் நீ செய்த சபதத்தை எண்ணி நான் மோசம் போனேன். நீ பிறந்த ஏழாவது நாளில் அசரீரி சொன்ன, ‘இந்த அர்ஜுனன் எல்லா யுத்தங்களிலும் வெற்றி அடைவான்’ என்ற வாக்கைப் வீணாகச் செய்து விட்டாய். நீ கர்ணனிடம் பெரும் பயம் கொண்டவன் என்பதை நான் இதுகாறும் அறியாமல் போனேனே. அது என் மடமை. பீமன் ஒருவனே இனி எனக்கு கதி. உன் மகன் அபிமன்யு இருந்திருந்தாலும் இத்தகைய இக்கட்டு என்னைச் சூழ்ந்திராது. உனக்கு தங்கப் பிடி கொண்ட கத்தி எதற்கு? பேசாமல் உன் காண்டீபத்தை கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டு, நீ அவருக்குத் தேரோட்டுவாயாக . அவர் கர்ணனை நாசம் செய்வார். நீ பிறக்காமல் இருந்திருந்தாலே நன்றாய் இருந்திருக்கும்“. எனப் பலவாறாக நிந்தித்துப் பேசலானார்.


தருமரின் பேச்சைக் கேட்டுக் கோபமுற்ற அர்ஜுனன் தன் வாளை எடுத்து தருமரைக் கொல்ல முனைய, நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தை உணர்ந்த கிருஷ்ணர், அர்ஜுனா! என்ன காரியம் செய்ய துணிகிறாய் எனத் தடுக்கிறார். கிருஷ்ணரைப் பார்த்து, எவனொருவன் என்னைப் பார்த்து என் காண்டீபத்தை இன்னொருவனிடம் கொடுத்து விடு என்று சொல்கிறானோ அவனைக் கொல்வதாய் நான் விரதம் பூண்டிருக்கிறேன். அதனால் தருமரைக் கொல்ல வேண்டிய சூழலில் இருப்பதாக அர்ஜுனன் மொழிகிறான்.


“அர்ஜுனா, உனது கோபத்தைத் தூண்டி விட்டுதன் மூலமாக கர்ணனைக் கொல்லவே தருமர் இது போன்ற சொற்களில் உன்னை காயப்படுத்தினார்” என்று சமாதானம் சொல்லி, ”மேலும் உன் விரதத்தை நீ காப்பாற்றியாக வேண்டும். அதனால் தருமரைக் கொன்றே ஆக வேண்டும். ஆனால் இந்த கத்தி அதற்கு தேவையில்லை. தன்னை விட மூத்தவரையும், உலகத்தாரால் மதிக்கப்படுபவரையும் ஏகவசனத்தில் ஒருமையில் அழைத்தாலும் அது அவருக்கு அவமானத்தைக் கொடுத்ததாகவும், அந்த அவமானம் அவர் உயிரிழந்ததற்கு ஒப்பாகக் கருதப்படும் என்று சொல்லி தருமரை ஒருமையில் அழைத்து உன் விரதத்தை நிறைவேற்றிக் கொள்வாயாக” என்று உபாயம் சொல்கிறார்.


கண்ணனின் உபாயத்தைக் கேட்ட அர்ஜுனன் தருமரைப் பார்த்து இவ்வாறு பேசுகிறான். “போர்க்களத்தை விட்டு ஓடி வந்து பாசறைக்குள் ஒளிந்திருக்கும் நீ, என்னைப் பற்றிப் பேச அருகதை அற்றவன். போர் முனையில் கௌரவர்களைக் கதிகலங்கச் செய்கிறானே திருஷ்டதியும்னன் அவன் என்னைப் பற்றி நிந்தித்து பேசலாம். ரதத்தில் ஏறியும் ரதத்தை விட்டு துள்ளி குதித்தும் எதிரிகளை எல்லாம் துவம்சம் செய்து கொண்டிருக்கிறாரே பீம அண்ணா, அவர் என்னைப் பற்றி நிந்தித்து பேசலாம். நீ நிந்தித்து பேசாதே. மேலும் போரில் தன் உயிரைக் கொடுத்தேனும் உன்னைக் காக்க முனைந்த நகுல சகதேவர்கள், சாத்யகி, சிகண்டி போன்றோர் என்னை நிந்தித்து பேசலாம். பாசறையில் கோழைத்தனமாக பதுங்கி இருக்கும் நீ என்னை நிந்தித்துப் பேச தகுதி அற்றவன். நீ சூதாடியதால் தானே நமக்கு இந்த கதி நேர்ந்தது. உனது சூதாட்ட மோகத்தால் நரக வாழ்க்கை அனுபவித்த எங்களை நிந்திக்க உனக்கு அருகதை இல்லை. வாய்சொல் வீரனே! மீண்டும் உன் அற்பப் பேச்சால் என்னைக் கோபமுறச் செய்யாதே” என்று தருமரை ஏக வசனத்தில் பேசியவாறு மீண்டும் தன் வாளை உருவுகிறான்.


குழப்பமடைந்த கிருஷ்ணர், ‘அர்ஜுனா! இப்போது எதற்கு வாளை எடுக்கிறாய்’ என்று கேட்க, “தருமரைப் பார்த்து இவ்வளவு கடுஞ்சொற்களைப் பேசிய நான் இனி உயிர் வாழத் தகுதி அற்றவன்” எனச் சொல்லி தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள முயற்சி செய்ய, “அர்ஜுனா! உன்னைக் கொல்ல வேண்டுமென்றால் உன்னை நீயே புகழ்ந்து பேசுவாயாக. அவ்வாறு பேசினால் நீ இறந்தவனுக்குச் சமமாவாய்” என்று கூறுகிறார்.


கிருஷ்ணரின் சொல்லைக் கேட்டு அர்ஜுனன் தற்புகழ்ச்சியில் இறங்கினான். “பினாகம் என்ற வில்லை உடைய சிவனைத் தவிர என்னை எதிர்க்கும் வில்லாளி இவ்வுலகில் யாரும் இல்லை. தருமர் நடத்த விரும்பிய ராஜசூய யாகத்திற்காக பல மன்னர்களை நான் ஒருவனே போரில் அடக்கி வெற்றி பெற்றிருக்கிறேன். என்னைக் கொல்ல வேண்டும் என்று உறுதி பூண்டுள்ள சம்சப்தர்களை பெருமளவு கொன்று குவித்து விட்டேன். இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர். யுத்த சாத்திரத்தை அறியாதவர்களைக் கொல்லக் கூடாது என்ற நோக்கிலேயே இவ்வுலகை அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறேன். இப்பொழுது கர்ணனைக் கொல்ல செல்கிறேன். அவனையும் நாசம் செய்வேன்” என்று சூளுரைத்தவாறு தருமரின் கால்களில் விழுந்து வணங்கி கர்ணனை எதிர்க்க அர்ஜுனன் புறப்படுகிறான்.


இப்பொழுது புரிகிறதா, கண்ணனின் தந்திரம்! அர்ஜுனன், தருமரைக் கொல்லாமல் கொலை செய்வித்த விதமும், அர்ஜுனன் தான் இறக்காமலேயே, தன்னைத் தானே கொலை செய்து கொள்ள வைத்த விதமும் அர்ஜுனன் கண்ணன் மேல் வைத்த நம்பிக்கைக்கு, கண்ணன் கொடுத்த பரிசு. இவ்வுலக வாழ்வில் கடவுள் என்பதும் நம்பிக்கையே. அர்ஜுனனுக்கு அந்த கடவுள் என்ற நம்பிக்கை கண்ணன். அவன் கொண்ட சபதத்தின்படி அவன் அண்ணனைக் கொல்ல வேண்டும், ஆனால் கொல்ல மனமில்லை. அர்ஜுனன் தன்னை மாய்த்துக் கொள்ள விரும்புகிறான். ஆனால் கண்ணனுக்கு அர்ஜுனன் அழிவதில் விருப்பமில்லை. அர்ஜுனனுக்கு, கண்ணனாகிய நம்பிக்கை என்னும் கடவுள் இப்பிரச்சினைகளிலிருந்து அர்ஜுனனை எத்தனை எளிமையாக வெளி கொணர்கிறது என்பதை பார்த்தீர்களா…


இங்கு கடவுள் மீதான நம்பிக்கை எனச் சொல்லும் பொழுது பாரதத்தின் இன்னொரு நிகழ்வும் நினைவுக்கு வருகிறது. பாண்டவர்கள் சூதில், நாடு நகரிழந்து பின் தம்மையும் இழந்து தன் மனைவியையும் சூதில் இழந்து விட, பாஞ்சாலியை துச்சாதனன் சபைக்கு அழைத்து வந்து அவளின் துகிலை உரித்து மானபங்கம் செய்கிறான். துகிலுரிக்கும் துச்சாதனனிடமிருந்து தன்னை, தன் மானத்தைக் காத்துக் கொள்ள பாஞ்சாலி கதறுகிறாள். ஒரு கையில் உடையைப் பிடித்துக் கொண்டும், மற்றொரு கையால் கண்ணனை வணங்கியும் கதறுகிறாள். கண்ணன் வரவில்லை.

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

ஆனால், சட்டென்று ஒரு கணத்தில் இனி தன்னால் ஏதும் ஆவதற்கு இல்லை என்று எண்ணியவளாய், ஆடையை இழுத்துப் பிடித்திருந்த கையை ஆடையிலிருந்து விட்டு விட்டு, ‘கண்ணா! நீயே கதி’ என்று இரு கை கூப்பி அவன் பதம் பணிகிறாள். கண்ணன் பாஞ்சாலியின் மானத்தைக் காப்பாற்றுகிறான்.


கடவுள் மீதான நம்பிக்கை என்பது அரைகுறையாக/சந்தேகத்துடன் இல்லாமல் முழுமனதுடன் இருந்தால், கடவுள் நம்மை என்றென்றும் கைவிடுவதில்லை. நீங்களும் உங்களது விருப்பமான கடவுள் ஒன்றின் மீது நம்பிக்கை வையுங்கள். அல்லது நம்பிக்கையையே கடவுளாக நினைத்து அதனினிருந்து என்றும் விலகாமல் நடவுங்கள். அந்த நம்பிக்கை என்னும் கடவுள், உங்களை உங்களின் இக்கட்டிலிருந்து வெளிவரும் சூத்திரத்தை உங்களுக்கு உணர்த்தும்.


நன்றி : அதீதம்


அதீதத்தில் படிக்க லிங்க் : http://www.atheetham.com/?p=232

1 comment:

Anonymous said...

இந்த மொழி பெயர்ப்பை செய்தவன் ஒரு குசுப்பயல். பீமன் என்ற குசுப்பயலை ஆராதிக்கும் குசுப்பயல். கர்ணன் பீமனை விட சிறந்த வில்லாளி. உண்மையில் பீமன் வில்லாளியே அல்ல. தன்னை தாக்க வருபவர்களிடம் அவர்கள் நெருங்கியவுடன், தனது மலக்காற்றை வெளியேற்றி அவர்களை மயங்க செய்பவன்.

Post a Comment