Sunday, April 1, 2012

கூடங்குளமும் நானும் - 4

குழப்பங்களை இன்றோடு முடித்துக் கொள்கிறேன் எனச் சொல்லி இருந்தேன்... நேற்று எப்படி இந்த பதிவை முடிக்கலாம் என யோசித்துவைத்திருந்ததெல்லாம் இப்பொழுது நினைவிலேயே இல்லை... இருந்தும் பொதுவாக என் குழப்பத்திற்கு முடிவுரையாக இதைச் சமர்ப்பிக்கிறேன்...

பொதுவாக எல்லா விஷயங்களிலும் மனிதன் ஏதேனும் ஒரு நிலைப்பாடுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நான் மட்டும் என்ன விதிவிலக்கா... அதனாலேயே கூடங்குளம் அணு உலை விஷயத்திலும் நான் என்ன நிலைப்பாடு எடுப்பது என்று யோசிக்கையில் எனக்கு குழப்பங்கள் ஆரம்பமானது.

கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாகவும் என்னால் நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை. எதிராகவும் எடுக்க முடியவில்லை... காரணம்,

கூடங்குளம் அணு உலை ஆதரவாளர்கள் அணு உலை பாதுகாப்பாகத் தான் உள்ளது என்று சொல்லிக் கொண்டிருந்தார்களேத் தவிர, மக்கள் மனதில் எழுந்திருந்த பயத்தைப் போக்க முயற்சிகள் செய்யவில்லை... அல்லது அவர்கள் எடுத்த முயற்சிகளானது எனக்கு முயற்சிகளாகத் தோற்றமளிக்கவில்லை... பாதுகாப்பு ஒத்திகை நடத்தியது, விஞ்ஞானிகள் பாதுகாப்பானது என வாய்வழிச் சொன்னது தான் கடைசி வரை அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியாகத் தெரிகிறது. இன்றும் கூட அவர்கள் கதிரியக்க கழிவுகளை என்ன செய்ய போகிறார்கள் என்று சொல்லாமல் மௌனம் தான் சாதித்து வருகிறார்கள்.

இதனை வைத்துக் கொண்டு எப்படி என்னால் அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடீயும்... அணு உலை எதிர்ப்பாளர்கள் இவர்கள் மேல் வைத்த இன்னொரு குற்றச்சாட்டான அரைகுறையான அணு உலையால் ஏற்படும் சுற்றுப்புற பாதிப்பு ஆய்வறிக்கை (EIA Report) முழுமையானதாக இல்லை என்பதற்கு எத்தகையச் சான்றுகளை இதுவரை அளித்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

மக்கள் அணு உலை விபத்து நடக்குமோ என்று பயப்படுகிறார்கள் என்று தெரிந்ததும், அரசாங்கம் அணு உலை செயல்படும் விதம், இயற்கை விபத்து ஏற்படும் பொழுது அணு உலையின் எந்தெந்த பகுதி பாதிப்புக்குள்ளாகும் அல்லது எந்த அணு உலை பாகங்கள் செயலிழந்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும், அவ்வாறு விபத்து ஏற்படும் பொழுது அதற்கு அரசாங்கம் வைத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி ஒரு குறும்படம் எடுத்து அதை மக்களுக்குத் தொலைகாட்சியில் பலமுறை போட்டு காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கலாம்... அதனைச் செய்யாமல் ஐந்நூறு கோடி ரூபாய் நலத்திட்டங்கள் அறிவிக்கிறோம் என்று பிரச்சினையை அரசியல் ரீதியாக தீர்த்தது இன்னும் என்னால் ஜீரணிக்க முடியாததாகத்தான் இருக்கிறது. இந்த ஒரு குறும்படத்தை எடுத்து தொலகாட்சிகளில் ஒளிபரப்ப அரசுக்கு எத்தனை செலவு ஆகியிருக்கப் போகிறது. அதை கூட ஏன் செய்யவில்லை...????? மீண்டும் மீண்டும் அணு உலை எதிர்ப்பாளர்கள் கேட்கும் கதிரியக்கக் கழிவுகளை எப்படி பாதுகாப்பான முறையில் வெளியேற்றப் போகிறீர்கள் என்பதையும் கூட இந்த ஆவண படத்தில் சேர்த்திருக்க வேண்டும்... அப்படிச் செய்திருந்தால் மக்களின் பயம் ஓரளவேனும் குறைந்திருக்கும் என நான் நம்புகிறேன்...

அரசாங்கத்தின் தெளிவில்லாத அணுகுமுறையால் இப்பிரச்சினைக்கு அரசாங்கத்தின் சார்பில் என்னை நான் இருத்திக் கொள்ள முடியவில்லை...(அரசாங்கத்தின் அணுகுமுறை தெளிவான அரசியல்வியாதிகள் அணுகுமுறை என்று சொல்வதில் உடன்படுகிறேன்...)... ஒரு வேளை நான் மேற்சொன்ன நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருந்தால் நான் அணு உலை ஆதரவாளன் என்று சொல்லிக் கொண்டிருந்திருப்பேன்...

சரி, அரசாங்கத்துக்கு ஆதரவாக இல்லை என்றால் அணு உலைக்கு எதிரானவர்களின் பட்டியலில் என்னை நான் சேர்த்துக் கொள்ளலாமா என்றால் அதுவும் முடியாது... அதற்கு காரணம்,

அவர்களின் கோரிக்கை அணு உலையை மூட வேண்டும் என்ற ஒரே முடிவோடு மட்டுமே இருந்து வந்தது ஆரம்பம் முதலாக... அதனால் அணு உலை பாதுகாப்பானது தான் என்று யார் சொன்னாலும் அவர்களை எதிரிகளாக மட்டுமே பார்த்து பேச ஆரம்பித்தனர். அணு உலையால் ஆபத்து என்றால் அதில் பணி புரிபவர்களின் பாதிப்புகளைத் தாண்டி தானே அது பிறரை வந்தடையும் என்று சற்று இவர்கள் நினைத்திருந்தாலும், எவன் பணத்துக்காக உயிரை விட்டு சந்ததியை அழித்து அணு உலையில் வேலை செய்வான் என்கிற எண்ணம் அவர்களுக்குள் எழுந்திருக்கும். எதிர் தரப்பில் என்ன பேசுகிறார்கள் என சற்று செவிமடுத்திருப்பார்கள்... எதிரில் இருப்பவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்க விரும்பாமல் அவனை எதிரியாக மட்டுமே பார்த்து நான் பிடித்த கொள்கையிலேயே தான் இருப்பேன் என இருப்பவர்களை நான் எப்படி ஆதரிப்பது...

_______________________________

அணு உலை பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளின் தரத்தை பற்றிய கலந்தாய்வு கூட்டம் மக்கள் முன்னிலையில் நடக்க வேண்டும்.

இயற்கையை கணிக்க முடியாததால், அணு உலைகளால் பாதிப்பு வரும் என்று மற்ற நாடுகள் அணு உலைகளை படிப்படியாக மூடுவதைப் போல இந்தியாவும் மாற்று மின்சார முறைகளை நோக்கித் தன்னை தயார்படுத்திக் கொண்டு அணு உலைகளை படிப்படியாக மூட நீண்ட கால தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் எண்ணத்தை இந்தியா முற்றிலும் கைவிட வேண்டும்.

அணு உலை திறக்கப்பட்ட பின்பு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அங்குள்ள மக்களுக்கு இலவச மருத்துவ ஆய்வுகள் மேற்கொண்டு பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்று கண்டறிந்து தக்க நடவடிக்கைகள் எடுக்க ஒரு மருத்துவ குழுவை அரசு அறிவிக்க வேண்டும்...

மேலும், அணு உலைகளை இங்கு திறக்காமல் இருக்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்...

____________________________________

வெறுமனே அணு உலையை மூட வேண்டும் எனக் கேட்காமல், இது போன்ற சில அடிப்படை புரிந்துணர்வுடனான கொள்கைகளுடன் மக்கள் களத்தில் இறங்கியிருந்தால் என்னுடைய ஆதரவு கண்டிப்பாக அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு இருந்திருக்கும்...

ஆனால், அவர்களோ அணு உலை என்றாலே வெடித்து விடும் அதனால் அதனை மூடியே ஆக வேண்டும் எனக் கடைசி வரை கேட்டுக் கொண்டிருந்தார்கள்...

அதனாலேயே எனக்கு கூடங்குள விவகாரத்தில் நான் எந்த நிலைப்பாடை எடுப்பது என்பதில் குழப்பம் உருவானது...

குழப்பங்களைக் கொட்டி விட்டேன்... எனது மனபாரம் குறைந்துள்ளது... எனது நேரம் போராட்டமும் சுமூகமாக முடிவடைந்ததாகச் சொல்கிறார்கள்... இனி வேறொரு பிரச்சினை பெரிதாக பேசப்படும்... பத்தோடு பதினொன்றாக தேசிய வியாதியான மறத்தலில் நான் இவ்விவகாரத்தை மறந்து அந்தப் பிரச்சினைக்கு சென்று விடுவேன் என நம்புகிறேன்...

பொறுமையாக படித்தவர்களுக்கும், கருத்து சொன்னவர்களுக்கும் என் நன்றிகள் பல...

No comments:

Post a Comment