பொதுவாக என்னை எந்த ஒரு விஷயமும் அதிகம் பாதித்தித்ததில்லை. ஆனால் இந்த கூடங்குளம்அணு உலை விவகாரம் என்னை மிகவும் பாதித்துள்ளதாக உணர்கிறேன். முன்னுக்குப் பின் முரனான தகவல்கள், ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் ஏராளமான இடுகைகள் என என்னை அதிகம் குழப்பப்படுத்திய விவகாரமாக இதை நான் பார்க்கிறேன். எனது குழப்பங்கள் குழப்பங்களாகவே இருக்கட்டும் என விட்டுச் செல்லலாம் என்று பார்க்கிறேன். ஆனால் இக்குழப்பங்கள் எனது மனதை பாரமாக்கி இருப்பதால், குழப்பங்களை இங்கு கொட்டிவிட்டு நான் நிம்மதியுடன் படுத்து உறங்கவே இந்த மடல். இங்கு யாரும் யார் சொல்வதையும் கேட்காமல் தங்கள் முடிவே சரியானது என்று நிரூபிக்கும் முயற்சிகள் பெரும்பாலும் நடப்பதால், இது யாருடைய பதில்/கருத்து எதிர்பார்த்து எழுதப்படும் மடல் அல்ல.
கூடங்குளம் அணு உலை: இதன் தோற்றம் என்னவாக இருக்கும் என பார்க்கலாம் என்று ஆராய்ந்த பொழுது, எனக்கு கிடைத்த தகவல், இத்திட்டம் கி.பி 1988 ம் வருடம் இந்தியப் பிரதம்ர் ராஜீவ் காந்திக்கும் சோவியத் பிரசிடென்ட் மிக்கைல் கோர்பசேவ் என்பவருக்கும் இடையில் இரண்டு உலைகள் திறக்க ஒப்பந்தம் கையொப்பமாகி இருக்கிறது. அதாவது, மிகப்பெரும் அணு உலை விபத்தென அனைவராலும் சொல்லப்படுகிற செர்னோபில் அணு உலை விபத்து நடந்த இரண்டு வருடம் கழித்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஏன் அன்றைய நாளில் இதனை எதிர்த்து குரல் யாரும் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. இல்லை கொடுத்திருந்து எனக்குத் தெரியாமல் போனதோ தெரியவில்லை.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் வைக்கும் முக்கிய மூன்று குற்றச்சாட்டு, அணு உலையால் இயற்கை வளங்கள்/ சுற்றுப்புறம் மாசுபடும், கதிரியக்க கழிவுகள் மற்றும் அணு உலை வெடி விபத்து.
அணு உலையால் இயற்கை வளங்கள்/சுற்றுப்புறம் மாசுபடும் என இன்று குரல் கொடுப்பவர்கள் யாரேனும் இதுவரை இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கி.பி. 1969 ல் தொடங்கப்பட்ட தாராபூர் அணு உலை முதலாக, கடந்த வருடம் ராஜஸ்தானில் தொடங்கப்பட்ட அணு உலை வரை இயற்கை வளங்களுக்கு அணு உலையால் மாசு ஏற்படும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனரா... கதிரியக்க கழிவுகள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்ற குற்றச்சாட்டை இதே அணு உலைகள் வைத்து யாரேனும் நிரூபித்துக் காட்டியுள்ளார்களா... புகுஷிமோவில் தற்போது நடந்த விபத்தைக் காரணம் காட்டி இங்கேயும் அதே போல அணு உலை வெடி விபத்து ஏற்படக்கூடும் என்ற அபாயத்தால் தடுக்கிறோம் எனச் சொல்பவர்கள், நிலநடுக்கும் ஏற்படும் இடங்களின் தரவரிசையில் புகுஷிமோ இருக்கும் இடத்தையும், இந்திய அணு உலைகள் இருக்கும் இடத்தையும் ஏன் ஒப்பிட்டுப் பார்க்க மறுக்கிறார்கள்.
அணு உலை கதிர் பாதிப்பைப் பற்றி பேசும் மக்களே, நாம் நமது வாழ்நாளில் அதிகபட்சம் எத்தனை முறை நமது உடலில் எக்ஸ்ரே எடுக்கலாம் என்றும் நமது உடலில் எத்தனை முறை ஸ்கேன் செய்யலாம் என்றும் தெரியுமா... ஆனால் அதிகப்படியான எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் செய்வது இன்றைய மருத்துவத்திற்கு அவசியமாகிறது என்பதை உணர்ந்திருக்கிறீர்களா...
எனது கேள்வி எல்லாம் மிக எளிமையானது மற்றும் ஒன்றே ஒன்று தான். ஒரு பெண் கருவுறுகிறாள் என்றாள் அக்கருவை விரும்பாதவர்கள் எப்பொழுது கருவைக் கலைக்கச் சொல்ல வேண்டும். கரு உருவானது தெரிந்ததுமா அல்லது கருவுற்றப் பெண் ஒன்பது மாதம் பார்த்து பார்த்து தன் வயிற்றுக்குள் வளர்த்த சிசு பிறக்கப் போகும் சமயத்திலா... என்ன செய்ய? கரு உருவான போது எங்களுக்கு அந்த குழந்தையால் விளையப் போகும் நாசம் பற்றி தெரிந்திருக்கவில்லை. ஒன்பதாவது மாதத்தில் தான் தெரிய வருகிறது. அதனால் அக்குழந்தை வெளிவராமல் இருக்கத் தடை போடுவோம் என்று போராடுவது, அதுவும் குழந்தையைப் பெறப் போகும் தாய், அக்குழந்தையால் யாருக்கும் நாசம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி அளித்தும் ஏற்றுக் கொள்ளாமல் குழந்தை பிறக்கக் கூடாது என்றூ போராடுவது என்பது எத்தகையதொரு நியாயம். அத்தகைய நியாயமே கூடங்குளம்அணு உலையை ஆரம்பித்த போது தடுக்காமல் இப்பொழுது தடுப்பதிலும் இருக்கிறது எனச் சொன்னால் ஏதோ அருவருக்கத்தக்க புழுவாய் பார்ப்பது ஏன்.
கோவை மக்கள் கூடங்குளம் அணு உலை திறக்கச் சொல்கிறார்களா, அவர்கள் ஊரிலேயே ஒரு அணு உலை திறந்து கொள்ளட்டுமே எனச் சொல்வதும், பல கோடி ரூபாய் செலவிடப்பட்டு கட்டப்பட்ட அணு உலையை நிறுத்தச் சொல்வதால் ஏற்படும் பொருளாதார இழப்பிற்கு, எத்தனையோ கோடிகள் அரசியல்வாதிகளால் ஏப்பம் விடப்படவில்லையா, அதுபோல இதுவும் ஒன்று என நினைத்து கடந்து செல்லலாம் எனச் சொல்வதும், ஏதோ ஒரு போராட்டத்தின் புகைப்படத்தை இந்த பிரச்சினையோடு முடி போட்டு பேசுதல் என ஏன் குழப்பத்தை உருவாக்குகிறார்கள் என புரியவில்லை.
குழப்பங்கள் தொடரும்...
No comments:
Post a Comment