Friday, August 16, 2013

சுழற்சியும் சுகமே

விழிப்பு, உடல் தூய்மை, காலை உணவு, அலுவலகம், வேலை, மதிய உணவு, மீண்டும் வேலை, வீடு, இரவு உணவு, இளைப்பாற இணையம்...என்ன வாழ்க்கை இது. தினம் தினம் இதே சுழற்சியா. மாற்ற வேண்டும் இந்த சுழற்சியை எண்ணிக் கொண்டிருந்த போது நிலமதிர சிரிப்புச் சத்தம் கேட்டது. உண்மையில் நிலம் அதிரத்தான் செய்தது. சிரித்ததே நிலம் தானே.!

அனுதினம் நான் என்னையும், சூரியனையும் சுழல்வதையே வேலையாகக் கொண்டிருக்கிறேன். ஒரு கணம் எனது வேலையை நான் மாற்ற விரும்பினால் என்ன ஆகும் என நினைத்தாயா? பார்ப்பதற்கு எனது வேலை ஒன்றே போல் தோன்றினாலும் காலச்சக்கரத்தின் பிடியில் இந்த ஒரே வேலைக்குள்ளாக என்னுள் தான் எத்தனை மாற்றங்கள்...

சலிப்பை விடு. சுழற்சியாய் நீ தொடர்ந்து செய்யும் உன் வேலைகளால் உனக்குள் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனி. உனது மாற்றங்கள் ஒவ்வொன்றையும் ரசித்துப் பழகு. இந்த சுழற்சியும் சுகமாகும்.

சொல்லாமல் சொன்னது நிலம்.

No comments:

Post a Comment