Friday, August 16, 2013

முயற்சி உடையார்

முயற்சி – இதனைப் பற்றி பலரும் அந்நாளில் இருந்து இந்நாள் வரை சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக முயற்சியின் பெருமையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் திருவள்ளுவரின் இக்குறள் போதுமானது எனலாம்.

தெய்வத்தா னாகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

எனக்கு தெரிந்து முயற்சியின் பெருமையை இதனை விட சிறப்பாய் யாரும் சொல்லியதாய் தெரியவில்லை.

முயற்சி பற்றி சிறுவர்களுக்கு அவ்வப்போது சில வேடிக்கைக் கதைகள் பின்வருமாரு சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

புதையலை வேண்டி ஒருவன் பல நூறு அடிகள் அகழ்ந்தும் எதுவும் கிடைக்காமல் போனதால் முயற்சியை விடுத்து சென்றதன் பின் இன்னொருவன் அந்த குழியை மேலும் சில அடிகள் அகழ்ந்து புதையல் கிடைக்கப் பெற்றான் என்பது அதில் ஒன்று. அதாவது செய்யும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் வரை நமது முயற்சி இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுகின்ற கதை இது.

இன்னொரு கதையும் உண்டு. ஒரு நாட்டின் அரசனுக்கு வாரிசுகள் இல்லாததால் தன் அரசு பொறுப்பை பொதுமக்களில் யாரேனும் ஒருவருக்கு அரசுப் பொறுப்பைத் தர எண்ணி பொதுமக்களை எல்லாம் ஒரு இடத்தில் குறிப்பிட்ட தினத்தில் கூடுமாறு அரசன் அறிவித்திருந்தான். ஒரு போட்டி அறிவித்து அதில் வெற்றி பெறுபவருக்கே அரச பதவி என்பது அரசனின் அறிவிப்பாக இருந்தது. போட்டி இன்னதென்று சொல்லாம்ல மர்மமாகவே வைத்திருந்தார் அரசர்.

தனது பிரத்யேகமான உளவாளிகள் கொண்டு வேற்று நாட்டிலிருந்து சில பலசாலிகளை வரவழைத்திருந்த அரசர் போட்டி நடக்கும் சில நாளுக்கு முன்பு அந்த பலசாலிகளைக் கொண்டு இரண்டு பெரிய கதவுகளை போட்டி நடக்கும் இடத்தில் பொருத்தி இருந்தான்.

போட்டி நாளன்று மக்கள் அனைவரும் கூடி நிற்க, அரசன் அந்த பலசாலிகளை அழைத்து கதவின் மறுபுறம் அரச சிம்மாசனத்தை வைத்து கதவை இழுத்து மூடுமாறு சொன்னான். பலசாலிகள் அனைவரும் சேர்ந்து அந்த கதவை பிரம்ம பிரயத்தனம் செய்து அடைத்தனர்.

இப்பொழுது பொதுமக்களைப் பார்த்து அரசன், இங்குள்ளவரில் எவரொருவர் தனியனாய் வந்து இந்த கதவுகளைத் திறந்து மறுபுறம் செல்கிறாரோ அவர் அரச சிம்மாசனத்தில் அமரும் தகுதி உடையவர் ஆவார் என்று அறிவித்தான்.

பொதுமக்கள் தங்களுள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அரசருக்கு பதவியை யாருக்கும் தர விருப்பமில்லாமல் இது போன்று ஒரு போட்டியை வைத்திருக்கிறார். பலபேர் இழுத்து மூடிய கதவை ஒருவனால் எப்படி திறக்க இயலும் என்று முனுமுனுக்கத் தொடங்கினர்.

சட்டென்று கூட்டத்தின் நடுவில் இருந்து ஒரு இளைஞன் தான் அக்கதவைத் திறக்க அனுமதி வழங்குமாறு அரசரைக் கேட்கிறான். அவனோ உருவத்தில் பலமில்லாதவனாய்க் காட்சியளிக்க பொதுமக்கள் அனைவரும் அவனை ஏளனமாய் பார்த்து நகைக்கத் தொடங்கினர். அதனை எல்லாம் பொருட்படுத்தாத இளைஞன் அரசரின் அனுமதியோடு கதவைத் திறக்க முயற்சி செய்ய, கதவு வெகு சுலபமாக திறந்து கொண்டது.

அரசன் அந்த இளைஞனைத் தழுவி அரச பதவியைக் கொடுத்து பின் பொதுமக்களிடம், அரசனாய் இருக்க வீரம் மட்டும் போதாது. முயற்சியும் வேண்டும். முயற்சி உடையவனால் எத்தகைய காரியத்தையும் சாதிக்க முடியும், அதனாலேயே இலகுவான கதவை பலம் பொருந்திய நபர்கள் கடினப்பட்டு மூடுவது போல ஒரு நாடகம் நடத்தி, யார் முயற்சி செய்கிறார் எனப் பார்த்ததாகச் சொல்ல பொதுமக்கள் அனைவரும் தமது புதிய மன்னரை ஆர்ப்பரித்து வாழ்த்தினர்.

இப்படித்தான் நம்மாளு ஒருத்தரு சூப்பர் மார்க்கெட்டுக்கு மளிகை சாமானம் வாங்கப் போய் இருந்தாரு. அவர் எப்பவும் வாங்கும் அரிசி கீழ் வரிசையில் வைக்கப்பட்டிருப்பதாய் அறிவிப்பு பலகைச் சொன்னது. அறிவிப்பு பலகை இருக்கும் இடத்தில் இருந்து நின்றபடி அந்த வரிசையைப் பார்த்து விட்டு காலியாகி விட்டது போலும் என்று நினைத்து வேறு கடையில் வாங்கிக் கொள்ளலாம் என இரண்டடி எடுத்து வைத்தவர், சட்டென எதையோ நினைத்தவராய் கீழே குனிந்து பார்க்க கீழ் வரிசையின் உட்பகுதியில் அவர் தேடி வந்த அரிசி இருந்தது.

வரிசையின் வெளிப்பகுதியில் இருந்த அரிசி மொத்தம் தீர்ந்து போனதால் நின்றபடி பார்த்தவருக்கு அரிசி தீர்ந்தது போன்ற தோற்றம் முதலில் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், எதற்கும் இருக்கட்டுமே என்று மேற்சொன்ன கதையின் இளைஞனைப் போல முயற்சி செய்ய அவருக்குத் தேவையான அரிசி கிடைத்தது.

எப்பொழுதும் தோற்றத்தைக் கண்டு அச்சப்பட்டோ, வெளித்தோற்றத்தை வைத்தோ முயற்சி செய்யாமல் இருப்பதை விட வெற்றிக்கனியைச் சுவைக்க சற்று முயற்சி தான் செய்து பார்ப்போமே… என்ன சொல்றீங்க நீங்க…

No comments:

Post a Comment