Friday, August 16, 2013

நட்பெல்லாம் நட்பாமோ

ஒரு மனிதனுக்கு ரத்த பந்தமில்லாமல் அமையும் உறவுகளில் மிகவும் முக்கியமானது இல்லை அவசியமானது என்பதைப் பார்த்தால் நட்பு முதலில் வந்து நிற்கும். அத்தகைய நட்புறவு இந்நாளில் எப்படி இருக்கிறது என்றும், உண்மையில் நண்பர்கள் என்பவர்கள் யார் என்றும் இன்றைய தலைமுறையினர் புரிந்துள்ளனரா என்றால் கேள்வியே எஞ்சி நிற்கிறது. இங்கு நான் பேசப் போகும் கருப்பொருள் பெரும்பாலானோருக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதுதான் நிஜம்.

துவக்கப் பள்ளி படிக்கும் காலத்தில், பெற்றோர் யாரும் உன் நண்பர்கள் பெயர் என்ன என்று கேட்டால் ஒன்று இரண்டு நண்பர்கள் பெயரைச் சொல்லுவோம். அவ்வளவு தானா என மீண்டும் கேட்டால் இன்னும் ஒன்றிரண்டு பெயர்களைச் சொல்லுவோம். இப்படித் தொடங்கும் நட்புறவானது நாளுக்கு நாள் வளர்ந்து நாளடைவில் நட்பு வட்டம் மிகப் பெரியதாகவே இருக்கிறது நம் எல்லோருக்கும்…


ஆனால் உண்மையில் நாம் நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் எல்லோரும் நமது நண்பர்கள் தானா? எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறோமா??? வீட்டின் அருகே சிறு வயது முதல் விளையாடி வந்த உறவுகளை நட்பு என்று சொல்கிறோம். துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என பள்ளிக் காலங்களில் உடன் படித்தவர்களையும் நட்பு எனச் சொல்கிறோம். கல்லூரியில்(களில்) உடன் படித்தவர்களை நட்பு எனச் சொல்கிறோம். உடன் வேலை புரியும் இடத்தில் அல்லது முன்னர் வேலை புரிந்த இடத்தில் அறிமுகமானவர்களை நட்பு எனச் சொல்கிறோம். இது தவிர்த்து இன்றைய நவ நாகரிக உலகின் புது வடிவமான இணையத்தின் வாயிலாக குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிமுகமான பலரையும் நட்பு எனச் சொல்கிறோம். ஊர் நண்பர்கள், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், இணைய நண்பர்கள் என நட்பு வட்டத்தைப் பெருக்கிக் கொண்டதாகவும் அனைவரையும் நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்வதாலேயும் இவர்கள் எல்லாமே நமது நண்பர்கள் ஆகி விடுவரா.

கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார், குசேலன் கிருஷ்ணர் என நட்புக்கு இலக்கணம் வகுத்த தமிழ் மரபில் வந்த நாம் இன்று நட்பு என்ற பதத்தை/வட்டத்தை நமக்கு அறிமுகமான அனைத்து நபர்களுக்கும் கொடுப்பது சரிதானா? நான் அனைவரிடமும் நட்பு பாராட்டுவதைத் தவறு எனச் சொல்லவில்லை. அதே சமயம் அனைவரையும் நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்வதை மட்டும் சற்று யோசிக்கச் சொல்கிறேன்.

நண்பனைப் பார்த்து நண்பனை அறி என்ற பழமொழி இந்நாளில் சாத்தியமா… மேலும்

உடுக்கை இழந்தவன் கைப்போல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

என்று இருப்பதை மட்டும் தான், நான் நட்பு எனச் சொல்லவில்லை. அதே சமயம் நமது இடுக்கனை மனம் விட்டு பகிர்ந்து கொள்ள முடியாதவர்களை எல்லாம் நட்பு எனச் சொல்ல வேண்டாம் என்று தான் சொல்கிறேன்.

நமது சந்தோஷத்தை, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அறிமுகம் மட்டும் போதுமானது. ஆனால் நமது துன்பத்தை, பிரச்சினைகளை பகிர உண்மையான நட்பு அவசியமாகிறது நமக்கு. எனக்கு எண்ணற்ற நண்பர்கள் இருக்கிறார்கள் எனச் சொல்லிக் கொள்வதை விட, என்னை முழுமையாக ஏற்றுக் கொண்ட நண்பர்கள் இத்தனை பேர் என்று எண்ணிக்கையில் சொல்வது சாலச் சிறந்தது.

பள்ளியில் ஆயிரம் பேர் உடன் படித்திருக்கலாம். அவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆகி விடார். நட்பாக பழகாதவர்களை பிறருக்கு அறிமுகம் செய்யும் பொழுது உடன் படித்தவர் என்று அறிமுகம் செய்யுங்கள். இதே தான் கல்லூரியில் உடன் படித்தவர்களுக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர்கள் அல்லாதோரை உடன் பணிபுரிபவர் என்றே பிறருக்கு அறிமுகம் செய்யுங்கள். நண்பர் அல்லாதோரை பிறருக்கு அறிமுகம் செய்யும் பொழுது உங்களுக்கு அவர் எப்படி அறிமுகம் ஆனார் என்று சொல்வது தான் சாலச் சிறந்ததே அன்றி, நட்பு என்ற ஒற்றை வட்டத்திற்குள் அனைவரையும் அடைப்பது சரியாகாது.

ஒரு கணம் கண்ணை மூடிச் சிந்தியுங்கள். உங்களது சுக துக்கங்களை எந்தவித தயக்கமும் இன்றி பகிரக் கூடிய ந (ண்)பர்கள் எத்தனை பேர் என்று. பிறகு முடிவெடுங்கள் நட்பென்று சொல்லும் எல்லாம் நட்பு தானா என்று….

Thanks: http://www.atheetham.com/?p=5091

No comments:

Post a Comment