Tuesday, August 3, 2010

தமிழ்த்தென்றல் மின்னிதழில் என் படைப்பு: வெண்பா உரையாடல்

வெண்பா, தெரியாததற்கு முன் இது நமக்கு எதற்கு என்று உங்களைப் போல விளையாட்டாக நினைத்தவன் தான் நானும். இன்று ஏதோ இந்த வெண்பா சுவை கண்டு விலக முடியாமல் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி என்ன இருக்கு இந்த வெண்பாவில், அப்படியே கத்துக்கிட்டு பேசினாலும் யாருக்குப் புரிய போகுது, வெட்டி வேலை அப்படின்னு நினைக்கிறீர்களா. வெண்பா வடிவில் எல்லாத்தையும் சொல்லலாம்ன்றது நான் கத்துக்கிட்ட பிறகும் பல பேர் எழுதிய வெண்பாக்களைப் படித்த பிறகும் புரிந்து கொண்டேன். நாம் பேசும் ஒவ்வொன்றையும் வெண்பா வடிவில் சொல்லனும்னா குறள் வெண்பாவில் ஈசியா சொல்லிட முடியும். இந்த பகுதியில் ஒரு சின்ன வெண்பா உரையாடல் ஏதோ எனக்குத் தெரிந்த இலக்கண அறிவோட எழுதி இருக்கேன். ஒரு குழந்தை பள்ளிக்குச் சென்று வீடு திரும்புகிறது. அக்குழந்தைக்கும் அக்குழந்தையின் தாய்க்கும் நடக்கும் ஒரு சிறு நிகழ்வுதான் இந்த வெண்பா உரையாடல்.


பிரசாத்: “புசிக்க உணவைப் படைத்திடு தாயே

பசியால் தவிக்கும் எனக்கு”


இலட்சுமி: “அதிசயம் என்ன குழந்தாய்; பகர்வாய்

மதியம்நீ உண்டாயா என்று”


பிரசாத்: “தேன்சுவை விஞ்சும் உணவதை நானுமே

வீன்செய்யா(து) தின்றேன்;அம் மா”


இலட்சுமி: "தட்டினில் சூடாய் இருக்குது இட்லியும்;

சட்னிசேர்த்து மிச்சமின்றி உண்”


பிரசாத்: "உண்டு முடித்ததும் அம்மா; விளையாடச்
சென்று வருகிறேன் நான்".

இலட்சுமி: " பாடம் எழுதி முடித்திடு சீக்கிரம்
ஆடலாம் ஆட்டம் பிறகு."

பிரசாத்: " விளையாடி வந்தே எழுதி முடிப்பேன்
பிழையின்றி பாடமதை நான்."

இலட்சுமி:" அப்பா வருமுன்பு ஆடிவிட்டு; நேரமது
தப்பாமல் வீட்டிற்கு வா."


இப்படி எல்லா விஷயத்தையும் வெண்பா வடிவில் சொல்லலாம். இதே போல இன்னுமொரு பதிவுடன் மீண்டும் சந்திக்கிறேன்.

1 comment:

கவிநா... said...

நல்ல முயற்சி அண்ணா... வெண்பான்னு சொன்னாலே தமிழ் பாட புத்தகத்தில் மட்டுமே படிச்ச ஞாபகம்.
ஆனால் இவ்வளவு ஈசியா? நல்லா இருக்கு.

Post a Comment