Tuesday, December 13, 2011

மொபைல் காதல் -1

என்ன தான் பேசுவார்கள் அப்படி

ஹ்ம்ம்ம்...
உழை​த்த காசை உறிஞ்செடுக்கிறான்
இந்​த தொலைதொடர்பு தருபவன்...

உணராமல் உரையாடுகிறார்களே...
இ​வ்வளவு நேரம்.!

ம்ஹூம்... இனி ஆகாது...
ஆரம்பிக்க வேண்டியது தான்...

நாமே அழைத்து விடலாம் இன்று...
அவளி(னி)ன் அழைப்பை எதிர்பாராது.!

துறவு

அழியும் உலக சுகங்கள் விடுத்து
பழியாய் தொடரும் உறவை விடுத்து
நிலையாய் இருக்கும் வழிவகைத் தேட
அறமாய் இருத்தல் துறவு.

இருக்கும் உறவை விலக்கிட வேண்டும்
இனியோர் உறவை தவிர்த்திட வேண்டும்
இரண்டுமே பாங்காய் நடந்தால் கிடைக்கும்
வரமாய்என் வாழ்வில் துறவு.

ஆசை அடக்கல் துறவறம் அன்று;வரும்
சாவைத் தவிர்த்தல் துறவறம் அன்று;பெறும்
வாழ்வை இனிய வரமென எண்ணி;தம்
வாழ்வினை வாழ்தல் துறவு.

இல்லத்தைக் காக்கும் வகையிலா மானுடர்
இல்லத்தை வாட்டி இடுகாடாய் மாற்றிட
இல்லறம் ஆகுமோ நல்லறம் கேட்பீர்நீர்
இல்லையோர்;துன் பம்துற வில்.

உறவில் சுகங்கள் கிடைப்பது உண்மை
உறவால் சுகங்கள் கிடைப்பதும் உண்மை
கிடைக்கும் சுகங்கள் நிலைத்திடல் என்றால்
துறவேச் சரியாம் உணர்.

பார்வையை மாற்றிடச் சொன்னீர் சரிசரி
பார்வையை மாற்றினால் மாறுமோ உண்மையும்
வாழ்க்கையின் இன்பம் நிலையிலை என்பதற்கு
வாழ்ந்திடும் வாழ்க்கையேச் சான்று.

சரியெது என்றும் பிழையெது என்றும்
அனைவர்க்கும் சொல்ல அறிந்தவர் யாரோ
அவரவர் செய்கை சரியாம் அவர்க்கு
தவறொன்றும் இல்லை அதில்.

இச்சையதைக் கொள்ளாதல் நன்றென்று சொல்லியதும்
இச்சைதான் என்று அறியுங்கால் வந்ததுவே
இச்சினால் பிழையும் எனக்கு

வெண்பாக்கள் சில

ஹரியென்றும் நல்ஹரன் என்றும் மனதில்
வரித்தார்கள் நல்லிறை என்றே; மனிதர்
நலம்வாழ இவ்விறை என்க;அவன் பேரில்
கலகங்கள் காண்பது ஏன்?

நம்மைமிஞ்சும் சக்திக்கே நாமமிட்டார் பக்தியினால்
இம்மைமறுமை நீக்கிடவே நல்லிறையென்று ஆக்கிவிட்டார்
உண்மையிஃதை தானுணரா சண்டையிங்கு தான்வளர்க்கும்
தன்மைமக்கள் ஏன்கொண்டார் சொல்.

கேட்டால்தான் நான்வருவேன்; கேட்டால்தான் நான்கொடுப்பேன்;
கேட்டால்தான் தாழ்திறப்பேன்; கேட்டால்தான் வாழ்வளிப்பேன்;
எல்லாமே கேட்டால்தான் என்றாலோ கேட்டதெவர்
பொல்லாத பூமியில் வாழ்வு.


எங்கென்று நாம்பிறப்போம் எங்கென்று நாம்;இறப்போம்
என்றான சங்கதிகள் எங்கிங்கே வாழ்கிறதோ
அங்கேதான் வாழ்கின்றான் ஆண்டவனும் சூட்சமமாய்
அங்கவ(த)னைத் தேடி அறி.


சட்டைசெயும் சொந்தமெலாம் பட்டினியால் வாடிநிற்க
பட்டணத்தில் வீடுஒன்று எட்டடுக்கில் கட்டிவைத்து
சட்டெனவே செத்துவிட்டால் சூழவரும் சொந்தமதில்
சொட்டுகண்ணீர் யார்விடுவார் சொல்


உள்ளத்தில் வெள்ளமென பொங்கிவரும் உள்ளெழுவை;
சொல்லிவிட; சொல்லியதை கேட்டமட்டில் உள்ளிழுக்க;
சொல்லாக்கி ஆக்கியதை நல்லெழுத்தாய் வாரிசுக்கும்
சொத்தாக்கி வைத்தார்; மொழி.

சினிமா - மூன்று மணி நேர பொழுதுபோக்கு

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம். நமது வேலையின் மனகுழப்பங்களில் இருந்தும், இயந்திரத்தனமான வாழ்வின் இறுக்கத்திலிருந்தும் விடுபட நமக்கு கிடைக்கும் ஒரு சிறு இடைவேளை. அவ்வளவே. அதனைச் சரியாக புரிந்துகொள்ளாமல் சினிமாவை வாழ்வின் எதார்த்தங்களோடு எதற்காக நாம் குழப்பிக் கொள்கிறோம் எனப் புரியவில்லை

சினிமா என்பது எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது என்பதை நாம் எப்பொழுது புரிந்து கொள்ளப் போகிறோம். ஏன் சினிமா என்பதை, நாம் ஒரு மதத்தைப் போல, ஒரு அரசியல்கட்சியைப் போல மக்களில் மாற்றத்தை ஒரு புரட்சியை உண்டாக்கப் பிறந்தது என்று கருதுகிறோம் ???
நான் சினிமாவைக் குறை கூறவில்லை. சினிமா என்பதும் ஒரு தொழில். ஒரு மளிகைக் கடைக்காரன் தனது மளிகை பொருட்களை விற்க செய்யும் தந்திரங்களைப் போல், ஒரு ஜவுளி கடைக்காரன் தனது துணிகள் விற்க செய்யும் தந்திரம் போல் சினிமாவை வியாபாரம் செய்பவர்களும் செய்யத்தான் செய்வார்கள். அது அவர்களின் தவறு கிடையாது.

சினிமாவை நிஜ வாழ்க்கையோடு காட்சிக்கு காட்சி ஒப்பிட்டுப் பார்ப்பதை நாம் எப்பொழுது தவிர்க்கப் போகிறோம். சினிமா என்பது நிஜ வாழ்க்கையின் சில பிம்பங்களை ஒரு சில காட்சிகளில் காட்டியிருக்கிறது,. இனியும் காட்டும். ஆனால் ஒரு சில நிஜ வாழ்க்கை பிம்ப காட்சிகளைக் கொண்ட படம் என்பதை மறந்து மொத்த படமும் நிஜ வாழ்க்கை என நம்புதல் அசட்டுத்தனமானது என்பதை எப்பொழுது நாம் உணரப் போகிறோம்.

உண்மையில் சொல்லப் போனால், சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றில், சினிமாவால் மக்கள் மனதில் ஏற்பட்ட எண்ணங்கள் யாது. மக்களுக்கு உதவி செய்யும் கதாநாயகனைப் பார்த்து சக மனிதனுக்கு உதவி செய்த ரசிகனும் உண்டு. கதாநாயகனின் சில தீய பழக்கங்களைக் கண்டு தன்னை தீய பழக்கத்திற்கு அடிமையாக்கிக் கொண்டவனும் உண்டு என்று பக்கத்திற்கு ஒருவராய் வாதிட்டுக் கொள்ள(ல்ல)லாம்.

ஆனால், உண்மை என்ன? ஒரு மனிதன் தனது உள்ளார்ந்த எண்ணத்தை வெளிப்படுத்த, நல்லதோ தீயதோ அடுத்து வரும் விளைவுகளுக்கு யார் மேலாவது பழி சுமத்தி தான் தப்பித்துக் கொள்ள சினிமாவை ஒரு கருவியாக்கவே, சினிமாவைப் பார்த்து இதைச் செய்ததாகச் சொல்லும் ஒவ்வொரு மனிதனும் விரும்பினான்.

தனது நிஜ வாழ்க்கையின் வேதனைகளை அப்புறப்படுத்தி விட்டு, ஒரு மூன்று மணி நேரம் நம்மை நாம் மறந்து, மகிழ்ந்து விட்டு மீண்டும் எதார்த்தத்திற்குத் திரும்ப வேண்டிய நம்மில் பலர், அந்த சினிமாவைப் பார்க்கும் போதே ஒவ்வொரு காட்சியையும் எதார்த்தத்தோடு ஒப்பிட்டு பார்த்து, அந்த படத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்துக் கொண்டு மூன்று மணி நேர மகிழ்வான தருணத்தையும், தன்னை, தன் மனதை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்வதைப் பார்க்கும் போது வருத்தமே மிஞ்சுகிறது.

இறுதியாக, சினிமாவைப் பாருங்கள். கடந்த, நிகழ்கால எதார்த்த வாழ்க்கை சில காட்சிகளாக ஒரு படத்தில் கட்டமைக்கப்பட்டிருந்தால் அதைப் பற்றி உண்மையான விஷயங்களை படித்தோ, கேட்டோ தெரிந்து கொள்ளுங்கள். அதை விடுத்து, ஒரு சில காட்சிகளை மட்டுமே காண்பித்து விளம்பரத்தில் ஏமாற்றி என்னை பார்க்கச் செய்து விட்டான் என்ற புலம்பல்களைத் தவிருங்கள். இதுவும், ஜவுளிக் கடையில் இரண்டு பேன்டு வாங்கினால் ஒரு பேன்ட் இலவசம் என்று வெளியே அறிவிப்பு எழுதி விட்டு உள் நுழைகையில் ஆயிரத்திற்கும் மேலாக இரண்டு பேண்டு வாங்கினால் மட்டுமே ஒரு பேன்ட் இலவசம் என்று சொல்லும் வியாபார தந்திரம் போன்றது தான் என உணருங்கள். முடிந்தால் சினிமாவை சினிமாவாக மட்டும் பார்த்து விட்டு, வெளிவந்து தத்தமது வேலையைப் பாருங்கள்.

எது அழகு

அழகு இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே உள்ளத்தில் ஏதோ செய்கிறது தானே. அழகென்றால் ஏனோ, ஆண்கள் மனதில் தான் கண்டதில் தன்னைக் கவர்ந்த பெண்ணும், பெண்கள் மனதில் தான் கண்டதில் தன்னைக் கவர்ந்த ஆணுமே முதலில் வருகிறார்கள்.

ஒருவரைப் பார்த்ததுமே சிலாகிக்க வைக்கும் விஷயம் ஒன்னு இருக்குன்னா அது அழகு தானுங்க... என்ன தான் அழகு நிரந்தரமல்ல அப்படின்னு பேருக்கு பேசிக்கிட்டாலும் அழகை ரசிக்காம இருக்க முடியறதில்லைன்றது தான் நிஜம்...

பூவின் அழகு ஒரு நாள். இளமை அழகு முதுமை வரை, வசந்தத்தின் அழகு கோடை வரை இப்படின்னு அழகுக்கு முற்றுப்புள்ளி இருக்குதுன்னாலும் இருக்கும் வரை அழகை ரசிக்காம இருக்க முடியாதில்லை...

ஆனால், நாம பார்க்கப் போறது இந்த அழகைப் பத்தி இல்லைங்க. நாம பார்க்கப் போற அழகு, எது எது எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது. எது எது எப்படி இருக்கணும்னு சொல்ற தகுதி நமக்கேது.

காரியாசன் இயற்றிய சிறுபஞ்சமூலத்தைச் சும்மா புரட்டிட்டு இருக்கும்போது எது அழகுன்னு ஒரு பாடல் படிச்சேன். நீங்களுந்தான் தெரிஞ்சுக்குங்களேன்...

படைதனக்கு யானை வனப்பாகும்; பெண்ணின்
இடைதனக்கு நுண்மை வனப்பாம்; நடைதனக்குக்
கோடா மொழிவனப்பு; கோற்கதுவே; சேவகற்கு
வாடாத வன்கண் வனப்பு

என்ன? யார்யார்க்கு எது அழகுன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா... இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இன்னுமொரு பாட்டோட சந்திக்கிறேன்...